குர்ஆன் பாதுகாக்கப்பட்டது எப்படி?
திருக்குர்ஆனை நாமே அருளினோம்; அதை நாமே பாதுகாப்போம் என்று அல்லாஹ் கூறுவதாக 15:9 வசனம் கூறுகிறது. திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்டது குறித்து 143வது குறிப்பில் விளக்கியுள்ளோம்.
இதைச் சரியாகப் புரிந்து கொள்ளாத மேற்கத்திய உலகமும், கிறித்தவ மிஷனரிகளும் குர்ஆனுடைய எழுத்துக்களில் உள்ள சில மாற்றங்களை எடுத்துக் காட்டி, குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
குர்ஆனை நாமே பாதுகாப்போம் என்று அல்லாஹ் சொல்லி இருப்பதால் அதில் எழுத்துப் பிழைகள் இருக்கக் கூடாது. எழுத்துப் பிழைகள் இருந்தால் குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்று ஆகும். குர்ஆனை ஆய்வு செய்யும்போது பல சொற்கள் பிழையாக எழுதப்பட்டுள்ளதைக் காண்கிறோம். குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்பதற்கு இதுவே ஆதாரம் என்று அவர்கள் கூறுகின்றனர்.
திருக்குர்ஆனின் எழுத்துக்களில் நெடில் தேவையில்லாத இடங்களில் நெடில்குறி எழுதப்பட்டுள்ளது. ஒரு எழுத்துக்குப் பதிலாக அதற்கு நெருக்கமான உச்சரிப்புடைய வேறொரு எழுத்து இடம் பெற்றுள்ளது. இது போன்றவற்றை எடுத்துக் காட்டி, குர்ஆனில் பிழை உள்ளது, குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்று கூறுகின்றனர்.
இத்தகைய தவறான பிரச்சாரத்திற்கு இவ்வசனம் (29:49) தெளிவாகப் பதிலளிக்கின்றது.
திருக்குர்ஆனை அல்லாஹ் எழுதி, புத்தகமாகவோ, ஏடுகளாகவோ கொடுத்திருந்தால் அதில் எழுத்துப் பிழைகள் இருக்கக் கூடாது என்பது சரி தான்.
அல்லது ஒலி வடிவில் அருளப்பட்டதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் கைப்பட எழுதி, அதில் பிழை ஏற்பட்டு இருந்தால் அப்போது அதை விமர்சனம் செய்யலாம்.
ஆனால் திருக்குர்ஆன் எழுத்து வடிவமாக அருளப்படவில்லை. ஒலி வடிவில் அதாவது ஓசை வடிவில் தான் குர்ஆன் அருளப்பட்டது.
ஒவ்வொரு வசனத்தையும் ஜிப்ரீல் எனும் வானவர் வந்து கூறுவார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைக் கேட்டு மனனம் செய்து கொள்வார்கள். தமது தோழர்களையும் மனனம் செய்ய வைப்பார்கள்.
பின்னர், பாதுகாப்புக் காரணத்திற்காக தமது தோழர்களில் எழுதத் தெரிந்தவர்களை அழைத்து, தமக்கு அருளப்பட்ட வசனங்களை எழுதச் செய்வார்கள்.
எழுத்து வடிவில் ஆக்கியது மனிதர்களின் செயல் என்பதால் அதில் பிழை ஏற்படுவது இறைவேதத்தில் ஏற்படும் பிழையாக ஆகாது.
எனவே தான் ‘கல்வியாளர்களின் உள்ளங்களில் திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்டுள்ளது’ என்று இவ்வசனம் கூறுகின்றது.
உதாரணமாக, 37:68 வசனத்தில் ‘லா இலல் ஜஹீம்’ என்று எழுதப்பட்டுள்ளது. இந்த இடத்தில் ‘ல இலல் ஜஹீம்’ என்று குறிலாகத்தான் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
இந்த இடத்தில் நெடிலுக்கான குறி எழுதப்பட்டிருந்தாலும், உலக முஸ்லிம்கள் அனைவரும் இதை, ‘ல இலல் ஜஹீம்’ என்று குறிலாகத்தான் வாசிக்கிறார்கள். இப்படி மனிதர்கள் பிழையாக எழுதிய எல்லா இடங்களையும் எல்லா முஸ்லிம்களும் சரியாகவே வாசிக்கிறார்கள். வாழையடி வாழியாக முஸ்லிம்கள் தமது உள்ளங்களில் திருக்குர்ஆனை மனனம் செய்து பாதுகாத்து வருவதால் எழுத்துப் பிழைகளையும் வென்று குர்ஆன் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
குர்ஆனுடைய ஓசையும் உச்சரிப்பும் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதற்கு இதுவே சான்று.