குனூத் நாஸிலா எனும் சோதனைக் கால பிரார்த்தனை

இஸ்லாமிய சமுதாயம் கடும் சோதனைகளுக்கு உள்ளாகும் போது அவர்களின் இன்னல்கள் நீங்குவதற்காக முயற்சி செய்வதும், அவர்களின் துன்பங்கள் அகல இறைவனிடம் பிரார்த்திப்பதும் முஸ்லிம்கள் மீது கடமையாகும்.

குனூத் நாஸிலாவின் நோக்கம்

குனூத்துன் நாஸிலா என்பது சோதனையான காலகட்டங்களில் முஸ்லிம்களுக்கு இறையுதவியை வேண்டியும், எதிரிகளுக்கு எதிராக இறைவனின் சாபத்தை வேண்டியும் நபி (ஸல்) அவர்கள் ஓதிய குனூத் ஆகும். இதனை நபி (ஸல்) அவர்கள் சோதனைகள் ஏற்படும் காலகட்டங்களில்  ஓதியுள்ளார்கள்.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையில் ருகூவிற்குப் பின்னால் ஒரு மாத காலம் குனூத் (சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதினார்கள். அதில் ரிஅல், தக்வான் ஆகிய குலத்தாருக்கு எதிராகப் பிரார்த்தித்தார்கள். மேலும் உஸய்யா குலத்தார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்து விட்டார்கள்என்றும் கூறினார்கள்

நூல்: முஸ்லிம் 1201

நபி (ஸல்) அவர்கள் ருகூவிற்குப் பிறகு ஒரு மாதம் தான் குனூத் ஓதினார்கள். நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை மனனம் செய்த சுமார் எழுபது நபர்களை இணை வைப்பவர்களில் ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். இவர்கள் அந்த முஷ்ரிகீன்களை விடக் குறைந்த எண்ணிக்கையினராக இருந்தனர். அவர்களுக்கும், நபி (ஸல்) அவர்களுக்குமிடையே ஒரு உடன்படிக்கையும் இருந்தது. (அந்த முஷ்ரிக்கீன்கள் எழுபது நபர்களையும் கொன்று விட்டனர்) அப்போது நபி (ஸல்) அவர்கள் முஷ்ரிகீன்களுக்கு எதிராக ஒரு மாதம் குனூத் ஓதினார்கள்,

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 1002

குர்ஆனை மனனம் செய்த எழுபது ஸஹபாக்களை, இணை வைப்பாளர்கள் கொன்ற காரணத்தினால் அவர்களைச் சபித்து, நபியவர்கள் கடமையான தொழுகைகளில் ஒரு மாத காலம் குனூத் ஓதியுள்ளார்கள்.

நபியவர்கள் ஒருமாத காலம் ஓதினார்கள் என்பது ஒரு செய்தியாகத்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு மாத காலம் ஓத வேண்டும் என்று நபியவர்கள் நிர்ணயித்த எல்லையாக, கட்டளையாகக் குறிப்பிடப்படவில்லை.

எனவே பாதிப்பின் தாக்கம் மனதில் இருந்து நீங்கும் கால அளவிற்கு நாம் இந்த சோதனைக் கால குனூத்தினை ஓதிக் கொள்ளலாம்.

கடமையான தொழுகை அனைத்திலும் சோதனைக்கால குனூத் ஓதலாம்

சோதனையான கால கட்டங்களில் ஓதக்கூடிய இந்தக் குனூத்தை நபியவர்கள் சுப்ஹுத் தொழுகையில் மட்டுமல்லாது அனைத்து கடமையான தொழுகைகளிலும் ஓதியுள்ளார்கள்.

கடமையான தொழுகைகளில் கடைசி ரக்அத்தில் ருகூவிற்குப் பிறகு ஓதியுள்ளார்கள்.

இதனைப் பின்வரும் ஹதீஸ்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: மஃரிப், ஃபஜ்ர் ஆகிய தொழுகைகளில் குனூத் ஓதுதல் (நபியவர்களின் காலத்தில்) இருந்தது.

நூல்: புகாரி 798, 1004

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையிலும், மஃக்ரிப் தொழுகையிலும் குனூத் (சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதினார்கள்.

அறிவிப்பவர்: பராஉ பின் ஆசிப் (ரலி)

நூல்: முஸ்லிம் 1207, 1208

அபூசலமா பின் அப்திர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூஹுரைரா (ரலி) அவர்கள், நான் நபி (ஸல்) அவர்கள் தொழுவித்தது போன்றே உங்களுக்குத் தொழுவிக்கிறேன் என்று கூறுவார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள் லுஹ்ர், இஷா, சுப்ஹு ஆகிய தொழுகைகளின் கடைசி ரக்அத்களில் (ருகூஉவிலிருந்து எழுந்து) சமி அல்லாஹு லி-மன் ஹமிதஹ்’ (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) என்று கூறிய பிறகு குனூத் (சிறப்புப் பிரார்த்தனை) ஓதுவார்கள். அதில்  இறை நம்பிக்கையாளர்களுக்காகப் பிரார்த்திப்பார்கள். (கொடுஞ்செயல் புரிந்த குறைஷி) இறைமறுப்பாளர்களைச் சபிப்பார்கள்.

நூல்: புகாரி 797

சுருக்கமாக ஓத வேண்டும்

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையில் (சோதனைக்கால) குனூத் ஓதினார்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘ஆம்என்று பதிலளித்தார்கள். ருகூஉவுக்கு முன்பா குனூத் ஓதினார்கள்?’ என்று மீண்டும் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, ‘ருகூஉவுக்குப் பின்பு குறைந்த நேரம் ஓதினார்கள்எனப் பதிலளித்தார்கள்.

நூல்: புகாரி (1001)

மேற்கண்ட ஹதீஸ் சோதனைக் கால குனூத் சுருக்கமாக இருக்க வேண்டும் என்பதை எடுத்துரைக்கிறது.

இன்றைக்கு சவூதி உட்பட சில நாடுகளில் இந்த சோதனைக் கால குனூத்தினை மிக நீண்ட நேரம் ஓதுகின்றனர். ஆனால் இதற்கு நபிவழியில் ஆதாரம் கிடையாது.

நபியவர்கள் சோதனைக் காலப் பிரார்த்தனையை மிகவும் சுருக்கமாகத்தான் ஓதியுள்ளார்கள் என்பதை அவர்களின் நடைமுறையில் இருந்தும் அறிந்து கொள்ளலாம். பின்வரும் ஹதீஸில் நபியவர்கள் எவ்வாறு சோதனைக் காலப் பிரார்த்தனை செய்தார்கள் என்பது இடம் பெற்றுள்ளது.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையின் இறுதி ரக்அத்தில் சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ (தன்னைப் புகழ்ந்தவரின் புகழுரையை அல்லாஹ் செவியேற்றான்) என்று கூறிய பிறகு (சோதனைக்கால) குனூத்ஓதினார்கள். அதில்,

இறைவா! அய்யாஷ் பின் அபீரபீஆவைக் காப்பாற்றுவாயாக! இறைவா! வலீத் பின் வலீதைக் காப்பாற்றுவாயாக! இறைவா! சலமா பின் ஹிஷாமைக் காப்பாற்றுவாயாக! இறைவா! இறை நம்பிக்கையாளர்களில் ஒடுக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவாயாக! இறைவா! முளர் குலத்தாரின் மீது உனது பிடியை இறுக்குவாயாக! இறைவா! யூசுஃப் (அலை) அவர்களின் காலத்துப் பஞ்சம் நிறைந்த (ஏழு) வருடங்களைப் போன்று இவர்களுக்கும் சில வருடங்களை அளிப்பாயாக!

என்று பிரார்த்தித்தார்கள்

நூல்: புகாரி (6393)

நபியவர்கள் செய்த பிரார்த்தனையின் அளவை மேற்கண்ட ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

எனவே நாமும் மிகவும் நீண்டு விடாமல் இதே அளவிற்கு சோதனைக்காலப் பிரார்த்தனையைச் செய்ய வேண்டும்.

யா அல்லாஹ் ! பர்மாவில் ராக்கைன் மாநிலத்தில் பாதிக்கப்படும் முஸ்லிமான, பலவீனமான ஆண்களையும் பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாப்பாயாக!

அவர்களுக்கு உன் உதவியை இறக்கி அவர்களைப் பலப்படுத்துவாயாக!

இறைவா! பர்மாவில் அநியாயம் செய்யும் கூட்டத்தாரின் மீது உன் பிடியை இறுக்குவாயாக!

என்பது போன்ற பிரார்த்தனைகளை நாம் செய்யலாம்.

கைகளை உயர்த்தி பிரார்த்திக்க வேண்டும்

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

(எழுபது நபித்தோழர்கள் கொல்லப்பட்ட போது) அவர்களுக்காக நபியவர்கள் கவலைப்பட்டது போல் வேறு எந்த ஒன்றிலும் கவலைப்பட்டு நான் பார்த்ததில்லை. நபி (ஸல்) அவர்கள் சுபுஹ் தொழுகையில் தன்னுடைய இரு கைகளை உயர்த்தி (நபித்தோழர்களை கொலை செய்தவர்களுக்கு) எதிராகப் பிரார்த்தனை செய்ததை நான் பார்த்தேன்.

நூல்: அஹ்மத் (12425)

சோதனைக் கால குனூத்தில் நபியவர்கள் கைகளை உயர்த்திப் பிரார்த்தித்துள்ளார்கள் என்பதை மேற்கண்ட நபிவழியிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.

எனவே நபியவர்கள் செய்ததைப் போன்று இமாமும், பின்பற்றி தொழுபவர்களும் கைகளை உயர்த்திப் பிரார்த்திக்க வேண்டும்.

சப்தமாகப் பிரார்த்திக்கலாமா?

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் இஷா தொழுகையின் இறுதி ரக்அத்தில் சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ (தன்னைப் புகழ்ந்தவரின் புகழுரையை அல்லாஹ் செவியேற்றான்) என்று கூறிய பிறகு (சோதனைக்கால) குனூத்ஓதினார்கள். அதில்,

இறைவா! அய்யாஷ் பின் அபீரபீஆவைக் காப்பாற்றுவாயாக! இறைவா! வலீத் பின் வலீதைக் காப்பாற்றுவாயாக! இறைவா! சலமா பின் ஹிஷாமைக் காப்பாற்றுவாயாக! இறைவா! இறை நம்பிக்கையாளர்களில் ஒடுக்கப்பட்டவர் களைக் காப்பாற்றுவாயாக! இறைவா! முளர் குலத்தாரின் மீது உனது பிடியை இறுக்குவாயாக! இறைவா! யூசுஃப் (அலை) அவர்களின் காலத்துப் பஞ்சம் நிறைந்த (ஏழு) வருடங்களைப் போன்று இவர்களுக்கும் சில வருடங்களை அளிப்பாயாக!

என்று பிரார்த்தித்தார்கள்

நூல்: புகாரி (6393)

மேற்கண்ட செய்தியில் இமாமாகத் தொழுவித்த நபி (ஸல்) அவர்கள் செய்த பிரார்த்தனையை நபித்தோழர்கள் செவியேற்றுள்ளனர் என்பதை நாம் அறிய முடிகிறது.

எனவே இமாமாகத் தொழுவிப்பவர் பிரார்த்தனையை வெளிப்படுத்திச் செய்யலாம். ஆனால் மிகவும் உரத்த சப்தத்தைத் தவிர்ந்து கொள்ள வேண்டும். பணிவை வெளிப்படுத்தும் வகையில் இமாம் தனது பிரார்த்தனையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பற்றித் தொழுபவர்கள் கைகளை உயர்த்தி, பணிவாகவும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

ஜூம்ஆ உரையில் மழை வேண்டிப்  பிரார்த்திக்கும் போது ‘‘அல்லாஹும் மஸ்கினா” (இறைவா! எங்களுக்கு மழை பொழிவிப்பாயாக) என்ற துஆவை நபியர்கள் மக்களுக்குக் கேட்கும் விதமாகச் செய்துள்ளார்கள். மக்களும் அதே பிரார்த்தனையை தங்கள் கைகளை உயர்த்தி சப்தமின்றி செய்துள்ளனர். (பார்க்க: புகாரி 1029, 1013, 1014)

இதன் அடிப்படையில் சோதனைக் கால குனூத்திலும் நடைமுறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆமீன் கூற வேண்டுமா?

சோதனைக் கால குனூத்தின் போது பின்பற்றித் தொழுபவர்கள் ஆமீன் சொல்ல வேண்டும் என்பதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்படும் ஒரு செய்தியை ஆதாரமாக எடுத்து வைக்கின்றனர்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபியவர்கள் தொடர்ச்சியாக ஒரு மாதம் லுஹர், அஸர், மஃரிப், இஷா, சுபுஹ் ஆகிய  அனைத்து தொழுகைகளின் இறுதியில், (அதாவது) கடைசி ரக்அத்தில் சமிஅல்லாஹூ லிமன் ஹமிதஹ்என்று கூறும் போது பனூ சுலைம் கோத்திரத்தாரில் ரிஃல், தக்வான், உஸைய்யா ஆகிய குலத்தாருக்கு எதிராகப் பிரார்த்தித்து குனூத் ஓதினார்கள். நபியவர்களுக்குப் பின்னால் உள்ளவர்கள் ஆமீன் சொன்னார்கள்.

நூல்: அபூதாவூத் (1231), அஹ்மத் ( 2610)

இன்னும் பல நூற்களில் இந்தச் செய்தி இடம் பெற்றுள்ளது.

இதன் அறிவிப்பாளர் தொடரில் “ஹிலால் பின் ஹப்பாப்’’ என்பவர் இடம் பெறுகிறார். இவரைப் பல அறிஞர்கள் உறுதிப்படுத்தியிருந்தாலும் இவர் கடைசிக் காலத்தில் மூளை குழம்பிவிட்டார் என்றும் அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.

 

123 – 4 (الاربعة) هلال بن خباب (3) العبدي أبو العلاء البصري مولى زيد بن صوحا

سكن المدائن ومات بها.

روى عن أبي جحيفة ويحيى بن جعدة بن هبيرة وعكرمة مولى ابن عباس وميسرة أبي صالح وسعيد بن جبير وعبد الرحمن بن الاسود بن بزيد ومجاهد ابن جبر والحسن بن محمد بن الحنفية وغيرهم.

وعنه الثوري ومسعر ويونس بن أبي اسحاق وثابت بن يزيد أبو زيد الاحول وعبد الواحد بن زياد وهشيم وأبو عوانة وآخرون.

قال عبدالله بن أحمد عن أبيه شيخ ثقة وقال ابن أبي خيثمة وغيره عن ابن معين ثقة وليس بينه وبين يونس بن خباب قرابة وقال ابن الدورقي عن ابن معين هلال بن خباب وصالح ابن خباب أخوان ثقتان وقال يعقوب بن سفيان حدثنا أبو نعيم ثنا سفيان عن هلال ابن خباب كان ينزل المدائن ثقة إلا انه تغير عمل فيه السن وقال أبو بكر بن أبي الاسود عن يحيى بن سعيد القطان أتيت هلال بن خباب وكان قد تغير قبل موته وقال ابراهيم ابن الجنيد سألت ابن معين عن هلال بن خباب وقلت إن يحيي القطان يزعم انه تغير قبل أن يموت واختلط فقال يحيى لا ما اختلط ولا تغير قلت ليحيى فثقة هو قال ثقة مأمون.

وذكره ابن حبان في الثقات وقال يخطئ ويخالف وقال ابن عمار الموصلي والمفضل ابن غسان الغلابي ثقة.

زاد ابن عمار وأخوه يونس ضعيف قال الخطيب وهو ابن عمار لا نعلم بين هلال ويونس نسبة.

قال الخطيب وزعم الجوزجاني أن هلال بن خباب ويونس بن خباب وصالح بن خباب اخوة ووهم في ذلك ايضا وقال ابن عدي ارجو انه لا بأس به وقال ابن سعد مات في آخر سنة اربع واربعين ومائة.

قلت: وذكره ابن حبان ايضا في الضعفاء وقال اختلظ في آخر عمره فكان يحدث بالشئ على التوهم لا يجوز الاحتجاج به إذا انفرد وقال الساجي والعقيلي في حديثه وهم وتغير آخره وقال الحاكم أبو أحمد تغير بآخره وقال الآجري قلت لابي داود هلال بن خباب أخو يونس ما جعل الله تعالى

بينهما قرابة.

அஹ்மத், இப்னு மயீன், இப்னு கஸ்ஸான் அல் கலாபி ஆகியோர் “ஹிலால் பின் ஹப்பாப் என்பாரை நம்பகமானவர்’’ என்று கூறியுள்ளனர்.

“இவரிடம் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று நான் ஆதரவு வைக்கிறேன்“ என இப்னு அதீ கூறியுள்ளார்.

இவர் மாதாயின் என்ற நகரில் வசிப்பவராக இருந்தார். நம்பகமானவர். ஆனால் வயோதிகத்தின் காரணமாக கடைசிக் காலத்தில் மூளை குழம்பி விட்டார் என்று சுஃப்யான் அவர்கள் கூறியுள்ளார்கள்.

“நான் ஹிலால் பின் ஹப்பாபிடம் வந்தேன். அவர் தான் மரணிப்பதற்கு முன்னால் மூளை குழம்பியவராக ஆகிவிட்டார்” என யஹ்யா அல்கத்தான் அவர்கள் விமர்சித்துள்ளார்கள்.

இப்னு ஹிப்பான் தம்முடைய ‘ஸிகாத்’ (நம்பகமானவர்கள்) என்ற நூலில் இவரைக் குறிப்பிட்டுள்ளார்கள். இவர் தவறிழைப்பவர், முரண்பாடாக அறிவிப்பவர் என்றும் விமர்சித்துள்ளார்.

இப்னு ஹிப்பான் தம்முடைய “அல்லுஅஃபா” என்ற நூலிலும் இவரைக் குறிப்பிட்டுள்ளார். இவர் தன்னுடைய கடைசிக் காலத்திலே மூளை குழம்பி விட்டார். இவர் சந்தேகத்துடன் தான் செய்தியை அறிவிப்பவராக இருந்தார். இவர் தனித்து அறிவித்தால் அதை ஆதாரமாகக் கொள்ளக் கூடாது  என்றும் இப்னு ஹிப்பான் விமர்சித்துள்ளார்.

“இவருடைய ஹதீஸ்களில் சந்தேகம் உள்ளது. இவர் தம்முடைய கடைசிக் காலத்தில் மூளை குழம்பி விட்டார்“ என்று அஸ்ஸாஜி, உகைலி ஆகியோர் விமர்சித்துள்ளனர்.

ஹாகிம் அவர்களும் இவர் கடைசிக் காலத்தில் மூளை குழம்பி விட்டார் என்று கூறியுள்ளார்.

மொத்தில் இப்னுல் கத்தான், சுஃப்யான், இப்னு ஹிப்பான், அஸ்ஸாஜி, உகைலி, ஹாகிம் ஆகியோர் இவர் கடைசிக் காலத்தில் மூளை குழம்பி விட்டார் என்று உறுதிப்படுத்துகின்றனர்.

ஹிலால் பின் ஹப்பாப் தான் மரணிப்பதற்கு முன்னால் தடுமாற்றமடைந்து விட்டார்; மூளை குழம்பி விட்டார் என்று யஹ்யா அல்கத்தான் கூறியதாக இமாம் இப்னு மயீனிடம் கேட்கப்பட்டபோது அவர் “மூளை குழம்பவுமில்லை, தடுமாற்றமடையவுமில்லை. அவர் உறுதியானவர், நம்பகமானவர்’’ இப்னு மயீன் அவர்கள் கூறியுள்ளார்.

(தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் : 11 பக்கம் 69)

ஹிலால் பின் ஹப்பாப் அவர்கள் மூளை குழம்பியவர் என்ற யஹ்யா அல்கத்தானின் விமர்சனத்தை இப்னு மயீன் மறுத்தாலும் இப்னு மயீனின் கூற்றை நாம் ஏற்கமுடியாது.

ஏனென்றால் ஹிலால் பின் ஹப்பாப், தான் மரணிப்பதற்கு முன்னால் தடுமாற்றமடைந்து விட்டார், மூளை குழம்பி விட்டார் என்று யஹ்யா அல்கத்தான் அல்லாத மற்ற பல ஹதீஸ்கலை அறிஞர்களும் விமர்சித்துள்ளனர். எனவே அதிகமானவர்களின் கூற்றே ஆதாரமாகக் கொள்ளப்பட வேண்டும்.

மேலும் இவர் மூளை குழம்பியதின் காரணமாக இவர் தனித்து அறிவித்தால் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று இப்னு ஹிப்பான் கூறியுள்ளார்.

சோதனைக் கால குனூத் ஓதும் போது பின்னால் உள்ளவர் ஆமீன் சொன்னார்கள் என்று இவருடைய அறிவிப்பில் மட்டும்தான் வந்துள்ளது.

வேறு எந்த ஒரு நம்பகமான அறிவிப்பாளரும் “ஆமீன் கூறினார்கள்’’ என்று அறிவிக்கவில்லை.

மேலும் மேற்கண்ட செய்தியை இவர் மூளை குழம்புவதற்கு முன்னர்தான் அறிவித்தார் என்பதற்கு நமக்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.

பொதுவாக மூளை குழம்பியவரின் அறிவிப்பை ஏற்பதாக இருந்தால் அவரிடமிருந்து அறிவிக்கும் மாணவர், அவர் மூளை குழம்புவதற்கு முன் கேட்டாரா அல்லது மூளை குழம்பிய பின் கேட்டாரா என்பதை உறுதிப்படுத்தும் சான்றுகள் கிடைப்பதை வைத்தே முடிவு செய்யப்படும்.

இந்த அறிவிப்பில் அதைத் தெளிவுபடுத்தும் சான்றுகள் எதுவும் கிடைக்காததால் இச்செய்தி நிறுத்தி வைக்கப்படும். தெளிவு கிடைக்கும் வரை இதைக் கொண்டு அமல் செய்ய முடியாது.

எனவே சோதனைக் கால குனூத்தின் போது இமாம் பிரார்த்தனை செய்ய மற்றவர்கள் ஆமீன் சொல்வது கூடாது.

இமாமும் பிரார்த்தனை செய்ய வேண்டும். பின்பற்றித் தொழுபவர்களும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என இதர செய்திகளின் அடிப்படையிலேயே முடிவு எடுக்கப்படும்.

தமிழில் பிராரத்திக்கலாமா?

நபியவர்கள் கற்றுத் தந்த பிரார்த்தனைகள் இரண்டு விதமாக உள்ளன. ஒன்று நபியவர்களே அமைத்துத் தந்த பிரார்த்தனை வாசகங்கள்.

கழிப்பிடத்திற்குச் செல்லும் முன் ஓதும் துஆ, பிறகு ஓதும் துஆ, தூங்கும் முன்பும், பின்பும் ஓத வேண்டிய துஆக்கள், சாப்பிடும் முன்பும் பின்பும் ஓத வேண்டிய துஆக்கள் இது போன்ற அன்றாடம் ஓத வேண்டிய பிரார்த்தனைக்கான வாசகங்களை நபியவர்களே கற்றுத் தந்துள்ளார்கள்.

ஒவ்வொருவரும் இதுபோன்ற நிலைகளில் நபியவர்கள் எந்த வார்த்தைகளைக் கூறினார்களோ எந்த மொழியில் கூறினார்களோ அது போன்றுதான் கூற வேண்டும். இதில் மாற்றம் செய்வதற்கு யாருக்கும் அனுமதி கிடையாது.

மற்றொரு வகைப் பிரார்த்தனை, நாமாகத் தேர்ந்து எடுத்து சுயமாகச் செய்ய வேண்டிய பிரார்த்தனைகள் ஆகும். அதாவது பிரார்த்தனையில் என்ன கேட்க வேண்டும் என்பதை பிரார்த்திப்பவர்தான் முடிவு செய்ய வேண்டிய நிலையில் உள்ள பிரார்த்தனைகள்.

அத்தஹிய்யாத் இருப்பின் இறுதியில் நீங்கள் விரும்பியதைக் கேளுங்கள் என நபியவர்கள் கூறியுள்ளார்கள். ஒவ்வொருவரும் அவரவர் விரும்பியதைக் கேட்க வேண்டும் என்றால் அவரவருக்குத் தெரிந்த மொழியில் கேட்டால் மட்டுமே அது சாத்தியமாகும்.

அது போன்று தொழுகையில் ஸஜ்தாவின் போது பிரார்த்தனை செய்யுங்கள் என்று நபியவர்கள் வழிகாட்டியுள்ளார்கள். ஸஜ்தாவின் போது நமக்குத் தேவையானவற்றை நமக்குத் தெரிந்த மொழியில்தான் நாம் பிரார்த்திக்க முடியும்.

இது போன்று என்ன பிரார்த்திக்க வேண்டும் என்பதை பிரார்த்திப்பவர் முடிவு செய்ய வேண்டிய பிரார்த்தனைகளாக இருந்தால் அதனை நமக்குத் தெரிந்த மொழிகளில் நாம் செய்து கொள்ளலாம்.

நபியவர்கள் காலத்தில் ரிஅல், தக்வான் உட்பட சில சமுதாயத்தினர் முஸ்லிம்களைக் கொன்றனர். எனவே அவர்களுக்கு எதிராக நபியவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.

எனவே நாம் தற்போது அதே வார்த்தைகளைச் சொல்வது பொருத்தமற்றதாகும். தற்போது பர்மிய இராணுவமும், ஆட்சியாளர்களும், பவுத்த தீவிரவாதக் குழுக்களும் ராக்கைன் மாநிலத்தில் வாழும் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளில் ஈடுபடுகின்றனர். அநியாயம் செய்யும் இவர்களைக் குறிப்பிட்டுத்தான் நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

எனவே, யாருக்கு எதிராக, யாருக்கு ஆதரவாகப் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதைப் பிரார்த்திப்பவரே தீர்மானிக்க வேண்டிய நிலையில் உள்ளதால் இதனை அவரவர் தாய்மொழியில் செய்ய வேண்டும். தமிழ் மொழி பேசுவோர் தமிழிலும், உருது, தெலுங்கு, கன்னடம், மலையாளம்,  ஹிந்தி,  ஆங்கிலம், அரபி என அவரவர் பேசும் மொழியில் பிரார்த்தனை செய்து கொள்ளலாம்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *