சமுதாயத்தின் அங்கீகாரம்
உஸ்மான் (ரலி) அவர்களுடைய இந்த ஏற்பாட்டை அன்றைய சமுதாயத்தில் இருந்த நபித்தோழர்களிலும், நல்லோர்களிலும் யாருமே ஆட்சேபிக்கவில்லை. இது தேவையான, சரியான ஏற்பாடு தான் என்பதை ஒப்புக் கொண்டார்கள்.
அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) மட்டும் தம்முடைய பழைய பிரதியை எரிக்க முதலில் மறுத்து விட்டார். அவரும் பிறகு தனது முடிவை மாற்றிக் கொண்டு உஸ்மான் (ரலி) அவர்களுடைய இந்தப் பணியின் முக்கியத்துவத்தையும், நியாயத்தையும் அறிந்து இதற்குக் கட்டுப்பட்டு விட்டார்.
ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயம் மற்றும் நல்லறிஞர்களின் ஏகமனதான முடிவோடு, அனைவரின் கண்காணிப்பிலும் இவ்வாறு திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்டது.
ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சியின்போது திருக்குர்ஆனை எழுத்து வடிவில் முறைப்படுத்தும் குழுவுக்கு தலைமை வகித்தவர். எனவே குர்ஆன் அத்தியாயங்களை வரிசைப்படுத்தவும், பல்வேறு பிரதிகள் தயாரிக்கவும் உஸ்மான் (ரலி) நியமித்த குழுவுக்கும் அவரையே தலைவராக நியமித்தார்கள்.
இந்தக் குழுவில் அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி), ஸயீத் பின் அல்ஆஸ் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அல் ஹாரிஸ் (ரலி) ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இந்தப் பணிகளை உஸ்மான் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 25ஆம் ஆண்டு செய்தார்கள். அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்து 15 ஆண்டுகளுக்குள் திருக்குர்ஆன் இப்போதிருக்கும் வரிசைப்படி அமைக்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதிகள் எடுத்தல்
மேலும் உஸ்மான் (ரலி) அவர்கள் ஏராளமான பிரதிகளை எடுக்கச் சொல்லி அந்தப் பிரதிகளை தமது ஆளுகையின் கீழ் இருந்த எல்லாப் பகுதிகளுக்கும் அனுப்பினார்கள். அந்தப் பிரதிகளின் அடிப்படையிலேயே மற்றவர்களும் பிரதி எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கட்டளையிட்டார்கள். ஒவ்வொருவரும் தம்மிடம் வைத்துள்ள முழுமைப்படுத்தப்படாத பழைய பிரதிகளை எரித்து விடுமாறும் ஆணை பிறப்பித்தார்கள்.
உஸ்மான் (ரலி) அவர்களின் இந்த மூலப் பிரதியின் அடிப்படையில் தான் உலகம் முழுவதும் பல நூற்றாண்டுகளாக திருக்குர்ஆன் அச்சடிக்கப்பட்டும், எழுதப்பட்டும், பரப்பப்பட்டும், வினியோகிக்கப்பட்டும் வருகின்றது.
உஸ்மான் (ரலி) அவர்கள் பல பகுதிகளுக்கு அனுப்பிய மூலப் பிரதிகளில் இரண்டு பிரதிகள் இன்றும் கூட பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஒன்று துருக்கி நாட்டின் ‘இஸ்தன்புல்’ நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்திலும், இன்னொன்று ரஷியாவின் ‘தாஷ்கண்ட்’ நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்திலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அவர்கள் பரப்பிய அந்தப் பிரதிகள் தான் இன்று உலகத்தில் உள்ள எழுத்து வடிவிலான திருக்குர்ஆன் பிரதிகள் அனைத்திற்கும் மூலம் எனலாம்.
இது தான் திருக்குர்ஆன் திரட்டப்பட்டு பாதுகாக்கப்பட்ட வரலாறு.