கப்ரின் மேல் செடி கொடிகளை நடலாமா?

கூடாது

இறந்தவரை அடக்கம் செய்தவுடன் அந்த இடத்தில் ஏதாவது செடி கொடிகளை நட்டு வைக்கும் வழக்கம் தமிழகத்தில் காணப்படுகிறது. பின்வரும் ஹதீஸ்களை இதற்கு ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு தோட்டத்தின் அருகில் கடந்து சென்றனர்.

அப்போது தமது கப்ருகளில் வேதனை செய்யப்படும் இருவரின் சப்தத்தைக் கேட்டார்கள்.

‘இவ்விருவரும் பெரும் பாவங்களுக்காக வேதனை செய்யப்படவில்லை. ஒருவர் சிறுநீர் கழிக்கும்போது மறைத்துக் கொள்ளாதவராக இருந்தார்; மற்றொருவர் கோள் சொல்லிக் கொண்டிருந்தார்’ என்று கூறினார்கள்.

பின்னர் பேரீச்சை மட்டை ஒன்றைக் கொண்டு வரச் செய்து அதை இரண்டாக முறித்து ஒவ்வொரு கப்ரிலும் ஒரு துண்டை வைத்தார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே! ஏன் இவ்வாறு செய்தீர்கள்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள் ‘இது காய்வது வரை இவ்விருவரின் வேதனை இலேசாக்கப்படக் கூடும்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 216, 218, 1361

புகாரியின் மற்றொரு அறிவிப்பில் (211, 1273)

‘அந்த மட்டையை இரண்டாகப் பிளந்து பாதியை ஒரு கப்ரிலும், மறுபாதியை மற்றொரு கப்ரிலும் வைத்தார்கள்’ என்று கூறப்பட்டுள்ளது.

இதை ஆதாரமாகக் கொண்டே அடக்கத் தலத்தில் செடி கொடிகளை வைக்கும் வழக்கம் ஏற்பட்டுள்ளது.

நபிகள் நாயகத்தின் இந்த நடவடிக்கையைச் சரியான முறையில் புரிந்து கொள்ளாதது தான் இதற்குக் காரணம்.

பேரீச்சை மட்டைகள் ஊன்றி வைத்தால் முளைக்கக் கூடிய தன்மை உடையது அல்ல. அதை இரண்டாகப் பிளந்தால் இன்னும் சீக்கிரத்தில் காய்ந்து போய் விடும்.

கப்ரின் மேலே காலாகாலம் செடி கொடிகள் இருப்பது பயன் தரும் என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள்.

விரைவில் காய்ந்து விடும் தன்மை கொண்ட பேரீச்சை மட்டையைத் தேடி, அதைச் சீக்கிரம் காய்ந்து விடும் வகையில் இரண்டாகப் பிளந்து வைத்ததிலிருந்து செடி கொடிகள் கப்ரின் வேதனையிலிருந்து காக்கும் என்பதற்காகச் செய்யவில்லை என்று அறியலாம். அப்படி இருந்தால் பேரீச்சை மட்டைக்குப் பதிலாக பேரீச்சை மரத்தை அதன் மேல் நட்டியிருப்பார்கள். அல்லது வேறு ஏதாவது செடியை நட்டியிருப்பார்கள்.

அப்படியானால் வேறு எதற்காக வைத்தார்கள்? இது காயும் வரை வேதனை இலேசாக்கப்படக் கூடும் என்று கூறியது ஏன்?

இந்தக் கேள்விக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே விடையளித்து விட்டனர்.

‘நான் செய்த துஆவின் காரணமாக இவ்விரு மட்டைகளும் காய்வது வரை வேதனை இலேசாக்கப்பட வேண்டும் என்று விரும்பினேன்’ என்று நபிகள் நாயகம் கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 5328

தமது உம்மத்தினர் இருவர் வேதனை செய்யப்படுவது இறைத்தூதர் என்ற முறையில் அவர்களுக்குக் காட்டித் தரப்படுகிறது. இதைக் கண்ட பின் அவர்கள் மனம் இவ்விருவருக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறது.

இறைவா! இம்மட்டை காய்வது வரையாவது இவர்களின் வேதனையை இலேசாக்கு’ என்று துஆச் செய்திருக்கிறார்கள். அந்த துஆவின் காரணமாகவே வேதனை இலேசாக்கக் கூடும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள். மேற்கண்ட அறிவிப்பைச் சிந்திப்பவர்கள் இதை உணரலாம்.

மரம் செடிகளை நடுவது பயன் தரும் என்றால் இறந்த ஒவ்வொருவருக்கும் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்திருப்பார்கள். அப்படிச் செய்யவில்லை.

மேலும் நபித்தோழர்களும் இதை நபிகள் நாயகத்துக்கே உரிய சிறப்புச் சலுகை என்று விளங்கியதால் தான் கப்ருகள் மீது அவர்கள் மரம் செடிகள் நட்டதாகக் காண முடியவில்லை.

மேலும் கப்ரு வேதனையைத் தமது காதுகளால் கேட்டதன் அடிப்படையில் தான் மட்டையை ஊன்றினார்கள். கப்ரு வேதனையைக் கேட்காத மற்றவர்கள் நபிகள் நாயகத்துடன் போட்டியிடுவது என்ன நியாயம்?

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *