கடந்த மற்றும் எதிர்வரும் ஓராண்டிற்கான மன்னிப்பின் நாள்
ஹஜ் செய்பவர்கள் அரஃபா என்ற பெரு வெளியில் கூடி இருக்கின்ற போது, படைத்த இறைவன் நெருங்கி வந்து தனது அருள் மழையைப் பொழிகின்றான்.
ஹாஜிகளாக இல்லாத, ஹஜ்ஜுக்குச் செல்லாத மற்ற முஸ்லிம்கள் அரஃபா நாளின் பாக்கியத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அரிய வாய்ப்பையும், மகத்தான பாக்கியத்தையும் நமக்கு வழங்கியிருக்கின்றார்கள்.
“துல்ஹஜ் ஒன்பதாவது நாள் (அரஃபா) அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்: முஸ்லிம் 2151
அரஃபா தினத்தில் ஹாஜிகள் அல்லாத மற்றவர்கள் பிறை ஒன்பது அன்று ஒரு நோன்பு நோற்றால் முந்தைய ஓராண்டு மற்றும் பின்னால் வர இருக்கின்ற ஓராண்டுப் பாவத்திற்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று கூறி அல்லாஹ்வின் மகத்தான அருளுக்குச் சொந்தக்காரர்களாக நம்மை மாற்றுகின்ற செயலை நமக்குக் கற்றுத் தருகின்றார்கள்.
பிறை ஒன்பது அன்று ஒரே ஒரு நாள் ஹஜ்ஜுக்குச் செல்லாதவர்கள் நோற்கின்ற நோன்பின் மூலமாக பின்னால் வர இருக்கின்ற ஒரு வருட காலம் நாம் செய்ய இருக்கின்ற பாவத்திற்கு இப்போதே பாவமன்னிப்பிற்கு முன்பதிவு செய்து விடுகின்ற அளவுக்கு சிறப்பிற்குரிய நாள் இந்த அரஃபா நாள்.
இந்த ஒரு நாள் நோன்பு என்பது கிட்டத்தட்ட 730 நாட்கள். அதாவது, முந்தைய ஒருவருட பாவத்திற்கும், பின்னால் வர இருக்கின்ற ஒருவருட பாவத்திற்கும் மன்னிப்பைப் பெற்றுத் தருகின்ற ஒரு அற்புதமான வாய்ப்பாகும்.
துல்ஹஜ் மாதம் முதல் பத்து நாட்கள் என்பது இறைவனின் பார்வையில் போர் செய்வதை விட சிறந்த நாட்கள் என்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்கு வழிகாட்டியிருக்கின்றார்கள்.
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள் அதிகப்படியான அமல்களைச் செய்து அல்லாஹ்வின் அருளையையும் மன்னிப்பையும் பெறுவதற்கு கடுமையாக முயற்சிக்க வேண்டும்.