கடனை நிறைவேற்றிய பிறகே சொத்தைப் பிரிக்க வேண்டுமா?
ஒருவர் மரணித்த பின்னர் அவர் செய்த மரணசாசனம் எனும் வஸிய்யத்தையும், கடனையும் நிறைவேற்றிய பிறகுதான் வாரிசுகள் சொத்துக்களைப் பிரிக்க வேண்டும் என்று இஸ்லாம் நமக்கு வழிகாட்டுகிறது.
…..(இவை யாவும்) அவர் செய்த மரண சாசனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரே.
திருக்குர்ஆன் 4:11
உங்கள் மனைவியருக்குக் குழந்தை இல்லாவிட்டால் அவர்கள் விட்டுச் சென்றதில் பாதி உங்களுக்கு உண்டு. அவர்களுக்குக் குழந்தை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதில் கால்பாகம் உங்களுக்கு உண்டு. அவர்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பிறகே (பாகம் பிரிக்க வேண்டும்). உங்களுக்குக் குழந்தை இல்லாவிட்டால் நீங்கள் விட்டுச் சென்றதில் கால்பாகம் உங்கள் மனைவியருக்கு உண்டு. உங்களுக்குக் குழந்தை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம் அவர்களுக்கு உண்டு. நீங்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பின்பே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்).
இறந்த ஆணோ, பெண்ணோ பிள்ளை இல்லாதவராக இருந்து அவர்களுக்கு ஒரு சகோதரனும், ஒரு சகோதரியும் இருந்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உள்ளது. அதைவிட அதிகமாக இருந்தால் மூன்றில் ஒரு பங்கில் அவர்கள் அனைவரும் கூட்டாளிகள். செய்யப்பட்ட மரண சாசனம், மற்றும் கடனுக்குப் பிறகே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்.) (இவை அனைத்தும் யாருக்கும்) பாதிப்பு ஏற்படாத வகையில் (செய்யப்பட வேண்டும்.) இது அல்லாஹ்வின் கட்டளை. அல்லாஹ் அறிந்தவன்; சகிப்புத் தன்மை மிக்கவன்.
திருக்குர்ஆன் 4.11.12
ஒருவர் மரணித்தால் அவரது கடனை அடைத்த பின்னர்தான் வாரிசுகள் சொத்தைப் பிரிக்க வேண்டும் என்று மேற்கண்ட வசனங்களில் அல்லாஹ் கட்டளை இடுகிறான்.
ஆனால் நம்மில் அதிகமானவர்கள் இப்படி நடப்பதில்லை. பெற்றோரின் கடனைத் தீர்க்காவிட்டால் நம்முடைய பெற்றோரின் மறுமை வாழ்க்கை பாழாகிப் போய்விடும் என்பதுகூட அவர்களுக்குத் தெரிவதில்லை.
பெற்றோர்கள் சொத்துக்கள் எதையும் விட்டு வைக்காமல் கடனை மட்டும் வைத்து விட்டு மரணித்து விட்டால் அப்போது அவரது பிள்ளைகள் அந்தக் கடனைச் சுமக்க வேண்டும்; அந்தக் கடனை அடைப்பது அவர்களின் கடமையாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர்.
ஜுஹைனா கூட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ந்து அதை நிறைவேற்றாமல் இறந்துவிட்டார். அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஆம்! அவர் சார்பாக நீ ஹஜ் செய். உன் தாய்க்குக் கடன் இருந்தால் நீதானே அதை நிறைவேற்றுவாய். எனவே அல்லாஹ்வின் கடன்களை நிறைவேற்றுங்கள். கடன்கள் நிறைவேற்றப்படுவதற்கு அல்லாஹ் அதிகம் உரிமை படைத்தவன் என்றார்கள்.
நூல் : புகாரி 1852, 6697, 7315
பெற்றோர்கள் பட்ட கடனை அடைப்பது பிள்ளைகளின் கடமை என்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.
தனக்கு மரணம் நெருங்கிவிட்டதை ஒருவர் உணரும்போது தீர்க்கப்படாத கடன் இருந்தால் வாரிசுகளை அழைத்து எப்படியாவது கடனை அடைக்குமாறு வஸிய்யத் செய்ய வேண்டும்.
இப்படித்தான் நபிகள் நாயகம் (ஸல்) தம் தோழர்களை உருவாக்கி இருந்தார்கள்.
உஹதுப் போர் நடக்கவிருந்தபோது என் தந்தை அன்றிரவு என்னை அழைத்தார்கள். நபித்தோழர்களில் முதலில் கொல்லப்படுவோரில் நானும் ஒருவனாக இருப்பேன் என்று நான் கருதுகிறேன். நபிகள் நாயகத்துக்கு அடுத்தபடியாக நான் விட்டுச் செல்லும் நபர்களில் நீயே எனக்கு மிகவும் விருப்பமானவன். எனக்குக் கடன் உள்ளது. அதை நீ அடைப்பதுடன் உனது சகோதரிகளிடம் நல்ல முறையில் நடந்துகொள்! என்றார்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல் : புகாரி 1351