ஒருவர் மற்றவரின் சுமையை சுமக்கமாட்டாரா❓
——————————————-
ஒருவர் மற்றவரின் சுமையை சுமக்கமாட்டார் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். ஒருவர் பாவம் செய்தால் அவர் செய்த பாவம் அவரையே சாரும்.
ஒருவர் நன்மை செய்தால் அந்த நன்மையும் அவரைத்தான் சாரும். இதைத் திருக்குர்ஆன் பல வசனங்களில் கூறுகிறது.
நேர்வழி பெற்றவர் தனக்காவே நேர்வழி பெறுகிறார். வழி தவறுபவர் தனக்கெதிராகவே வழி தவறுகிறார். ஒருவன் இன்னொருவனின் சுமையைச் சுமக்க மாட்டான். ஒரு தூதரை அனுப்பாதவரை நாம் (எவரையும்) தண்டிப்பதில்லை.
திருக்குர்ஆன் 17:15
மேலும், மறுமை நாளில் ஒரு மனிதன் தன் பாவச்சுமையைச் சுமக்க முடியாமல் தன் நெருங்கிய உறவினரான தாய், தந்தை, மனைவி ஆகியோரை அழைத்தாலும் அந்தக் கோரிக்கை ஏற்கப்படாது என்றும் அல்லாஹ் கூறுகிறான்.
ஒருவர் மற்றவரின் சுமையை சுமக்கமாட்டார். கனத்த சுமையுடையவன் அதைச் சுமக்குமாறு யாரையேனும் அழைத்தால் (அழைக்கப்படுபவன்) உறவினராக இருந்தாலும் அதிலிருந்து எதுவும் அவன் மீது சுமத்தப்படமாட்டாது.
திருக்குர்ஆன் 35:18
*பிறரை வழிகெடுப்பவனின் பாவச்சுமை பற்றி *
ஒருவன் பிறரை வழிகெடுத்தால் வழிகெடுக்கப் பட்டவனின் பாவச்சுமையையும் சேர்த்து அவன் சுமக்க வேண்டும்.
அது பிறருடைய பாவத்தைச் சுமப்பதாக ஆகாது.
மாறாக வழிகெடுத்த பாவத்தைச் சுமப்பதாகவே ஆகும். இதை அல்லாஹ் பின்வருமாறு கூறிக் காட்டுகிறான்.
கியாமத் நாளில் முழுமையாகத் தமது சுமைகளையும் அறிவின்றி யாரை இவர்கள் வழிகெடுத்தார்களோ அவர்களின் சுமைகளையும் சுமப்பதற்காக (இவ்வாறு கூறுகின்றனர்.) கவனத்தில் கொள்க! அவர்கள் சுமப்பது மிகவும் கெட்டது.
திருக்குர்ஆன் 16:25
இதற்கு விளக்கமாக நபியவர்களின் அறிவிப்பும் வருகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் இஸ்லாத்தில் (அதன் அடிப்படைக்கு முரண்படாத வகையில்) ஓர் அழகிய நடைமுறையை உருவாக்கி, அவருக்குப்பின் அந்த நடைமுறை செயல்படுத்தப்படுகிறதோ அதன்படி செயல்படுபவர்களின் நன்மை போன்றது அ(ந்த நடைமுறையை உருவாக்கிய)வருக்கு உண்டு. அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்துவிடாது.
யார் இஸ்லாத்தில் (அதன் அடிப்படைக்கு எதிரான) ஒரு தீயநடைமுறையை உருவாக்கி விட, அவருக்குப் பிறகும் அந்த நடைமுறை செயல்படுத்தப்படுகிறதோ அவருக்குப்பின் அதன்படி செயல்படுகிறவர்களின் பாவம் போன்றது அவருக்கு உண்டு. அ(தன்படி செயல்பட்ட)வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாது.
அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல்: முஸ்லிம் 5193
———————-
ஏகத்துவம்