காஃபிர்களுக்கு இறங்கிய குர்ஆன் வசனங்களை, முஸ்லிம்களுக்கு பயன்படுத்தலாமா?
ஆதி மனிதர் ஆதம்(அலை) ஒரு நபி அவர் பிறப்பால் முஸ்லிம் அவர்களின் மக்கள் அனைவரும் முஸ்லிம்கள்தான்.
பின்னர் எப்படி காஃபிர்கள் முளைத்தார்கள் என்று சிந்திக்க மாட்டார்களா?
முஸ்லிமாக பிறந்தவர்கள் தான் இறைவனுக்கு மாறு செய்வதன் மூலம் காஃபிர்கள் ஆனார்கள் என்ற உண்மை இவர்களுக்குத் தெரியாதா?
அத்தியாம் 18: 102-106 ல் கூறப்படும் கண்டனங்கள் காஃபிர்களுக்காக இறங்கியது என்கிறார்களே
அந்த காபிர்கள் யார்?
அந்த குறைஷிகள் யார்?
இப்றாஹீம்(அலை) இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் நேரடி வாரிசுகள் காஃபத்துல்லாஹ்வை சுற்றி வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
அப்துல்லாஹ், ஆமினா, அப்பாஸ், ஹம்ஸா என்று அழகிய இஸ்லாமிய பெயர்களை உடையவர்களாக இருந்தார்கள். சுன்னத் செய்யப்பட்டிருந்தது. குர்ஆன் இறங்கிய அரபு மொழி பேசினார்கள்.
வருடா வருடம் ஹஜ் செய்தார்கள். தான தர்மம் செய்தார்கள். இப்றாஹீம்(அலை) அவர்களின் இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொன்டார்கள். இவர்களின் அகராதிப்படி இன்றைய இந்திய முஸ்லிம்களைவிட பன்மடங்கு உயர்வான முஸ்லிம்களாகத்தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்ட முஸ்லிகளைப் பார்த்தே அல்லாஹ் காஃபிர் என்று கூறி எச்சரிக்கிறான் என்பதை இவர்கள் சிந்திக்க வேண்டாமா?
அவர்கள் தங்களை இப்றாஹீம்(அலை) அவர்களின் இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றுகிறவர்கள் என்று சொல்லிக்கொண்டாலும்
அல்லாஹ் தடுத்துள்ளதற்கு மாறாக அவுலியாக்களிடம் தங்களின் வேண்டுதல்களை வைப்பவர்களாக இருந்தார்கள். அதாவது அல்லாஹ்வின் அடியார்களான அவுலியாக்களை தங்களின் பாதுகாவலர்களாக ஆக்கிக் கொண்டார்கள்.
அவர்கள் தங்களுக்காக அல்லாஹ்விடம் மன்றாடுவார்கள், சிபாரிசு செய்வார்கள் என்று நம்பியே தர்ஹா சடங்குகளைச் செய்து வந்தனர். அல்குர்ஆன் 18:10, 18:102-106, 39:3 ஆகிய இறை வசனங்களை ஓதினால் சிந்திப்பவர்களுக்கு உண்மை விளங்கும்.
இஸ்லாத்திலிருந்து குஃப்ர் தோன்றுகிறதேயல்லாமல் குஃப்ரிலிருந்து இஸ்லாம் தோன்றவில்லை.
என்பதை உணர்வார்களாக.
இந்த அடிப்படையில்தான் இப்றாஹீம்(அலை) அவர்களின் நேரடி வாரிசுகளான குறைஷிகள் உண்மையில் தாங்கள் இப்ராஹீம்(அலை) அவர்களின் மார்க்கத்தை பின்பற்றுவதாக எண்ணிக்கொண்டுதான் அல்லாஹ்வின் அவுலியாக்களைத் தங்களின் பாதுகாவலர்களாக்கி அவர்களின் சமாதிகளில், சிலைகளுக்கு முன்னால் தங்களின் வேண்டுதல்களை வைத்து, அதன் காரணமாக அல்லாஹ்வால் காஃபிராக்கப்பட்டார்கள்.
அதேபோல் இன்றைய முஸ்லிம்கள் நபி(ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கமான இஸ்லாத்தைப் பின்பற்றுவதாக நம்பிக்கொண்டு அவர்களிடம் தங்களின் வேண்டுதல்களை வைத்தால்,
அவர்களை அல்லாஹ்விடம் சிபாரிசு, மன்றாட்டம் செய்பவர்களாக ஆக்கிக் கொண்டால், இப்றாஹீம்(அலை) அவர்களின் சந்ததிகள் காஃபிராக்கப்பட்டது போல் இவர்களும் காஃபிராக்கப்படுவார்கள் என்பதில் என்ன சந்தேகம் இருக்க முடியும்?
எனவே 18:102-106 வசனங்கள் காபிர்களுக்கு இறங்கியது; முஸ்லிம்களுக்கு என்று கூறி அப்பாவி முஸ்லிம்களை ஏமாற்றி அவர்களை நரகில் கொண்டு தள்ள வேண்டாம்.
முஸ்லிமான ஆண், பெண் அனைவரையும் “தர்ஹா மாயை” யை விட்டு விடுபட்டு படைத்த இறைவனை மட்டுமே பாதுகாவலனாக எடுத்து அவனிடமே தங்களின் வேண்டுதல்கள் கோரிக்கைகள் அனைத்தையும் வைக்கும்படி அவர்களுக்கு உபதேசிக்க முன்வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.