கிலாஃபத்தின் மீள் வருகை பற்றி ஹதீஸ் உண்டா?
கிலாஃபத் எனும் நல்லாட்சி குறித்து இரண்டு முன்னறிவிப்புக்கள் உள்ளன.
ஒன்று மஹ்தீ என்பவர் மூலம் ஏற்படும் நல்லாட்சி. மஹ்தீ என்ற நீதமான ஆட்சியாளர் ஒருவர் பிற்காலத்தில் தோன்றுவார். அவர் சிறப்பான இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவார் என்று ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.
பூமியின் வாழ்நாளில் ஒரே ஒரு நாள் மீதமாக இருந்தால் கூட அந்த நாளை அல்லாஹ் நீட்டுவான். அதில் என் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை அல்லாஹ் அனுப்புவான். அவர் பெயரும் என் பெயரும் ஒன்றாக இருக்கும். அவரது தந்தையின் பெயரும் என் தந்தையின் பெயரும் ஒன்றாக இருக்கும். அநீதியால் நிரப்பப்பட்டுள்ள பூமி முழுவதும் நீதியால் நிரப்புவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : அபூதாவூத் 4282
இதே போன்று ஈசா (அலை) அவர்கள் கியாமத் நாளுக்கு முன்பு வருகை தருவார்கள். அவர்களும் இந்த உலகத்தில் நல்லாட்சியை நிறுவுவார்கள் என்று ஹதீஸ்கள் கூறுகின்றன.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! மர்யமின் புதல்வர் (ஈசா) உங்களிடம் நேர்மையான (தீர்ப்பு சொல்லும்) நீதிபதியாக இறங்கவிருக்கிறார்! அவர் சிலுவையை உடைப்பார்! பன்றியைக் கொல்வார்! காப்புவரியை (-ஜிஸ்யா) நீக்குவார்! (அந்நாளில்) வாங்குவதற்கு ஆளில்லாத அளவிற்குச் செல்வம் பெருக்கெடுத்து ஓடும்!
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி 2222