ஒருவரது சுமையை மற்றவர் சுமக்க முடியாது
ஒருவர் மற்றவரின் பாவத்தைச் சுமக்க முடியாது என்று இவ்வசனங்களில் (2:134, 2:141, 2:281, 2:286, 3:25, 3:161, 4:111, 6:31, 6:164, 7:39, 7:96, 9:82, 9:95, 10:8, 10:52, 17:15, 35:18, 39:7, 39:24, 39:48, 39:51, 40:17, 45:22, 52:21, 53:38, 74:38) கூறப்படுகிறது.
இது இஸ்லாத்தின் மிகப்பெரிய அடிப்படைக் கொள்கையாகும். இந்த அடிப்படையில் தான் கிறித்தவ மதத்தில் இருந்து முற்றாக இஸ்லாம் மாறுபடுகிறது.
எல்லோரும் பாவிகளாகப் பிறந்து அந்தப் பாவத்தை ஏசு சுமந்து கொண்டார் எனக் கூறப்படும் சித்தாந்தத்தை இஸ்லாம் மறுக்கிறது.
“ஒருவர் பாவம் செய்தால் அந்தப் பாவம் அவரைத்தான் சாரும். ஆதம் (அலை) பாவம் செய்தால் ஆதமுடைய பிள்ளைகள் யாரும் அந்தப் பாவத்தில் பங்காளிகள் இல்லை. எனவே பிறக்கும் போதே யாரும் பாவியாகப் பிறக்க மாட்டார்கள்” என இஸ்லாம் கூறுகிறது.
அனைவரது பாவங்களையும் சுமப்பதற்காக ஏசு பலி கொடுக்கப்பட்டார் என்று கிறித்தவர்கள் கூறுவதையும் இஸ்லாம் மறுக்கிறது.
மற்றவர்கள் செய்த பாவங்களுக்காக அந்தப் பாவத்தில் சம்பந்தமில்லாத ஒருவரைப் பலி கொடுப்பது இஸ்லாமிய அடிப்படைக்கு எதிரானது.
இறந்துவிட்ட உறவினர்களுக்காகவோ, மற்றவர்களுக்காகவோ – அல்லாஹ்வும் அவனது தூதரும் விதிவிலக்கு அளித்தவை தவிர – நாம் நன்மைகள் செய்து அவர்களுக்குச் சேர்த்து விட முடியாது என்பதற்கும் இவ்வசனங்கள் சான்றுகளாக உள்ளன.