நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தில்…
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அவ்வப்போது திருக்குர்ஆன் அருளப்பட்டவுடன் அதை அவர்கள் தமது உள்ளத்தில் பதிவு செய்து கொள்வார்கள். இவ்வாறு பதிவு செய்து கொள்வதற்கு அவர்கள் ஆரம்பக் கட்டத்தில் மிகுந்த சிரத்தை எடுக்கலானார்கள். அது தேவையில்லை என்று திருக்குர்ஆன் மூலமாகவே அவர்களுக்குச் சொல்லப்பட்டது.
“திரும்பத் திரும்ப ஓதி மனனம் செய்வதற்காக நீர் முயற்சிக்காதீர். அதை உமது உள்ளத்திலே ஒன்று சேர்ப்பது நமது பொறுப்பு” என்று திருக்குர்ஆன் கூறியது.
திருக்குர்ஆன் 75:16-19, 20:114
இன்னொரு வசனத்தில் (87:6) “உமக்கு நாம் ஓதிக் காட்டுவோம்; நீர் மறக்க மாட்டீர்” எனவும் அல்லாஹ் உத்தரவாதம் அளித்தான்.
எனவே ஜிப்ரீல் என்ற வானவர் அதிகமான வசனங்களைக் கூறினாலும் ஒலிநாடாவில் பதிவது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தில் அப்படியே அவை பதிவாகி விடும்.
இறைவன் தனது தூதராக அவர்களை நியமித்ததால் அவர்களுக்கு இந்தச் சிறப்பான தகுதியை வழங்கியிருந்தான். எனவே இறைவனிடமிருந்து வந்த செய்திகளில் எந்த ஒன்றையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறதியாக விட்டிருப்பார்கள் என்று கருதவே முடியாது.
திருக்குர்ஆன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தில் இவ்வாறு பாதுகாக்கப்பட்டது.