கண்ணியத்திற்குரியவர்கள் யார்?
மக்களோடு மக்களாகக் கலந்திருக்கும் போதும் சரி; யாருமில்லாத தனிமையான சூழலில் இருக்கும் போதும் சரி; உண்மையான நல்லவர்களாக வாழ வேண்டும். இறைவனிடத்தில் கண்ணியத்திற்குரியவர்கள் என்ற பதவிக்குச் சொந்தக்காரர்களாக மாற முயற்சிக்க வேண்டும்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
“அல்லாஹ்வின் தூதரே! மக்களில் கண்ணியத்திற்குரியவர் யார்?’’ என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், “அவர்களில் இறையச்சமுடையவரே’’ என்று பதிலளித்தார்கள். மக்கள், “நாங்கள் இதைப் பற்றி உங்களிடம் கேட்கவில்லை’’ என்றனர். உடனே, நபி (ஸல்) அவர்கள், “அப்படியென்றால் அல்லாஹ்வின் தூதரான யூசுஃப் அவர்கள் தாம் (மக்களில் கண்ணியத்திற்குரியவர்கள்)’’ என்று சொன்னார்கள்.
ஆதாரம்: புகாரி 3490
யார் அல்லாஹ்வுக்கு அஞ்சி வெளிப்படையிலும் தனிமையிலும் பயபக்தியுடன் வாழ்கிறாரோ, அவரே மக்களில் கண்ணியத்திற்குரியவர் என்றார்கள். மேலும், இறையச்சத்தின் முன்மாதிரி நபி யூஸுஃப் (அலை) அவர்கள் தனிமையில் இருந்த போதும் கூட, அல்லாஹ்வின் அருளால் தன்னுடைய கற்பை, தன்னுடைய எஜமானியிடமிருந்து தற்காத்துக் கொண்டார். இவரும் மக்களில் கண்ணியத்திற்குரியவர் என்றார்கள்.
உலக மாந்தர்களிடத்திலும், பெரும் கூட்டத்திலும் நல்லவன் வேடம் போட்டு வாழ்ந்து விட்டு, நாம் இந்த உலகத்தில் பெறத் துடிக்கும் அற்பத்திலும் அற்பமான இன்பத்திற்காக, நம்முடைய அந்தரங்க வாழ்க்கை அசிங்கமானதாக மாறி விடுமானால், நம்மை அதலபாதாளத்தில் தள்ளி, மிகப்பெரும் இழிவைப் பெற்றுத் தந்து விடும்.
என்னைப் படைத்த இறைவனிடத்தில் நான் கண்ணியத்திற்குரியவன் என்ற மகத்தான பட்டத்தைப் பெறுவதற்காகவே வாழ்நாள் முழுவதும், இயன்றவரை என்னுடைய வாழ்க்கையைப் பட்டை தீட்டிக் கொள்வேன்; சீர்திருத்திக் கொள்வேன்; வெளிப்படையான வாழ்க்கையிலும், அந்தரங்கமான தனிமையிலும் இறைவனுக்கு அஞ்சி நடப்பேன் என்ற சபதத்தை உளமாற ஏற்று நடப்போமாக!
பாவங்களில் வெளிப்படையானதையும், இரகசியமானதையும் விட்டு விடுங்கள்! பாவத்தைச் செய்தோர், தாம் செய்து வந்ததன் காரணமாகத் தண்டிக்கப்படுவார்கள்.
அல்குர்ஆன் 6:120