அத்தியாயங்களை வரிசைப்படுத்துதல்
ஹப்ஸா (ரலி) அவர்களிடம் இருந்த அந்த ஒரே மூலப் பிரதியைப் பெற்று அதைப்போல் பல பிரதிகள் தயாரிக்கும் பணியை உஸ்மான் (ரலி) அவர்கள் செய்யலானார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் தயாரித்த மூலப் பிரதியில் ஒவ்வொரு அத்தியாயமும் முழுமைப்படுத்தப்பட்டு இருந்தாலும், இது முதல் அத்தியாயம், இது இரண்டாவது அத்தியாயம் என்று அத்தியாயங்கள் வரிசைப்படுத்தப்படாமல் இருந்தன.
உதாரணமாக, பல பக்கங்களைக் கொண்ட தனித்தனியான ஐம்பது கட்டுரைகளை தனித்தனியாகச் சுருட்டி ஒரு பெட்டியில் போட்டு வைத்தால், எது முதலில் வர வேண்டும், எது இரண்டாவதாக வரவேண்டும் என்று அறிய முடியாது. ஆனால் அந்தக் கட்டுரைகளை ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கி வைத்தால் எது முதலாவது, எது இரண்டாவது என்ற வரிசை அமைப்பை அறிய முடியும்.
வரிசைப்படுத்தி அடுக்கி வைக்கும் இந்தப் பணியைத்தான் உஸ்மான் (ரலி) அவர்கள் செய்தார்கள். அத்தியாயங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் இப்போது இருக்கும் வரிசைப்படி அமைத்தார்கள் என்று சிலர் கூறியுள்ளனர். இக்கூற்று தவறாகும்.
ஆயிஷா (ரலி) அவர்களிடம் இராக் நாட்டைச் சேர்ந்த ஒருவர் வந்து, “உங்கள் குர்ஆன் பிரதியை எனக்குக் காட்டுங்கள்” என்றார். ஏன் என்று ஆயிஷா (ரலி) கேட்டார்கள். “குர்ஆன் அத்தியாயங்களை சரியான வரிசைப்படி அமைத்துக் கொள்வதற்காக” என்று அவர் கூறினார். அதற்கு ஆயிஷா (ரலி), “எதை முன்னால் ஓதினாலும் அதனால் உனக்கு எந்தக் கேடும் இல்லை” என்று குறிப்பிட்டார்கள்.
[நூல்: புகாரி 4993]
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகையில், பகரா (எனும் 2வது) அத்தியாயத்தையும், பின்னர் நிஸா (எனும் 4வது) அத்தியாயத்தையும், பின்னர் ஆலு இம்ரான் (எனும் 3வது) அத்தியாயத்தையும் ஓதினார்கள்.
[நூல்: முஸ்லிம் 1421]
உஸ்மான் (ரலி) அவர்களால் வரிசைப்படுத்தப்பட்டு, நம் கைகளில் இருக்கும் குர்ஆன் பிரதிகளில் உள்ள வரிசைக்கு மாற்றமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதியுள்ளார்கள் என்பதை இந்த ஹதீஸில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
உஸ்மான் (ரலி) அவர்கள், தம்முடைய காலத்தில் இருந்த நபித்தோழர்களின் ஆலோசனைகளைப் பெற்று தமக்குத் தோன்றிய நியாயங்களின் அடிப்படையில் குர்ஆனில் சிறப்பித்துக் கூறப்படும் அத்தியாயம் என்பதாலும், தொழுகையில் ஒவ்வொரு ரக்அத்திலும் ஓதப்படும் அத்தியாயம் என்பதாலும் ‘அல்ஃபாத்திஹா’ என்ற அத்தியாயத்தை முதல் அத்தியாயமாக அமைத்தார்கள். “இதை நீங்கள் முதல் அத்தியாயமாக வைக்க வேண்டும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை.
அதன்பிறகு குர்ஆனுடைய அளவை அடிப்படையாகக் கொண்டு பெரிய அத்தியாயத்தை முதலாவதாகவும், அதற்கடுத்த அளவிலான அத்தியாயத்தை அதற்கடுத்ததாகவும், அமைத்து குர்ஆனுடைய அத்தியாயங்களை உஸ்மான் (ரலி) வரிசைப்படுத்தினார்கள்.
சில இடங்களில் வேறு காரணங்களைக் கருத்தில் கொண்டு சிறிய அத்தியாயங்களை முன்னாலும், பெரிய அத்தியாயங்களைப் பின்னாலும் வைத்தார்கள். இந்தக் காரணங்கள் நமக்குத் தெளிவுபடுத்தப்படவில்லை. ஆனால் இதை உஸ்மான் (ரலி) அவர்கள் தான் வரிசைப்படுத்தினார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
ஒரு ஒழுங்குக்குள் இருந்தால்தான் குழப்பம் ஏற்படாது என்பதற்காக உஸ்மான் (ரலி) செய்த அந்த ஏற்பாட்டை உலக முஸ்லிம் சமுதாயம் எந்தக் கருத்து வேறுபாடுமின்றி ஒப்புக் கொண்டு விட்டது.
இந்த வரிசைப்படுத்துதல் இறைவன் புறத்திலிருந்து சொல்லப்பட்டதல்ல. இறைத்தூதரின் வழிகாட்டுதலின்படியும் அமைக்கப்பட்டது அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அலீ (ரலி) அவர்கள் தம்மிடம் வைத்திருந்த பிரதியில் திருக்குர்ஆன் எந்த வரிசையில் அருளப்பட்டதோ அந்த வரிசையில் எழுதி வைத்திருந்தார்கள். முதல் அத்தியாயமாக 96வது அத்தியாயம் அவரது ஏட்டில் பதிவு செய்யப்பட்டிருந்தது. மக்காவில் அருளப்பட்ட அத்தியாயங்களை முதலில் எழுதிவிட்டு, பிறகு மதீனாவில் அருளப்பட்ட அத்தியாயங்களை அவர் எழுதி வைத்திருந்தார்.
அதே போல் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் முதல் அத்தியாயமாக ‘பகரா’ அத்தியாயத்தை எழுதியிருந்தார்கள். அது குர்ஆனில் தற்போது இரண்டாவது அத்தியாயமாக இருக்கிறது. இப்பொழுதுள்ள வரிசைக்கும் அவரது வரிசைக்கும் இடையே இதுபோன்று ஏராளமான மாற்றங்கள் இருந்தன.
உபை இப்னு கஅப் என்ற நபித்தோழர் 5வது அத்தியாயமாக இருக்கும் அல்மாயிதாவை 7வது அத்தியாயமாகவும், 4வது அத்தியாயமான அன்னிஸா அத்தியாயத்தை 3வது அத்தியாயமாகவும், 3வது அத்தியாயமான ஆலுஇம்ரான் அத்தியாயத்தை 4வது அத்தியாயமாகவும், 6வது அத்தியாயமான அல்அன்ஆம் அத்தியாயத்தை 5வது அத்தியாயமாகவும், 7வது அத்தியாயமான அல் அஃராஃப் அத்தியாயத்தை 6வது அத்தியாயமாகவும் எழுதி வைத்திருந்தார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அத்தியாயங்களை வரிசைப்படுத்தியிருந்தால் பல நபித்தோழர்கள் பல வரிசைப்படி தங்களது ஏடுகளை அமைத்திருக்க மாட்டார்கள் என்பது உறுதி.
மற்றும் சிலர் அபூபக்ர் (ரலி) அவர்கள் தொகுத்த பிரதியில் அத்தியாயங்கள் வரிசைப்படுத்தப்பட்டதாகக் கூறுகின்றனர். அதற்கு எந்தச் சான்றுமில்லை.
எனவே உஸ்மான் (ரலி) அவர்கள் தான் அத்தியாயங்களை வரிசைப்படுத்தினார்கள் என்று ஹாகிம் போன்ற அறிஞர்கள் கூறுவதுதான் தக்க காரணங்களுடனும், போதுமான சான்றுகளுடனும் அமைந்துள்ளது.