ஈமானுக்கு பிறகு முதலில் தொழுகை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு அனுப்பிவைத்த போது சொன்னார்கள்: நீங்கள் வேதக்காரர்களில் ஒரு சமுதாயத்தாரிடம் செல்கிறீர்கள். ஆகவே, அவர்களுக்கு நீங்கள் விடுக்கும் முதலாவது அழைப்பு, (ஏக இறைவனான) அல்லாஹ் ஒருவனையே வழிபடுங்கள் என்பதாகவே இருக்க வேண்டும்.

அவர்கள் அல்லாஹ்வை (ஏகன் என்று) ஏற்றுக் கொண்டால், அல்லாஹ் அவர்கள் மீது (நாளொன்றுக்கு) இரவிலும் பகலிலும் ஐந்து தொழுகைகளைக் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களுக்குத் தெரிவியுங்கள்.

தொழுகையை அவர்கள் நிறைவேற்றினால், அவர்களில் செல்வர்களாயிருப்பவர்களிடமிருந்து வசூலிக்கப்பெற்று அவர்களில் ஏழைகளாயிருப்பவர்களிடையே விநியோகிக்கப்பட வேண்டிய ஸகாத்தை அல்லாஹ் அவர்கள் மீது கடமையாக்கியுள்ளான் என்று அவர்களுக்குத் தெரிவியுங்கள்.

இதற்கு அவர்கள் கட்டுப்பட்டால் அவர்களிடமிருந்து ஸகாத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். ஆனால், மக்களின் செல்வங்களிலிருந்து உயர்ந்தவற்றைத் தவிர்த்துவிடுங்கள். (அவற்றை ஸகாத்தாகப் பெறாதீர்கள்).

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி); நூல்: முஸ்லிம்-31

வெற்றிக்கு வழிகாட்டும் தொழுகை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தொழுகையை) நிலைநாட்டுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்! உங்களுடைய நல்லறங்களில் மிகவும் சிறந்தது தொழுகை தான். முஃமினைத் தவிர வேறு யாரும் உலூவில் பேணுதலாக இருக்க மாட்டார்கள்.

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி); நூல்: அஹ்மத்-22467

தொழுகை விட்டவன் நரகை சந்திப்பான்

தொழுகையை விட்டுவிட்டால் அவன் காஃபிராக மாறிவிட்டான் என்றும், அவன் திருந்தி, நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றும் அல்லாஹ் கூறுகின்றான்.

அவர்களுக்குப் பின்னர் வழித் தோன்றல்கள் வந்தனர். அவர்கள் தொழுகையைப் பாழாக்கினர். மனோ இச்சைகளைப் பின்பற்றினர். அவர்கள் பின்னர் இழப்பைச் சந்திப்பார்கள். திருந்தி நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவரைத் தவிர. அவர்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 19: 59,60)

உளு செய்தால்

கடமையான உபரியான எந்த தொழுகைக்கும் உளூ எனும் அங்குத் தூய்மை அவசியமாகும். அந்த தூய்மைக்கும் அல்லாஹ் நன்மைகளை வழங்குகின்றான்.

சிரமமான சூழ்நிலைகளில் அங்கத் தூய்மையை முழுமையாகச் செய்தால் முந்தைய சிறு பாவங்கள் மன்னிக்கப்படும். அல்லாஹ் தவறுகளை மன்னித்து, தகுதிகளை உயர்த்துவான். உளூ செய்யும் போது முகத்தைக் கழுவினால் கண்கள் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்,

கைகளை கழுவினால் கைகளால் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும், கால்களை கழுவினால் கால்களால் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும், உளூ செய்ததன் அடையாளமாக(ப் பிரதான) உறுப்புகள் பிரகாசிப்பவர்களாய் மறுமையில் எழுப்படுவார். இதுப் போன்ற பல நன்மைகளை இஸ்லாம் கூறுகிறது.

உஸ்மான் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமை ஹும்ரான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களிடம் அங்கத் தூய்மை செய்வதற்கான தண்ணீர் கொண்டுவந்தேன். அவர்கள் அங்கத் தூய்மை செய்தார்கள். பிறகு அவர்கள் கூறினார்கள்: சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஹதீஸ்களை அறிவிக்கின்றனர்.

ஆனால், அவற்றின் நிலை என்ன என்று எனக்குத் தெரியாது. ஆயினும், (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இதோ) இப்போது நான் செய்த அங்கத் தூய்மை போன்று அங்கத் தூய்மை செய்ததை நான் பார்த்தேன். பிறகு “யார் இவ்வாறு அங்கத் தூய்மை செய்கின்றாரோ, அவரது முந்தைய (சிறு) பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும். பிறகு அவர் தொழும் தொழுகையும் பள்ளிவாசலை நோக்கி அவர் நடப்பதும் அவருக்குக் கூடுதலா(ன வணக்கமா)க மாறிவிடும்” என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம்-388

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(உங்கள்) தவறுகளை அல்லாஹ் மன்னித்து, தகுதிகளை உயர்த்தும் செயல்கள் சிலவற்றை உங்களுக்கு நான் சொல்லட்டுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “ஆம்; (சொல்லுங்கள்) அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அவை:) சிரமமான சூழ்நிலைகளிலும் அங்கத் தூய்மையை முழுமையாகச் செய்வதும், பள்ளிவாசல்களை நோக்கி அதிகமான காலடிகளை எடுத்துவைத்துச் செல்வதும், ஒரு தொழுகைக்குப் பின் அடுத்தத் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் ஆகும். இவைதாம் கட்டுப்பாடுகளாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி); நூல்: முஸ்லிம்-421

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு “முஸ்லிமான’ அல்லது “முஃமினான’ (இறைநம்பிக்கை கொண்ட) அடியார் உளூ செய்யும் போது முகத்தைக் கழுவினால், கண்களால் பார்த்துச் செய்த பாவங்கள் அனைத்தும் (முகத்தைக் கழுவிய) “நீருடன்’ அல்லது “நீரின் கடைசித் துளியுடன்’ முகத்திலிருந்து வெளியேறுகின்றன.

அவர் கைகளைக் கழுவும் போது கைகளால் பற்றிச் செய்திருந்த பாவங்கள் அனைத்தும் (கைகளைக் கழுவிய) “தண்ணீருடன்’ அல்லது “தண்ணீரின் கடைசித் துளியுடன்’ வெளியேறுகின்றன. அவர் கால்களைக் கழுவும் போது, கால்களால் நடந்து செய்த பாவங்கள் அனைத்தும் (கால்களைக் கழுவிய) “நீரோடு’ அல்லது “நீரின் கடைசித் துளியோடு’ வெளியேறுகின்றன. இறுதியில், அவர் பாவங்களிலிருந்து தூய்மை அடைந்தவராக (அந்த இடத்திலிருந்து) செல்கிறார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); நூல்: முஸ்லிம்-412

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் முறையாக உளூ செய்யும் போது (அவர் செய்திருந்த) அவருடைய (சிறு) பாவங்கள் அவரது உடலிருந்து வெளியேறிவிடுகின்றன. முடிவில், அவருடைய நகக்கண்களுக்குக் கீழேயிருந்தும் (அவருடைய பாவங்கள்) வெளியேறிவிடுகின்றன.

அறிவிப்பவர்: உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)

நூல்: முஸ்லிம்-413

மறுமையில் ஒளிவீசும் உறுப்புகள்

அபூஹுரைரா (ரலி) அவர்கள் உளூ செய்வதை நான் பார்த்தேன். அப்போது அவர்கள் தமது முகத்தையும் கைகளையும் கழுவிக் கொண்டே தோள்பட்டை வரை சென்றார்கள். பிறகு கால்களைக் கழுவிக்கொண்டே கணுக்கால் வரை சென்றார்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மறுமை நாளில் என் சமுதாயத்தார் உளூ செய்ததன் அடையாளமாக உறுப்புகள் பிரகாசிப்பவர்களாய் வருவார்கள். ஆகவே, உங்களில் எவருக்கு (உளூவில் தம் பிரதான உறுப்புக்களை நீட்டிக் கழுவி) தமது ஒளியை நீட்டிக்கொள்ள முடியுமோ அவர் அதைச் செய்து கொள்ளட்டும்” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.

அறிவிப்பவர்: நுஐம் பின் அப்தில்லாஹ்; நூல்: முஸ்லிம்-415,

கவ்ஸர் தடாகத்தில் நீரறுந்தும் பாக்கியம்

தொழுகையாளிகளுக்குக் கிடைக்கும் மிகப்பெரும் பாக்கியங்களில் ஒன்று தான் மறுமையில் கவ்ஸர் தடாகத்தில் நீரறுந்தும் பாக்கியம். தொழுகையாளிகளைத் தவிர மற்றவர்கள் இதனை அடைந்து கொள்ள முடியாது.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: “(மறுமையில் எனக்கு வழங்கப்படவிருக்கும் “அல்கவ்ஸர்’ எனும்) எனது நீர்த் தடாக(த்தின் இரு கரைகளுக்கிடையேயான தூர)மானது, (தென் அரபகத்திலுள்ள) “அதன்’ நகரத்திலிருந்து (வட அரபகத்திலுள்ள) “அய்லா’ நகரத்தைவிட அதிகத் தொலைவுடையதாகும். அ(தன் நீரான)து, பனிக்கட்டியைவிட மிகவும் வெண்மையானது; பால் கலந்த தேனைவிட மதுரமானது. அதன் பாத்திரங்கள் விண்மீன்களின் எண்ணிக்கையை விட அதிகமானவை.

ஒருவர் தமது நீர்த் தொட்டியை விட்டும் (பிற) மக்களின் ஒட்டகங்களைத் தடுப்பதைப் போன்று, நான் அந்தத் தடாகத்தை விட்டும் மக்கள் சிலரைத் தடுப்பேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அன்றைய தினம் (உங்கள் சமூகத்தாராகிய) எங்களை நீங்கள் அடையாளம் கண்டுகொள்வீர்களா?” என்று கேட்டார்கள்.

அதற்கு அவர்கள், “ஆம்; வேறெந்தச் சமுதாயத்தாருக்கும் இல்லாத ஓர் அடையாளம் உங்களுக்கு இருக்கும். உளூ செய்ததன் அடையாளமாக(ப் பிரதான) உறுப்புகள் பிரகாசிப்பவர்களாய் என்னிடம் நீங்கள் வருவீர்கள். (அதை வைத்து உங்களை நான் அடையாளம் கண்டுகொள்வேன்)” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி); நூல்: முஸ்லிம்-416

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு முஸ்லிம் அழகிய முறையில் உளூ செய்து, அகத்தையும் முகத்தையும் ஒருமுகப்படுத்தி (பணிந்து, உள்ளச்சத்துடன்) தொழுதால் அவருக்குச் சொர்க்கம் கட்டாயமாகாமல் இருப்பதில்லை”.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி), நூல்: முஸ்லிம் 397

வீட்டிலே உளூ செய்து வந்தால்….

பாவங்கள் அழிக்கப்பட்டு, தகுதிகள் உயர்த்தப்படுதல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் தமது வீட்டிலேயே அங்கத் தூய்மை (உளூ) செய்துவிட்டு இறைக் கட்டளை(களான தொழுகை)களில் ஒன்றை நிறைவேற்றுவதற்காக இறையில்லங்களில் ஒன்றை நோக்கி நடந்து செல்கிறாரோ, (அவர் எடுத்துவைக்கும்) இரு காலடிகளில் ஒன்று அவருடைய தவறுகளில் ஒன்றை அழித்துவிடுகிறது; மற்றொன்று அவருடைய தகுதியை உயர்த்திவிடுகிறது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); நூல்: முஸ்லிம்-1184

ஒருவர் தன்னுடைய வீட்டில் உளூச் செய்து விட்டு, பிறகு அல்லாஹ்வின் கடமைகளில் ஒரு கடமையை நிறைவேற்றுவதற்காக அல்லாஹ்வின் இல்லங்களில் ஏதேனும் ஒன்றை நோக்கிச் செல்லும் போது அவர் எடுத்து வைக்கும் எட்டுக்கள் ஒரு தீமையை அழித்து விடுகின்றது. ஓர் அந்தஸ்தை உயர்த்தி விடுகின்றது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) ; நூல்: முஸ்லிம்-1059

உளூவின் துஆ மூலம் கிடைக்கும் நன்மை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் முழுமையான முறையில் உளூ செய்துவிட்டு, “அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அன்ன முஹம்மதன் அப்துல்லாஹி வரசூலுஹு (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழிகிறேன்) என்று கூறினால், சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன. அவற்றில் தாம் நாடிய வாசலில் அவர் நுழைந்து கொள்ளலாம்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி) ; நூல்: முஸ்லிம்-397

பள்ளியை நோக்கி நடத்து வருதால் கிடைக்கும் நன்மை

ஒருவர் பள்ளிவாசலுக்குக் காலையிலோ மாலையிலோ சென்று வந்தால் அவர் ஒவ்வொரு முறை சென்று வரும் போதும் அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு மாளிகையை (அல்லது விருந்தை)த் தயார் செய்கிறான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) ; நூல்: முஸ்லிம்-1187

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதர் அங்கத் தூய்மை செய்து விட்டு பிறகு தொழுகை நிறைவேற்றுவதற்காக பள்ளிவாசலுக்கு வந்தால் அவன் பள்ளிவாசலை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டிற்காகவும் பத்து நன்மைகளை அவனுடைய இரண்டு எழுத்தர்களும் பதிவு செய்கிறார்கள்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி) ;நூல்: இப்னு ஹிப்பான்-2045

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் தன்னுடைய வீட்டில் அழகிய முறையில் உளூச் செய்து பிறகு பள்ளிக்கு (தொழுகைக்காக) வருகிறாரோ அவர் அல்லாஹ்வின் விருந்தாளியாவார். விருந்தாளியைக் கண்ணியப்படுத்துவது விருந்தளிப்பவர் மீது கடமையாகும்.

அறிவிப்பவர்: ஸல்மான் (ரலி) ; நூல்: அல்முஃஜமுல் கபீர்-6016

வெளியூர் சென்றவர் ஊர் திரும்பும் போது அவருடைய குடும்பத்தார்கள் சந்தோஷப்படுவதைப் போன்று ஒரு முஸ்லிமான மனிதர் தொழுவதற்காகவும், திக்ர் செய்வதற்காகவும் பள்ளிகளுக்குச் சென்றால் அவர் (அங்கிருந்து) வெளியேறும் வரை அதன் மூலம் அல்லாஹ் சந்தோஷப்படுகிறான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) ; நூல்: அஹ்மத்-8332

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மனிதனின் (உடலிலுள்ள) ஒவ்வொரு மூட்டிற்காகவும் ஒவ்வொரு நாளும் தர்மம் செய்வது கடமையாகும். ஒருவருக்கு அவரது வாகனத்தில் ஏறிட உதவுவது, அல்லது அவரது வாகனத்தின் மீது அவரது மூட்டை முடிச்சுகளை ஏற்றி வைப்பதும் தர்மமாகும். நல்ல சொல்லும், தொழுகைக்கு நடந்து செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும், (வழியறியாமல் தடுமாறும் ஒருவருக்குச் சரியான) பாதையை அறிவித்துத் தருவதும் தர்மமாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) ; நூல்: புகாரி-2891

உஸ்மான் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமை ஹும்ரான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களிடம் அங்கத் தூய்மை செய்வதற்கான தண்ணீர் கொண்டுவந்தேன். அவர்கள் அங்கத் தூய்மை செய்தார்கள். பிறகு அவர்கள் கூறினார்கள்: சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஹதீஸ்களை அறிவிக்கின்றனர். ஆனால், அவற்றின் நிலை என்ன என்று எனக்குத் தெரியாது.

ஆயினும், (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இதோ) இப்போது நான் செய்த அங்கத் தூய்மை போன்று அங்கத் தூய்மை செய்ததை நான் பார்த்தேன். பிறகு “யார் இவ்வாறு அங்கத் தூய்மை செய்கின்றாரோ, அவரது முந்தைய (சிறு) பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும். பிறகு அவர் தொழும் தொழுகையும் பள்ளிவாசலை நோக்கி அவர் நடப்பதும் அவருக்குக் கூடுதலா(ன வணக்கமா)க மாறிவிடும்” என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம்-388

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *