கிப்லா
கிப்லா என்றால் முன்னோக்குதல், முன்னோக்கும் இலக்கு என்பது பொருள். இஸ்லாமிய வழக்கில் அல்லாஹ்வைத் தொழும்போது நோக்கும் இலக்கு கிப்லா எனப்படுகிறது. முஸ்லிம்கள் மக்காவில் அமைந்துள்ள உலகின் முதல் ஆலயமான கஅபா ஆலயத்தை நோக்கியே தொழ வேண்டும்.
கஅபா ஆலயத்தையே தொழுவதாக எண்ணக் கூடாது. அது ஒரு கட்டடமே. அதற்கு இறைத்தன்மை ஏதும் கிடையாது. கஅபாவிடம் எந்தக் கோரிக்கையும் வைக்கக் கூடாது.
எதையும் நோக்காமல் எந்தக் காரியத்தையும் செய்ய முடியாது. அவ்வாறு நோக்குவது உலகில் ஏகஇறைவனை வணங்குவதற்காக முதலில் எழுப்பப்பட்ட ஆலயமாக இருக்கட்டும் என்பது தான் இதற்குக் காரணம்.
பலரும் சேர்ந்து தொழும்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் நோக்கினால் ஒழுங்கு கெடும். இதற்காகத்தான் அனைவரும் ஒன்றையே நோக்க வேண்டும் எனக் கட்டளையிடப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் மேற்குத் திசையை வணங்குவதாக இந்தியாவில் சிலர் நினைக்கின்றனர். இந்தியாவுக்கு மேற்கே கஅபா ஆலயம் அமைந்திருப்பதே இதற்குக் காரணம். மற்ற நாடுகளில் வடக்கு, தெற்கு, கிழக்கு என்று பல திசைகளிலும் முஸ்லிம்கள் தொழுவார்கள்.
மக்காவுக்குச் சென்று கஅபாவை நேரில் கண்டால் அதைச் சுற்றி அனைத்துத் திசைகளிலும் முஸ்லிம்கள் தொழுவார்கள். எனவே திசையை முஸ்லிம்கள் வணங்குவதாகக் கருதுவது தவறாகும்