ஒருவர் தவறு செய்யப் போகின்றார் என்று சந்தேகித்தால் அவரை அவருக்குத் தெரியாமல் உளவு பார்க்கலாமா? அவர் பிறரிடம் பேசுவதைக் கேட்கலாமா?
தெளிவான ஆதாரம் இல்லாமல் ஒருவர் மீது சந்தேகப்படுவதையும், அவர் ஏதேனும் தவறு செய்கின்றாரா என்று துருவித் துருவி ஆராய்வதையும் திருக்குர்ஆன் மிகக் கடுமையாகக் கண்டிக்கின்றது.
நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
(அல்குர்ஆன் 49:12)
ஆதாரம் இல்லாமல் ஒருவர் மீது சந்தேகம் கொண்டு இது போன்று விசாரிப்பது தான் பல்வேறு பிரச்சனைகளுக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. எப்போது சந்தேகம் கொள்ள ஆரம்பித்து விடுகின்றோமோ அப்போதே அவரைப் பற்றி புறம் பேசத் துவங்கி விடுகின்றோம். புறம் என்று துவங்குவது இரு நபர்களுக்கிடையே பெரும் மோதலில் போய் முடிகின்றது. அல்லது இரண்டு சமுதாயங்களுக்கிடையே மோதலுக்கு வழி வகுக்கின்றது.
அதனால் தான் இத்தனைக்கும் அடிப்படையாக அமைந்துள்ள சந்தேகம் எனும் யூகத்தை திருக்குர்ஆன் தடை செய்கின்றது.
ஒருவரைப் பற்றித் தவறான செய்தி கிடைத்தால் அதைச் சம்பந்தப் பட்டவரிடமே நேரடியாகக் கேட்டு விடுவது தான் அதற்குத் தீர்வாக அமையுமே தவிர அவரைப் பற்றித் துருவித் துருவி ஆராய்வது பிரச்சனைக்குத் தான் வழி வகுக்கும்.
எகத்துவம்