கஃபாவின் கீழ் இரண்டு கப்ருகள் உள்ளதா?
கஃபாவின் கீழ் இரண்டு கப்ருகள் உள்ளன என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாக ஒரு செய்தி பதிவாகியுள்ளது.
இப்னு அப்பாஸ் ரலி கூறியதாவது
மஸ்ஜிதுல் ஹாரமில் இரண்டு கப்ருகள் உள்ளன. அவற்றைத் தவிர வேறு எதுவும் அங்கில்லை. அவை இஸ்மாயீல் (அலை) மற்றும் ஷூஐப் (அலை) அவர்களின் கப்ருகளாகும். இஸ்மாயீல் அலை அவர்களின் கப்ர் ஹிஜ்ர் பகுதியில் ருக்னுல் அஸ்வத் – ஹஜருல் அஸ்வதிற்கு – நேராக உள்ளது.
அக்பாரு மக்கா, பாகம் 2, பக்கம் 124
இது நபிகள் நாயகம் கூறியதாக இல்லை. இப்னு அப்பாஸ் (ரலி) என்ற நபித்தோழரின் சொந்தக் கூற்றாகவே கூறப்பட்டுள்ளதால் இதை நாம் ஏற்க வேண்டியதில்லை. மேலும் இது முற்றிலும் பலவீனமான செய்தியாகும்.
இதில் இடம்பெற்றுள்ள முஹம்மத் பின் ஸாயிப் அல்கல்பீ என்பவரை அறிஞர்கள் பலரும் பலவீனமானவர், பொய்யர், மூளை குழம்பியவர் என்று குறை கூறியுள்ளனர்.
செய்தி: 2
அப்துல்லாஹ் பின் ளம்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது. மகாமு இப்றாஹீமிலிருந்து ருக்னுல் யமானீ பகுதி வரையிலும் ஜம்ஜம் அமைந்த இடத்திலிருந்து ஹிஜ்ர் பகுதி வரையிலும் உள்ள இடைப்பட்ட இடத்தில் சுமார் 99 நபிமார்களின் கப்ருகள் உள்ளன. அவர்கள் ஹஜ் செய்ய வந்தார்கள். (பிறகு) அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார்கள்.
மஸாயிலுல் இமாம் அஹ்மத்,
பாகம் 1, பக்கம் 408
இந்தச் செய்தியை இமாம் அஹ்மத் அவர்களின் மகன் ஸாலிஹ் தனது மஸாயில் என்ற நூலில் கொண்டு வருகிறார்.
இந்தச் செய்தியும் நபிகள் நாயகம் கூறியதாகவோ, நபித்தோழர் கூறியதாகவோ இல்லை.
மாறாக அப்துல்லாஹ் பின் ளம்ரா என்ற தாபியி சொன்னதாகவே வருகிறது.
இதுவே இந்தச் செய்தியை நாம் ஆதாரமாக ஏற்க முடியாது என்பதற்கு போதுமான காரணமாகும்.
மேலும் இதன் அறிவிப்பாளர் தொடரில் யஹ்யா பின் சுலைம் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரது நினைவாற்றல் ரீதியாக பல அறிஞர்கள் குறை கூறியுள்ளனர்.
கருத்து சரியா?
அதுவும் 90 நபிமார்களும் ஒரே நாளில் ஹஜ் செய்ய வந்திருக்க மாட்டார்கள். ஒவ்வொரு கால கட்டத்தில் ஒருவர் வந்திருக்கலாம்.
ஒவ்வொரு நபியும் மக்காவில் மரணித்த போதும் சொல்லி வைத்தது போல் தவாப் செய்வதைத் தடுக்கும் வகையில் அங்கே அடக்கம் செய்வார்களா?
இதை பரேலவிகள் உண்மை என்று நம்பினால் நபிமார்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை ஏறி மிதிக்கலாம்; அதற்கு எந்த மதிப்பும் கொடுக்கத் தேவை இல்லை என்று பத்வா கொடுக்க வேண்டும்.
அல்லது தவாப் செய்யும் சுற்றுப் பாதையில் நபிமார்களின் கப்ருகள் உள்ளதால் இனிமேல் கஅபாவை தவாப் செய்யக் கூடாது என்று சொல்ல வேண்டும்.
இரண்டில் எதைச் சொல்லப் போகிறார்கள்?
நபிகள் நாயகம் மற்றும் நபித்தோழர்கள் கூட சம்பந்தப்படாத இந்தச் செய்தி இவர்களது கருத்திற்கு ஒரு போதும் ஆதாரமாகாது.
கஃபாவைச் சுற்றி கப்ருகள் உள்ளது தொடர்பாக நபிகள் நாயகம் கூறியதாக அல்குனா வல் அஸ்மா என்ற நூலில் பின்வருமாறு ஒரு செய்தி பதிவாகியுள்ளது.
செய்தி: 3
ஆயிஷா (ரலி) அறிவிப்பதாவது
இஸ்மாயீல் (அலை) அவர்களின் கப்ர் ஹிஜ்ர் பகுதியிலே உள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்குனா வல்அஸ்மா
பாகம் 1, பக்கம் 239
இதில் யஃகூப் பின் அதாஃ என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று அறிஞர்களால் விமர்சிக்கப்பட்டவர் ஆவார்.
இவர் பலவீனமானவர் என்று இமாம் அபூசுர்ஆ மற்றும் இப்னு மயீன் ஆகியோர் விமர்சித்துள்ளனர்.
இமாம் அஹ்மத் இவரை மறுக்கப்பட வேண்டியவர் என்று குறை கூறியுள்ளார்.
பார்க்க: அல்ஜரஹ் வத்தஃதீல், பாகம் 9, பக்கம் 211
இஸ்மாயீல் (அலை) உள்ளிட்ட எந்த நபியும் கஃபாவின் கீழ்ப் பகுதியிலோ அல்லது கஃபாவைச் சுற்றியோ அடக்கம் செய்யப்பட்டிருப்பதாக அல்லாஹ்வோ, அல்லாஹ்வின் தூதரோ எங்கும் சொல்லவில்லை.
மேலும் கஃபா என்பது இறைவனை வணங்குவதற்காகக் கட்டப்பட்ட முதல் ஆலயம் ஆகும்.
ஆதம் அலை அவர்கள் காலத்திலேயே இந்த கஃபா கட்டப்பட்டு விட்டது.
எந்த நபிமார்கள் இங்கே அடக்கம் செய்யப்பட்டிருப்பதாகப் புழுகுகிறார்களோ அவர்களது பிறப்பு – இறப்பிற்கு முன்பாகவே கஃபா ஆலயம் கட்டப்பட்டு விட்டது. இறைவனால் அது சிறப்பிக்கப்பட்டும் விட்டது.
அத்தகைய கஃபா ஆலயத்தின் சிறப்பு எந்த தனி மனிதர்களைக் கொண்டும் அல்ல என்பதை விளங்கி கொள்ள வேண்டும். இவர்கள் கூறிய படி அங்கே சிலர் அடக்கம் செய்யப்பட்டிருந்தாலும் அதனால் கஃபா ஆலயத்திற்கு எந்தச் சிறப்பும் கிடையாது.
மஸ்ஜிதுந் நபவீ வரலாறு அறியாதவர்கள்
ஓரிடத்தில் பள்ளிவாசல் கட்டும் போது அங்கே சில மனிதர்கள் அடக்கம் செய்யப்பட்டிருந்தால் அவர்களது உடல்களை அப்புறப்படுத்தி வேறு இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும்.
மனித உடல்களை அப்புறப்படுத்திய பிறகே அங்கே பள்ளிவாசல் எழுப்ப இயலும். இது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த வழிமுறையாகும்.
மஸ்ஜிதுந் நபவீ இந்த அடிப்படையிலேயே கட்டப்பட்டுள்ளது. இதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் (நாடு துறந்து) மதீனாவுக்கு வந்தபோது பள்ளிவாசல் கட்டும்படி பணித் தார்கள். பனூ நஜ்ஜார் கூட்டத்தாரை (அழைத்து வரச் சொல்லி) ஆளனுப் பினார்கள். (அவர்கள் வந்தபோது), “பனூ நஜ்ஜார் கூட்டத்தாரே! உங்களின் இந்தத் தோட்டத்திற்கு என்னிடம் விலை கூறுங்கள்” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கான விலையை நாங்கள் அல்லாஹ்விடமே கோருவோம்” என்று பதில் (கூறி, அந்தத் தோட்டத்தை) அளித்தனர்.
நான் உங்களிடம் கூறுபவை தாம் அ(ந்தத் தோட்டத்)தில் இருந்தன: அதில் இணை வைப்பாளர்களின் சமாதிகள் இருந்தன; அதில் இடிபாடுகள் இருந்தன; சிலபேரீச்ச மரங்களும் அதில் இருந்தன. ஆகவே நபி (ஸல்) அவர்கள் (பள்ளிவாசல் கட்டுவதற்காக அங்குள்ள) சமாதிகளைத் தோண்டி (அப்புறப்படுத்தி)டுமாறு உத்தரவிட அவ்வாறே அவை சமப்படுத்தப் பட்டன. பேரீச்சமரங்களை வெட்டும்படி உத்தரவிட, அவ்வாறே அவை வெட்டப்பட்டன. பள்ளிவாசலின் கிப்லாத் திசையில் பேரீச்ச மரங்களை வரிசையாக நட்டனர்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 428
இந்த வரலாறு அறியாதவர்கள் கஃபாவைச் சுற்றி நபிமார்கள் அடங்கி உள்ளதாக ஆதாரமற்றுப் பிதற்றுகிறார்கள்.