குர்ஆன் ஓதி ஹதியா செய்தல் என்ற செயலை மார்க்கம் காட்டித் தரவில்லை. இது பிற்காலத்தில் உண்டாக்கிய பித்அத்.
இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதி அனுப்பி வைப்பதற்கு மார்க்கத்தில் ஆதாரம் இல்லை. இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதுவது நன்மை என்றிருந்தால் அதை நிச்சயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டித் தந்திருப்பார்கள்.
நபி (ஸல்) அவர்களின் மனைவியார் கதீஜா (ரலி) இறந்த போதோ, அல்லது மகனார் இப்ராஹீம் (ரலி) இறந்த போதோ அவர்களுக்காக குர்ஆன் ஓதவில்லை. எத்தனையோ நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இறந்துள்ளார்கள். அவர்களுக்காக நபி (ஸல்) அவர்கள் குர்ஆன் ஓதுமாறு கட்டளையிட்டதாகவோ அல்லது நபித்தோழர்கள் ஓத அதை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்ததாகவோ ஆதாரப்பூர்வமான ஒரு ஹதீஸ் கூட இல்லை.
நம்முடைய அங்கீகாரம் இல்லாத ஒரு செயலை (மார்க்கமெனக் கருதி) செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் : முஸ்லிம் 3540
“(மார்க்கத்தில்) புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொன்றும் பித்அத் (நூதனப் பழக்கம்) ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு போய்ச் சேர்க்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி),
நூல் : நஸயீ 1560
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அங்கீகாரம் இன்றி நாமாக ஒரு அமலைச் செய்தால் அது நரகத்திற்குக் கொண்டு போய் நம்மைச் சேர்த்து விடும். எனவே இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதுவதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை.
இறந்தவர்களுக்காக ஜனாஸா தொழுகை நடத்துவது, பாவமன்னிப்புத் தேடுவது ஆகிய காரியங்கள் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளன.
அவர்களுக்குப் பின் வந்தோர் “எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! எங்கள் உள்ளங்களில் நம்பிக்கை கொண்டோர் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடாதே! நீ இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்” என்று கூறுகின்றனர்.
திருக்குர்ஆன் 59:10
——————-
ஏகத்துவம்