கடன் வாங்க வேண்டாம்.! கடன் விஷயத்தில் கண்டிப்பு
கடன் வாங்குவது, வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவது ஆகியவற்றில் இஸ்லாம் கடுமையான நிலைபாட்டைக் கொண்டுள்ளது.
ஜனாஸாத் தொழுகை நடத்துவதற்காக ஒருவரது உடல் கொண்டு வரப்பட்டது. இவர் கடனாளியா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டபோது, நபித்தோழர்கள் இல்லை என்றனர். அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள்.
பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டபோது, இவர் கடனாளியா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் ஆம் என்றனர். அப்படியென்றால் உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள்! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூகத்தாதா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! இவரது கடனுக்கு நான் பொறுப்பு என்று கூறியதும், அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள்.
நூல் : புகாரி 2295
கடன்பட்டு இறந்தவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் (ஜனாஸாத் தொழுகைக்காகக்) கொண்டு வரப்படுவார். அப்போது இவர் கடனை அடைக்க ஏதேனும் விட்டுச் சென்றிருக்கிறாரா? என்று கேட்பார்கள். கடனை அடைப்பதற்குப் போதுமானதை விட்டுச் சென்றிருக்கிறார் என்று கூறப்பட்டால் (அவருக்காகத்) தொழுகை நடத்துவார்கள். இல்லையென்றால், நீங்கள் உங்கள் தோழருக்காகத் தொழுகை நடத்துங்கள்! என்று முஸ்லிம்களிடம் கூறிவிடுவார்கள்.
அல்லாஹ் அவர்களுக்கு மிகுதியான வெற்றிகளைக் கொடுத்தபோது (அதன் மூலம் செல்வம் குவிந்ததால்) மூமின்களைப் பொறுத்தவரை அவர்கள் விஷயத்தில் நானே அதிக உரிமையுடையவன்! மூமின்களில் யாரேனும் கடன்பட்ட நிலையில் இறந்துவிட்டால் அதை நிறைவேற்றுவது என் பொறுப்பாகும். யாரேனும் செல்வத்தை விட்டுச் சென்றால் அது அவர்களின் வாரிசுகளுக்குரியதாகும் என்று கூறினார்கள்.
நூல் : புகாரி 2298
கடன்பட்ட நிலையில் ஒருவர் மரணித்து விட்டால் மறுமை நாளில் அவரது நன்மைகள் கடன் கொடுத்தவர் கணக்கில் சேர்க்கப்பட்டு விடும். இந்த நிலையை யாரும் அடையக் கூடாது என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தாமல் புறக்கணித்துள்ளார்கள். நாம் கடனாளியாக மரணித்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிரார்த்தனை நமக்குக் கிடைக்காமல் போய்விடும் என்ற அச்சம் காரணமாக கடனில்லாமல் மரணிக்க நபித்தோழர்கள் முயற்சிப்பார்கள் என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதில் கடுமை காட்டியுள்ளனர்.
நபித்தோழர்களின் நிலையே இதுவென்றால் நாம் கடன் வாங்கினால் என்னவாகும் என்ற அச்சம் அனைத்து முஸ்லிம்களுக்கும் ஏற்படவேண்டும்.
எனவே இயன்றவரை யாருக்கும் கடனாளியாக இல்லாமல் நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.