கண் தானம் செய்வது கூடும் என்று நீங்கள் சொல்வது சரியா?
கண்தானம் செய்யலாம் என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் கண்தானம் செய்த பின் ஒருவர் நல்லவராகவோ, அல்லது கெட்டவராகவோ இருக்கலாம். அப்படி கொடுத்தவர், அல்லது வாங்கியவர் நல்லவராக இருந்தால் அந்தக் கண் சொர்க்கத்திற்கு அல்லது நரகத்திற்குப் போகுமா?
ஒருவர் தன்னுடைய கண்களை தானம் செய்கின்றார் என்றால் இதன் மூலம் கண் தெரியாத இரண்டு பேருக்குப் பார்வை அளிக்கின்றார்.
ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்.
திருக்குர்ஆன் 5:32
என்ற வசனத்தின் அடிப்படையில் கண் தானம் என்பது நன்மையைப் பெற்றுத் தரக் கூடியது என்பதில் சந்தேகமில்லை.
இவ்வுலகில் உறுப்புகளைத் தானம் செய்வதற்கும் மறுமையில் எழுப்பப்படுவதற்கும் எவ்விதத் தொடர்புமில்லை.
இவ்வுலகில் நல்லவராக வாழ்நத ஒருவர் விபத்தில் கைகளை இழந்து விட்டால் அல்லது கண்களை இழந்து விட்டால் அவர் மறுமையிலும் கைகளை இழந்தவராக அல்லது கண்களை இழந்தவராக எழுப்பப்படுவார் என்பது கிடையாது.
மறுமையில் கெட்டவர்கள் குருடாக எழுப்பப்படுவார்கள் என திருக்குர்ஆன் கூறுகிறது.
எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம். என் இறைவா! நான் பார்வையுடையவனாக இருந்தேனே? ஏன் என்னைக் குருடனாக எழுப்பினாய்?” என்று அவன் கேட்பான். அப்படித் தான். நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன. அதை நீ மறந்தவாறே இன்று மறக்கப்படுகிறாய்” என்று (இறைவன்) கூறுவான்.
திருக்குர்ஆன் 20:124 – 126
கண்பார்வையுடன் இவ்வுலகில் வாழ்ந்தவன் இறைவனின் போதனையை மறுத்தால் குருடனாக எழுப்பப்படுவான் என இவ்வசனம் கூறுகிறது. குருடனாக எழுப்பப்படுவதற்குக் காரணம் அவன் நல்லவனாக வாழவில்லை என்பது தானே தவிர இவ்வுலகில் கண்ணை இழந்திருந்தான் என்பது அல்ல.
கண் இருந்தவனை குருடனாக எழுப்பிட அவனது நடத்தைதான் காரணம். அது போல் கண்ணற்றவன் இவ்வுலகில் நல்லவனாக வாழ்ந்தால் அவன் குருடனாக எழுப்பப்பட மாட்டான். அவனும் மற்ற நல்ல முஸ்லிம்களைப் போன்று இறைவனைக் காண்பான்.
மறுமையில் எழுப்பப்படும் தோற்றத்திற்கும், இவ்வுலகத் தோற்றத்திற்கும் எவ்விதத் தொடர்பு மில்லை என்பதைப் பல ஹதீஸ்கள் மற்றும் குர்ஆன் வசனங்கள் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.
அந்நாளில் சில முகங்கள் வெண்மையாகத் திகழும். வேறு சில முகங்கள் கறுத்திருக்கும்.
திருக்குர்ஆன் 3:106
அமெரிக்கர்களின் முகம் வெண்மையாகவும், ஆப்பிரிக்கர்களின் முகம் கருப்பாகவும் இருக்கும் என்று இதற்கு அர்த்தமில்லை.
மாறாக நல்லடியாராக வாழ்ந்த ஆப்பிரிக்கர் வெண்மையான முகத்துடன் வருவார். கெட்டவராக வாழ்ந்த வெள்ளையர் கருப்பானவராக வருவார்.
வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்.
திருக்குர்ஆன் 2:275
இவ்வுலகில் ஒருவன் உண்மையான பைத்தியமாக வாழ்ந்தாலும் அவனும் மறுமையில் பைத்தியமாகத் தான் எழுப்பப்படுவான் என்பது கிடையாது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தம் தேவைக்கு அதிகமாக) மக்களிடம் யாசிப்பவன் தன் முகத்தில் சிறிதளவு கூடச் சதை இல்லாதவனாக மறுமை நாளன்று வருவான்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல் : புகாரி 1475
ஒருவருக்கு இரண்டு மனைவிகள் இருந்து அவ்விருவருக்கும் மத்தியில் நீதமாக நடக்கவில்லையென்றால் மறுமையில் அவனுடைய ஒரு (தோள்) புஜம் சாய்ந்தவனாக வருவான்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
நூல் : திர்மிதி 1060
இவ்வுலகில் தோள் புஜம் சரிந்த ஒருவர் தன்னுடைய மனைவியரிடம் நீதமாக நடந்து கொண்டால் அவர் மறுமையில் சரியான தோற்றத்தில் தான் வருவார்.
ஈசா பின் தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நான் முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்களைத் தொழுகைக்கு அழைப்பதற்காக அவர்களிடம் அழைப்பாளர் (முஅத்தின்) வந்தார். அப்போது முஆவியா (ரலி) அவர்கள், மறுமை நாளில் மக்களிலேயே நீண்ட கழுத்து உடையவர்களாகத் தொழுகை அறிவிப்பாளர்கள் காணப்படுவார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டிருக்கிறேன் என்று சொன்னார்கள்.
நூல் : முஸ்லிம் 580
இவ்வுலகில் பாங்கு சொல்பவருக்கு கழுத்து குட்டையாக இருந்தாலும் அவர் மறுமையில் அழகிய தோற்றத்தில் கழுத்து நீண்டவராக வருவார்.
நுஐம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் உளூ தூய்மை செய்வதை நான் பார்த்தேன். அப்போது அவர்கள் தமது முகத்தையும், கைகளையும் கழுவிக் கொண்டே தோள்பட்டைவரை சென்றார்கள். பிறகு கால்களைக் கழுவிக் கொண்டே கணைக்கால் வரை சென்றார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மறுமை நாளில் என் சமுதாயத்தார் உளூ செய்ததன் அடையாளமாக உறுப்புகள் பிரகாசிப்பவர்களாய் வருவார்கள். ஆகவே, உங்களில் எவருக்கு (உளூவில் தம் பிரதான உறுப்புக்களை நீட்டிக் கழுவி) தமது ஒளியை நீட்டிக்கொள்ள முடியுமோ அவர் அதைச் செய்து கொள்ளட்டும்” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.
நூல் : முஸ்லிம் 363
இவ்வுலகில் உளூச் செய்யும் போது எவ்வித ஒளியும் உடலுறுப்புகளில் ஏற்படுவதில்லை. ஆனால் மறுமையில் ஒளி ஏற்படுகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது:
சொர்க்கத்தில் நுழையும் முதல் அணியினர் பௌர்ணமி இரவில் (ஒளி வீசும்) சந்திரனைப் போன்று தோற்றமளிப்பார்கள். பிறகு, அவர்களுக்கு அடுத்து வருபவர்கள் விண்ணில் நன்கு பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போன்று தோற்றமளிப்பார்கள். அவர்கள் மலஜலம் கழிக்கவும் மாட்டார்கள்; எச்சில் துப்பவும் மாட்டார்கள்; மூக்கு சிந்தவும் மாட்டார்கள். அவர்களுடைய சீப்புகள் தங்கத்தாலானவை. அவர்களுடைய வியர்வை கஸ்தூரி மணம் கமழும். அவர்களுடைய (நறுமணப் புகை போடும்) தூப கலசங்கள் அகில் கட்டையால் எரிக்கப்படும்.
அகில் என்பது நறுமணக் குச்சியாகும். அவர்களுடைய மனைவியர் அகன்ற விழிகளையுடைய கன்னியராவர். (சொர்க்கவாசிகளான) அவர்கள் ஒரே மனிதனின் அமைப்பில் படைக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் தங்களுடைய தந்தை ஆதம் (அலை) அவர்களின் தோற்றத்தில் வானத்தில் (முட்டும் விதத்தில்) அறுபது முழம் உயரமிருப்பார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 3327
மறுமையில் பவுர்ணமி சந்திரனைப் போன்று, பிரகாசமான நட்சத்திரம் போன்று அறுபது முழ உயரத்தில் சொர்க்கவாசிகள் இருப்பார்கள்.
இவ்வுலகில் தற்காலத்தில் எட்டு, பத்து அடி உயரமுள்ளவனாக மனிதன் இருப்பதே மிகவும் ஆச்சரியமாக உள்ளது. ஆனால் மறுமையில் 60 முழ உயரமுள்ளவனாக இருப்பார்கள்.
இவ்வுலகத் தோற்றத்திற்கும், மறுமையில் எழுப்பப்படுவதற்கும் எவ்விதத் தொடர்புமில்லை என்பதை மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
கண்தானம் செய்த ஒருவர் நல்லவராக வாழ்ந்தால் அவர் மறுமையில் கண்களுடன் தான் எழுப்பப்படுவார்.
நம்முடைய உடல் அடக்கம் செய்யப்பட்டு மண்ணோடு மண்ணாக மக்கிப் போன பிறகு உயிர் கொடுத்து எழுப்பும் இறைவனுக்கு இது இயலாத ஒன்றல்ல.
கண்தானம் செய்த ஒருவர் கெட்டவனாக வாழ்ந்தால் அவர் மறுமையில் குருடனாகத் தான் எழுப்பப்படுவார். அல்லது அவனுடைய கண்களோடு தான் நரகத்திற்குச் செல்வான்.
About Author
Sadhiq
அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.
[அல்குர்ஆன் 112:1]