ஒரு கடைக்குப் பக்கத்திலேயே அதே போல் மற்றொரு கடை உருவாக்கலாமா? பக்கத்துக் கடையின் விலையை அறிந்து நாம் குறைத்துக் கொடுக்கலாமா?
அது போன்று பக்கத்துக் கடைகளில் என்ன விலை வைக்கின்றார்கள் என்று பார்த்து அதற்குத் தக்க விலை வைத்துக் கொள்வதற்குத் தடை ஏதும் இல்லை.
ஒரு கடைக்குப் பக்கத்தில் அதே போன்ற மற்றொரு கடையை உருவாக்குவதற்கு மார்க்கத்தில் தடை இல்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் கடைவீதிகள் இருந்ததற்கும், சந்தை கூடி வியாபாரம் நடைபெற்றதற்கும் ஏராளமான சான்றுகள் உள்ளன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் மக்கள் உணவுப் பொருட்களைச் சந்தைக்குக் கொண்டு வரும் வியாபாரிகளிடம் வழி மறித்து வாங்கிக் கொண்டிருந்தனர். உணவுப் பொருட்களை விற்பனை செய்யப்படும் இடத்திற்கு (சந்தைக்கு) கொண்டு சென்ற பிறகு தான் விற்க வேண்டும். வாங்கிய இடத்திலேயே அவற்றை விற்கக் கூடாது’ என்று வியாபாரிகளைத் தடுப்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்களை அனுப்பி வைத்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 2123
சந்தை போன்ற இடங்களில் ஒரே வியாபாரம் செய்யக் கூடிய கடைகள் அடுத்தடுத்து இடம் பெற்றிருக்கும். எனவே ஒரு கடைக்குப் பக்கத்தில் அதே போன்ற கடை வைப்பது தவறில்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.