கடவுள் தேவைகளற்றவன்
பொதுவாகக் கடவுள் மறுப்பாளர்கள் உருவானதற்குக் காரணமாக இருந்தது மதத்தின் பெயரால் நடக்கும் சுரண்டல் தான். கடவுளுக்குக் காணிக்கைகள் போடப்படுகின்றன. போடப்படும் காணிக்கைகள் கடவுளுக்குப் போகவில்லை என்பதையும் கடவுளுக்குப் பூஜை நடத்துபவர்களே அவற்றைப் பங்கிட்டுக் கொள்வதையும் நேரடியாகப் பார்க்கிறார்கள். கடவுளின் பெயரைச் சொல்லி நம்மை ஏமாற்றுகிறார்களே? என்ற கோபம் ஏற்படுகிறது. இந்தக் கோபத்தின் வெளிப்பாடு தான் கடவுள் மறுப்புக் கொள்கை.
நமது கோரிக்கைகளை நிறைவேற்றும் ஆற்றல் உள்ளவர் என்று நம்பப்படும் கடவுளுக்கு முன்னால் உணவுப் பொருட்கள் படைக்கப்படுகின்றன. அவற்றை அந்தக் கடவுள் சாப்பிடுவதில்லை. கடவுளுக்கு காட்டப்படும் உணவுப் பொருளின் சக்தியை மட்டுமாவது அவர் உறிஞ்சி எடுத்துக் கொள்கிறாரா? என்றால் அதுவுமில்லை. கடவுளுக்குப் படைத்து விட்டு அதை மனிதர்கள் தான் உண்கிறார்கள். கடவுளை மறுத்துத் தான் ஆக வேண்டும் என்ற எண்ணத்தை இது மேலும் வலுப்படுத்துகிறது.
கடவுளை ரப்புல் ஆலமீன் என்று நம்பினால் கடவுளின் பெயரால் எந்தச் சுரண்டலும் நடக்காது. எவரது சுயமரியாதையும் இதனால் பாதிக்கப்படாது. ஏனெனில் ரப்புல் ஆலமீன் – அனைத்தையும் பரிபாலனம் செய்பவன் என்பதில் அவன் எந்தத் தேவையும் அற்றவன் என்ற கருத்தும் உள்ளடங்கியுள்ளது. நான் உங்களுக்குத் தேவையானதைத் தந்து உங்களைப் பரிபாலிக்கக் கூடியவனே தவிர உங்களிடம் எதையும் கேட்பவனல்லன் என்று கூறி கடவுளின் பெயரால் நடக்கும் சுரண்டலையும் ஒழித்துக் கட்டுகிறான் அல்லாஹ்.
பத்தியையும், சாம்பிரானியையும், சர்க்கரையையும் கொண்டு வா! என்று தன் பக்தனிடத்தில் கேட்பவனும், தேங்காயும், வாழைப்பழமும், பூமாலையும் கொண்டு வா என்று தன் அடிமையிடத்தில் எதிர்பார்ப்பவனும் மெழுகுவர்த்தியையும், காணிக்கையையும் தந்தாக வேண்டும் என்று தன் படைப்புகளிடம் வேண்டுபவனும் அல்ல நான். உங்கள் அனைவருக்கும் எல்லாவற்றையும் தந்து உதவுபவன் நான் என்பதை ரப்புல் ஆலமீன் என்று கூறுவதன் மூலம் அல்லாஹ் விளக்குகின்றான்.
உங்கள் இறைவனாகிய நான் தீப ஆராதனைகளையும், சந்தனம் பால் அபிஷேகத்தையும் பக்தனிடம் வேண்டுபவனோ படைப்புக்களால் பாதுகாக்கப்படுபவனோ வெயில் மழை போன்றவற்றிலிருந்து தன் அடிமையினால் காக்கப்படுபவனோ அல்லன். உங்கள் அனைவரையும் காத்துக் கொண்டிருக்கும் ரப்புல் ஆலமீன் ஆவேன் என்று அல்லாஹ் விளக்குகின்றான்.
கடவுள் தன் படைப்புகளின் தேவைகளை நிறைவேற்றுபவனாக இருக்க வேண்டுமே தவிர படைப்புகளிடம் எதையும் எதிர்பார்ப்பவனாக இருக்கக் கூடாது என்று தெளிவாகவும் பல வசனங்களில் அல்லாஹ் குறிப்பிடுகிறான். அந்த வசனங்கள் யாவும் ரப்புல் ஆலமீன் என்பதன் விளக்கவுரைகளே.
அவர்களுக்கு நடக்கின்ற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கின்ற காதுகள் உள்ளனவா? உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்! என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் 7:195)
மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைச் செவிதாழ்த்திக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.
(அல்குர்ஆன் 22:73)
அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது. (எதையும்) தெரிவிக்க நீங்கள் அவர்களை அழைத்தால் அவர்கள் செவியுற மாட்டார்கள். அவர்கள் உம்மைப் பார்ப்பது போல் நீர் காண்பீர்! (ஆனால்) அவர்கள் பார்க்க மாட்டார்கள்.
(அல்குர்ஆன் 7:197,198)
அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைக்கின்ற, உங்கள் தெய்வங்கள் பூமியில் எதனைப் படைத்தன? என்று எனக்குக் காட்டுங்கள்! அல்லது வானங்களிலாவது அவர்களுக்குப் பங்கு உண்டா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! என்று கேட்பீராக! அல்லது அவர்களுக்கு நாம் ஒரு வேதத்தை அளித்து அதனால் (கிடைத்த) தெளிவில் அவர்கள் இருக்கிறார்களா? இல்லை. இந்த அநியாயக்காரர்களில் ஒருவருக்கொருவர் மோசடியையே வாக்களிக்கின்றனர்.
(அல்குர்ஆன் 35:40)
அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.
(அல்குர்ஆன் 16:20, 21)
கடவுள் என்பவன் அனைத்தையும் படைத்தவனாகவும், அனைத்தையும் பரிபாலிப்பவனாகவும் இருக்க வேண்டும். எதையும் செய்ய இயலாமலும், பரிபாலிக்க இயலாமலும் இருப்போர் கடவுளாக முடியாது என்பதை இவ்வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன. ரப்புல் ஆலமீன் (அகில உலகையும் படைத்துப் பரிபாலிப்பவன்) என்பதன் விளக்கவுரைகளே இவ்வசனங்கள்.
ரப்புல் ஆலமீன் என்பதற்கு, அனைவரும் அவனது அடிமைகளே என்றும், கடவுள் ஒருவரே என்றும், கடவுள் தேவைகளற்றவன் என்றும், பொருள் இருப்பது போல் ரப்புல் ஆலமீன் என்ற சொற்றொடர் மற்றொரு கருத்தையும் உள்ளடக்கி இருக்கின்றது.