குகையில் மனஅமைதிக்காக இறங்கிய வசனம்
அவர்கள் இருவரும் குகையில் இருந்த போது இருவரில் இரண்டாமவராய் இருந்த அவர் தம் தோழரை நோக்கிக் கவலை கொள்ளாதீர்; நிச்சயமாக, அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான் என்று கூறினார். அப்போது அல்லாஹ் அவருக்குத் தன்னிடமிருந்து மன அமைதியை அருளினான் எனும் (9:40ஆவது) வசனத் தொடர்.
(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) சகீனா (மனஅமைதி) எனும் சொல் சுகூன் எனும் வேர்ச் சொல்லிலிருந்து ஃபஈலா எனும் வாய்பாட்டில் அமைந்ததாகும்.
4663 அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (ஹிஜ்ரத் பயணத்தின் போது) நபி (ஸல்) அவர்களுடன் (ஸவ்ர் எனும்) அந்தக் குகையில் (ஒளிந்து கொண்டு) இருந்தேன். அப்போது நான் இணை வைப்பாளர்களின் (கால்) சுவடுகளைக் கண்டேன். நான், அல்லாஹ்வின் தூதரே! (நம்மைத் தேடி வந்துள்ள) இவர்களில் ஒருவன் தன் காலைத் தூக்கி(க் குனிந்து நோக்கி)னால் நம்மைப் பார்த்து விடுவானே! என்று (அச்சத்துடன்) சொன்னேன்.
நபி (ஸல்) அவர்கள், எந்த இருவருடன் அல்லாஹ் மூன்றாமவனாக இருக்கின்றானோ அவர்களைப் பற்றி என்ன கருதுகின்றீர்? என்று கேட்டார்கள்.