இஸ்லாமியப் பொருளாதாரத்தின் பார்வையில் கடன் அட்டைகளை நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டிய காரணங்கள் யாவை?
பொதுவாக வட்டியுடன் தொடர்புடைய எவ்வித கொடுக்கல்வாங்களாக இருந்தாலும் அது இஸ்லாமியப் பொருளாதாரப் பார்வையில் அது தடுக்கப்பட வேண்டும்; தவிர்க்கப்பட வேண்டும் என்பதே கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதை தடுத்துக் கொள்ள வேண்டுமென்பதன் அடிப்படைக் காரணம்.
கடன் அட்டைகளை தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டு பின் அவ்விதம் பயன்படுத்திய தொகைக்கான வட்டி கணக்கிடப்படும் தேதிக்கு முன்பே பணத்தை கடன் அட்டைகளை வழங்கும் நிறுவனத்திடம் செலுத்திவிட்டால் வட்டி இல்லாமல் தவிர்த்துக் கொள்ளலாமே! என்று சிலர் வாதிடுகிறார்கள். இந்த வாதம் இரு விதங்களில் தவறு என்று இஸ்லாமியப் பொருளாதார அறிஞர்கள் கூறுகிறார்கள்.
ஒன்று, கிரெடிட் கார்டுகளை பெற்றுக் கொள்ளும் முன்பு அவற்றை வழங்கும் நிறுவனத்துடன் நாம் ஒரு ஒப்பந்தத்தை செய்து கொள்கிறோம். அந்த ஒப்பந்தத்தின் ஷரத்துக்களின்படி தாமதமாகும் நாட்களுக்கு குறிப்பிட்ட சதவீதத்தில் வட்டி செலுத்த நாம் ஒப்புக் கொண்டு கை எழுத்திட வேண்டும். இத்தகைய கையெழுத்திடும் ஒப்பந்தம் இஸ்லாமிய பொருளாதார விதிகளின்படி ஹராமானது/ விலக்கப்பட வேண்டியது.
இரண்டாவதாக, நாம் கடன் அட்டைகளைப் பயன்படுத்தி வாங்கும் பொருள்கள் மற்றும் சேவைகளுக்குரிய பணத்தை வட்டி கணக்கிடபப்டும் தேதிக்கு முன்பே செலுத்திவிடுவோம் என்பதற்கு எவ்வித உத்திரவாதமும் கிடையாது. சில நேரங்களில் நமது பணக் கையிருப்பு எதிர்பாராதகாரனங்க்களால் குறைவாக இருந்துவிட்டாலோ அல்லது நமது கவனக் குறைவாலோ குறிப்பிட்ட தேதிக்குள் பணம் செலுத்தாவிட்டால் வட்டியின் வலையில் விழும் வாய்ப்புக்கள் அதிகம். ஒருமுறை வட்டி, நமது வாழ்வில் அரங்கேற்றம் ஆகிவிட்டால் பலமுறை அது பாலச்சந்தர் படம் போல நமது கதவுகளைத் தட்டும். ஆகவே நெருப்போடு விளையாடுவதை தவிர்த்துக் கொள்வதே நல்லது.
வட்டியைப் பற்றி இறைவன் தனது திருமறையிலும் பெருமானார் ( ஸல்) அவர்கள் தனது நபி மொழிகளிலும் தந்திருக்கும் எச்சரிக்கைகளை ஏற்கனவே தனி அத்தியாயத்தில் கண்டு இருக்கிறோம் . மீண்டும் கீழ்க்கண்டவற்றை நினவு படுத்திக் கொள்வோம். வட்டியோடு தொடர்புடைய கடன் அட்டையை வாங்குவதையும் பயன்படுத்துவதையும் தவிர்த்துக் கொள்வோம்.
“யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய்) எழ மாட்டார்கள்; இதற்குக் காரணம் அவர்கள், ‘நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே’ என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான் ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது – என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்” (அல்குர்ஆன் 2:275)
“வட்டி வாங்கிப் புசிப்பவன், அதனைப் புசிக்க வைப்பவன், அதற்காக (கணக்கு) எழுதுபவன், அதற்கு சாட்சியம் கூறும் இருவர் ஆகியோரைப் பெருமானார் (ஸல்) அவர்கள் சபித்துவிட்டு, அத்தனை பேரும் (குற்றத்தில்) சமமானவர்” என்பதை அறிவிப்பவர் ஜாபிர் (ரலி), ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்.