ஸஜ்தாவின் அடையாளங்கள்
ஸஜ்தாவைப் பற்றிக் கூறுகின்ற வசனங்கள் மிக அதிக அளவில் இருந்தும் 14 வசனங்களின் ஓரங்களில் ஸஜ்தா என்று அச்சிட்டுள்ளனர்.
எந்தெந்த வசனங்களை ஓதும்போது ஸஜ்தா செய்ய வேண்டும் என்பது பற்றி இங்கே நாம் விவாதிக்கவில்லை.
(ஸஜ்தா வசனங்கள் எவை என்பதை ‘விளக்கங்கள்’ என்ற தலைப்பில் 396வது குறிப்பில் தக்க சான்றுகளுடன் விளக்கியுள்ளோம்.)
திருக்குர்ஆனின் மூலப் பிரதியில் இல்லாத இத்தகைய சொற்களை ஓரங்களில் அச்சிட்டிருக்கக் கூடாது என்பதைத்தான் இங்கே நாம் சுட்டிக் காட்டுகிறோம்.
உதாரணமாக, 22வது அத்தியாயமான அல்ஹஜ் அத்தியாயத்தில் 77வது வசனத்தின் ஓரத்தில் அரபியில் ஒரு வாக்கியத்தை அச்சிட்டுள்ளனர். “இது ஷாபி இமாமின் கருத்துப்படி ஸஜ்தாச் செய்ய வேண்டிய வசனம்” என்பது இதன் கருத்து.
ஷாபி இமாமுடைய கருத்துப்படி ஸஜ்தா செய்ய வேண்டும் என்ற மனித அபிப்பிராயத்தை ஏன் குர்ஆனுடன் அச்சிட வேண்டும் என்பது சிந்திக்கத்தக்க கேள்வியாகும்.
ஷாபி இமாமுடைய காலத்துக்குப் பிறகு தான் ஓரங்களில் தேவையற்றவைகளை இவ்வாறு அச்சிடும் வழக்கம் தோன்றியது என்பதற்கு இதைச் சான்றாகக் கொள்ளலாம்.