கடைசி நேரத்தில் நம்பிக்கை (ஈமான்) கொள்ளுதல்
இவ்வசனங்களில் (4:18, 6:158, 10:91, 10:98) கடைசி நேரத்தில் நம்பிக்கை கொள்வது இறைவனால் ஏற்கப்படுமா என்பது குறித்து பேசப்படுகிறது.
ஒரு மனிதன் இஸ்லாத்தை எப்போது வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்ளலாம். அதை இறைவன் அங்கீகரித்துக் கொள்வான்.
ஆனால் இறைத்தூதர்கள் வாழும் காலங்களில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களை இறைவன் அழிக்கும் நேரத்தில் ஒருவன் நம்பிக்கை கொண்டால் அந்த நம்பிக்கை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படாது.
ஃபிர்அவ்ன் கடலில் மூழ்கடிக்கப்படும்போது நான் நம்பிக்கை கொள்கிறேன் எனக் கூறியதை இறைவன் ஏற்றுக் கொள்ளவில்லை என்று 10:91 வசனம் கூறுகிறது.
இறைத்தூதர்கள் வாழும் காலத்தில் தீயவர்கள் அழிக்கப்படுவதற்கு முன்னர் அதற்கான அறிகுறிகளை மட்டும் அல்லாஹ் காட்டும்போது ஒருவர் நம்பிக்கை கொண்டால் அதை இறைவன் ஏற்றுக் கொள்வான்.
யூனுஸ் நபியின் சமுதாயத்தினர் தங்களுக்கு தண்டனை வரப்போகிறது என்பதற்கான அறிகுறிகளைக் கண்டவுடன் நம்பிக்கை கொண்டனர். இதை இறைவன் ஏற்றுக் கொண்டது மட்டுமின்றி மற்றவர்களும் இப்படி நடந்திருக்கக் கூடாதா என்று 10:98 வசனத்தில் கேட்கிறான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின்னர் இறைத்தூதர்கள் வரமாட்டார்கள் என்பதால் இந்த நிலை நபிகள் காலத்துக்குப் பின்னால் வாழும் மக்களுக்கு ஏற்படாது. அவர்கள் எப்போது நம்பிக்கை கொண்டாலும் அது இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படும்.
ஆனால் உலகம் அழிக்கப்படுவதற்கு முன்னர் அதற்கான அடையாளங்கள் சிலவற்றை அல்லாஹ் காட்டுவான். அதன்பின் இறைவனை ஒருவன் நம்பினால் அது இறைவனால் ஏற்கப்படாது.
(முஹம்மதே!) வானவர்கள் அவர்களிடம் வருவதை, அல்லது உமது இறைவன் வருவதை, அல்லது உமது இறைவனின் சில சான்றுகள் வருவதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்களா? உமது இறைவனின் சில சான்றுகள் வரும் நாளில், ஏற்கனவே நம்பிக்கை கொண்டவர்களையும், நம்பிக்கையோடு நல்லறங்களைச் செய்தவர்களையும் தவிர எவருக்கும் அவரது நம்பிக்கை பயன் தராது. “நீங்களும் எதிர்பாருங்கள்! நாங்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்” எனக் கூறுவீராக! என 6:158 வது வசனம் கூறுகிறது.
இறைவனின் சில சான்றுகள், அத்தாட்சிகள் என்பது என்ன? அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளனர்.
கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கில் உதிக்கும் வரை யுகமுடிவு நாள் வராது. அவ்வாறு உதிக்கும்போது யாரேனும் நம்பிக்கை கொண்டால் அந்த நம்பிக்கை பயன் தராது. அதைத்தான் இவ்வசனத்தில் (6:158) அல்லாஹ் கூறுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளனர்.
(புகாரி 6506, 6535, 7121)
அது போல் உயிர் பிரியும் நேரத்தில் மன்னிப்பு கேட்பதும், அந்த நேரத்தில் இஸ்லாத்தை ஏற்பதும் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படாது என 4:19 வசனம் கூறுகிறது.