இவ்வசனத்தில் (5:82) கிறித்தவர்கள் மற்ற சமுதாயத்தினரை விட முஸ்லிம்களுக்கு நெருக்கமானாவர்கள் என்று புகழ்ந்து சொல்லப்பட்டுள்ளனர்.
வரலாறு தொடர்பான இது போன்ற செய்திகளை சொல்லப்பட்ட காலத்தில் இப்படி இருந்துள்ளது என்று தான் புரிந்து கொள்ள வேண்டும். இது எக்காலத்துக்கும் உரியது என்று கருதக் கூடாது.
கொள்கை, சட்டதிட்டங்கள், வணக்க வழிபாடுகள் போன்ற விஷயங்களைத் திருக்குர்ஆன் கூறினால் அது உலகம் அழியும் காலம் வரை அனைத்து மக்களுக்கும் உரியதாகும் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
யூதர்களைப் புகழ்ந்து ஒரு வசனம் இருந்தால் அந்தப் புகழ் அவ்வசனம் அருளப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்களை மட்டுமே குறிக்கும். அதைச் சான்றாகக் கொண்டு காலாகாலத்துக்கும் யூதர்களிடம் அந்தச் சிறப்பு உள்ளது என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.
கிறித்தவர்களைப் பற்றி கூறப்படும் வசனமும் அத்தகையது தான். அன்றைக்கு இருந்த யூதர்களை விட, மக்காவின் நிராகரிப்பாளர்களை விட கிறித்தவர்கள் முஸ்லிம்களிடம் நெருக்கமாக இருந்ததால் அவர்கள் புகழ்ந்து பேசப்பட்டனர்.
இவ்வசனத்திலேயே “நாங்கள் கிறித்தவர்கள் எனக் கூறியோர் நம்பிக்கை கொண்டோருக்கு மிக நெருக்கமான நேசமுடையோராக இருப்பதையும் நீர் காண்பீர்” என்று கூறப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
நீர் காண்பீர் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்ணால் கண்ட சமுதாயத்தையே குறிக்கிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்துக்குப் பின் கிறித்தவத் தலைமையும், கிறித்தவ ஆட்சியும் முஸ்லிம்களின் எதிரிகளாக மாறினார்கள் என்றால் அது இவ்வசனத்துக்கு எதிரானதல்ல. நடந்து முடிந்த பல சிலுவைப் போர்கள் இதற்குச் சான்று.
இன்றும் கூட கிறித்தவ சமுதாயத்தின் பொதுமக்கள் முஸ்லிம்களிடம் இணக்கமாக இருந்தாலும் கிறித்தவ ஆட்சியாளர்கள் முஸ்லிம்களின் பகிரங்க எதிரிகளாக உள்ளனர்.
தமது ஆட்சி, அதிகாரம் ஆகியவற்றைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும், நாடு பிடிக்கவும், பிற நாட்டின் வளங்களைச் சுரண்டவும் கிறித்தவ மார்க்கத்தைத் தவறாகப் பயன்டுத்தி வரும் அதிகார வர்க்கத்தை இது குறிக்காது.