குர்ஆனை முடிக்கும் துஆ
தற்காலத்தில் குர்ஆனை முடிக்கின்ற நீண்ட பிரார்த்தனையையும் குர்ஆனின் இறுதியில் எழுதி வைத்திருக்கிறார்கள். நாளடைவில் இது குர்ஆனோடு கலந்து விடும் அபாயம் இருக்கிறது. இதில் ஆழமான கருத்துக்களோ, அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களோ ஏதுமில்லை. இந்தப் பிரார்த்தனையை ஓத வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை.
மேலும் இதன் பொருளை அறிந்து கொண்டால் இப்பிரார்த்தனை குர்ஆனுடன் விளையாடும் வகையில் அமைந்துள்ளதை யாரும் அறியலாம்.
உதாரணமாக ‘கதவு’ என்ற சொல்லை நாம் கூறுகிறோம். கதவு என்பதில் ‘க’ வைக் கூறியதற்காக கஞ்சியையும், ‘த’வைக் கூறியதற்காக தண்ணீரையும், ‘உ’ வைக் கூறியதற்காக உணவையும் ‘தா’ என்று கூறினால் அது எத்தகைய தரத்தில் அமையுமோ அது போன்ற தரத்தில் தான் இந்தப் பிரார்த்தனையும் உள்ளது.
‘ஜீம்’ என்ற எழுத்தை ஓதியதால் ஜமால் (அழகை) தா!
‘ஹா’ என்ற எழுத்தை ஓதியதால் ‘ஹிக்மத்’ (அறிவு) தா.
என்று ஒவ்வொரு எழுத்தையும் குறிப்பிட்டு அந்த எழுத்தில் துவங்கும் வேறொரு வார்த்தையின் பொருளை அல்லாஹ்விடம் கேட்கும் வகையில் இந்தப் பிரார்த்தனை அமைந்துள்ளது.
ஜீம் என்ற எழுத்து ஜமால் என்பதற்கு மட்டும் முதல் எழுத்தாக இல்லை. ஜஹ்ல் (மடமை) என்பதற்கும் முதல் எழுத்தாகவுள்ளது. மேலும் ‘ஜீம்’ என்பதற்கு ஜமாலைத்தான் தர வேண்டும் என்று அல்லாஹ்விடம் கேட்பது அதிகப் பிரசங்கித்தனமாகும். எனவே இந்த துஆவை அச்சிடுவது மட்டுமின்றி அதை வாசிப்பது பாவமாகவும், குர்ஆனுடன் விளையாடியதாகவும் அமையும்.