குர்பானி இறைச்சியை எவ்வாறு பங்கு பிரிப்பது?
குர்பானி இறைச்சியை சமமாக மூன்று பங்குகளாகப் பிரிக்க வேண்டும் எனவும், அதில் ஒரு பகுதியை தமக்காக வைத்துக்கொண்டு, இரண்டாவது பகுதியை உறவினர்களுக்கு பகிர்ந்தளித்துவிட்டு முன்றாவது பகுதியை ஏழைகளுக்கு தர்மம் செய்ய வேண்டும் என்ற பொதுவான கருத்து பல முஸ்லிம்களிடம் காணப்படுகின்றது.இதை நடைமுறைப்படுத்தியும் வருகின்றனர். இதற்கு குர்ஆனிலோ அல்லது சுன்னாவிலோ எவ்வித ஆதாரமும் இல்லை!
நமக்குத் தேவையானதை எடுத்துக்கொண்டு மீதியை உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும் பகிர்நதளிக்கலாம். இதில் வரையறை இல்லையெனினும் குர்பானி இறைச்சியில் உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும் பங்கிருப்பதை திருமறையும் நபிமொழிகளும் தெளிவுபடுத்துவதால் முழு இறைச்சியையும் குர்பானி கொடுப்பவரே வைத்துக்கொள்ளாமல் உறவுகளுக்கும் ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு தாமும் வைத்துக் கொள்ளலாம்.
அல்லாஹ் கூறுகின்றான்:
“இன்னும் (குர்பானிக்கான) ஒட்டகங்கள்; அவற்றை உங்களுக்காக அல்லாஹ்வின் அடையாளங்களிலிருந்தும் நாம் ஆக்கியிருக்கிறோம்; உங்களுக்கு அவற்றில் மிக்க நன்மை உள்ளது; எனவே (அவை உரிய முறையில்) நிற்கும் போது அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைச் சொல்(லி குர்பான் செய்)வீர்களாக; பிறகு, அவை தங்கள் பக்கங்களின் மீது சாய்ந்து கீழே விழுந்(து உயிர் நீத்)த பின் அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; (வறுமையிலும் கையேந்தாமல் இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், இரப்போருக்கும் உண்ணக் கொடுங்கள் – இவ்விதமாகவே, நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறோம்.”(அல்-குர்ஆன் 22:36)
மிக அதிகமான இறைச்சியை தர்மம் செய்யலாம் என்பதை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது:
“…. பின்னர் மினாவிலுள்ள பலியிடும் இடத்திற்குச் சென்று, அறுபத்து மூன்று ஒட்டகங்களைத் தமது கையால் அறுத்துப் பலியிட்டார்கள். பிறகு எஞ்சிய ஒட்டகங்களை அலீ (ரலி) அவர்களிடம் கொடுத்(துப் பலியிடச் செய்)தார்கள். தமது பலி ஒட்டகங்களிலும் அலீ (ரலி) அவர்களை நபியவர்கள் கூட்டாக்கிக்கொண்டார்கள்.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உத்தரவிட, அறுக்கப்பட்ட ஒவ்வோர் ஒட்டகத்திலிருந்தும் இறைச்சித் துண்டு ஒன்று கொண்டுவரப்பட்டு, ஒரு பாத்திரத்திலிட்டுச் சமைக்கப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அலீ (ரலி) அவர்களும் அதன் இறைச்சியை உண்டார்கள்; குழம்பைப் பருகினார்கள். “
(நீண்ட ஹதீஸின் சுருக்கம்)
அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி) வழியாக முஹம்மது பின் அலீ பின் அல் ஹுஸைன் (ரஹ்); ஆதாரம்: முஸ்லிம் 3137)
மேற்கண்ட ஹதீஸில், ஹஜ்ஜின் போது நபி (ஸல்) அவர்கள் தங்களுடைய 100 ஒட்டகத்தின் குர்பானி இறைச்சியில் ஒவ்வொரு ஒட்டகத்தின் ஒரு துண்டை மட்டும் எடுத்துக்கொண்டு மீதியை மற்றவர்களுக்குப் பகிர்தளித்ததை விளங்க முடிகின்றது.
மேலும், குர்பானி கொடுப்பவர் தன்னுடைய குர்பானி பிராணியின் இறைச்சியை உண்பதுவும் நபிவழி என்பதை இந்த ஹதீஸ் உணர்த்துகின்றது.