கருவுற்ற சினை முட்டை
இவ்வசனங்களில் (22:5, 23:14, 40:67, 75:38, 96:2) மனிதனின் துவக்க நிலையைச் சொல்லும்போது அலக், அலக்கத் என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இச்சொல்லுக்குப் பல அர்த்தங்கள் உள்ளன.
இரத்தக் கட்டி, தொங்கிக் கொண்டிருக்கும் நிலை, ஒன்றுடன் ஒன்று கோர்த்துக் கொண்டது என்று இதற்குப் பொருள் உண்டு.
இந்த இடத்தில் இரத்தக் கட்டி என்று பொருள் கொள்ள முடியாது. கருவில் இரத்தக் கட்டி என்று ஒரு நிலை இல்லை. தொங்கிக் கொண்டிருக்கும் நிலை எனவும் பொருள் கொள்ள முடியாது. ஏனெனில் மனிதனின் மூலத்தைக் கூறும்போது அது ஒரு பொருளாகத்தான் இருக்க முடியும். தொங்கும் நிலை என்பது ஒரு பொருள் அல்ல.
மனிதப் படைப்பு பற்றி இறைவன் வரிசைப்படுத்திக் கூறும்போது, முதலாவதாக நுத்ஃபா என்ற மூலப்பொருளைக் குறிப்பிடுகிறான். இரண்டாவதாக அலக்கத் என்ற மூலப்பொருளைக் குறிப்பிடுகிறான்.
நுத்ஃபா என்பது ஆணுடைய விந்திலுள்ள உயிரணுக்களாகும். மனிதன் உருவாவதற்கு ஆணுடைய நுத்ஃபா எனும் உயிரணு மட்டும் போதாது. பெண்ணுடைய சினை முட்டையுடன் ஆணின் உயிரணு சேரும்போது தான் கரு உருவாகும்.
ஆணின் உயிரணுவும் பெண்ணின் சினைமுட்டையும் இணைந்த கலவை தான் இரண்டாவது மூலப்பொருளாகும்.
இதன்படி நுத்ஃபாவுக்கு அடுத்த மூலப்பொருளாகக் குர்ஆனில் கூறப்பட்ட அலக் என்பது இதைத்தான் குறிக்கும் என்பதை எளிதாக விளங்க முடியும். மேலும் அலக் என்ற சொல், பல அர்த்தங்களைக் கொண்டதாக இருந்தாலும் ஒன்றுடன் ஒன்று கோர்த்துக் கொள்வது என்ற பொருளில் தான் மிக அதிகமான இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆணுடைய உயிரணு, பெண்ணின் சினை முட்டையுடன் ஒன்றுடன் ஒன்று கோர்த்துக் கொள்வதால் இதைக் குறிப்பிட இதை விடப் பொருத்தமான வேறு சொல் இருக்க முடியாது.
இதனால் தான் அலக் என்ற சொல் இடம் பெற்ற எல்லா இடங்களிலும் கருவுற்ற சினைமுட்டை என்று தமிழ்ப்படுத்தியுள்ளோம். இரண்டு பொருள்கள் ஒன்றுடன் ஒன்று கலப்பது என்பது இதன் நேரடிப் பொருள். இதன் கருத்து தான் கருவுற்ற சினைமுட்டை.