கத்னாவுக்கு விருந்து உண்டா?
நகம் வெட்டுவது, அக்குள் முடிகளைக் களைவது, மர்மஸ்தானத்தின் முடிகளை நீக்குவது, மீசையைக் கத்தரிப்பது போன்ற செயல்களில் ஒன்று தான் கத்னா (விருத்தசேதனம்) செய்வது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : விருத்தசேதனம் செய்வது, மர்ம உறுப்பின் முடியைக் களைந்திட சவரக் கத்தியை உபயோகிப்பது, அக்குள் முடிகளை அகற்றுவது, நகங்களை வெட்டிக்கொள்வது, மீசையைக் கத்தரித்துக்கொள்வது ஆகிய இந்த ஐந்து விஷயங்களும் இயற்கை மரபுகளில் அடங்கும்
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 5889
நகம் வெட்டுவதற்கு ஒப்பான ஒன்றாகத்தான் நபியவர்கள் கத்னா செய்வதைக் குறிப்பிட்டுள்ளார்கள்.
நகம் வெட்டுவதற்கோ அக்குள் முடிகளைக் களைவதற்கோ மீசையைக் கத்தரிப்பதற்கோ யாரும் எந்த விருந்தும் வைப்பது கிடையாது. அது போன்று தான் கத்னாவிற்கு என்று நபியவர்கள் எந்த விருந்தையும் நமக்குக் கற்றுத் தரவில்லை. இது நபியவர்கள் காட்டித்தராத பித்அத் ஆகும்.
கத்னா செய்வது சுன்னத் என்று வலியுறுத்திய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பேரர்களான ஹஸன், ஹுஸைன் ஆகியோருக்கு கத்னா செய்ததை விளம்பரம் செய்ததில்லை. யாருக்கும் சொல்லவும் இல்லை. அழைக்கவும் இல்லை. அப்படி அவர்கள் செய்திருந்தால் எந்த ஆண்டு எந்த மாதம் எந்தக் கிழமையில் அது நடத்தப்பட்ட்து என்று ஹதீஸ்களில் பதிவு செய்யப்பட்டு இருக்கும். நபிகள் நாயகம் ஸல் அவர்லளின் நரைமுடி எத்தனை என்பதை எல்லாம் கவனித்து சமுதாயத்துக்கிச் சொன்ன நபித்தோழர்கள் ஹஸன் ஹுஸைன் ஆகியோரின் கத்னா எப்போது நடந்தது என்று சொல்லவில்லை என்பதே அது விளம்பரபடுத்தாமல் தான் நடந்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நமக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது.
இது போன்ற மார்க்கத்திற்கு மாற்றமான அனாச்சாரங்களைப் புறக்கணிப்பது அவசியமானதாகும்.
உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியா விட்டால் தமது நாவால் (தடுக்கட்டும்) அதுவும் முடியா விட்டால் தமது உள்ளத்தால் (வெறுத்து ஒதுங்கட்டும்) இந்த நிலையானது இறை நம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.
அறிவிப்பவர்: அபூஸயீதுல்குத்ரீ (ரலி)
நூல்: முஸ்லிம் 70