ஒட்டு முடி நடலாமா?
ஒட்டுமுடி வைத்துக் கொள்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். பின்வரும் ஹதீஸ்கள் இதைத் தடைசெய்கின்றன.
அன்சாரிப் பெண்ணொருவர் மணம் புரிந்து கொண்டார். பிறகு அவர் நோயுற்றார். அதனால் அவருடைய தலை முடி கொட்டிவிட்டது. ஆகவே, அவருடைய உறவினர்கள் அவருக்கு ஒட்டு முடிவைக்க விரும்பி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், “ஒட்டுமுடி வைத்து விடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக் கொள்பவளையும் அல்லாஹ் சபிக்கின்றான். (தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துகின்றான்)”என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் ; ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (5934)
மற்றொரு அறிவிப்பில் அவரது கணவர் ஒட்டு முடி வைப்பதை விரும்புகிறார்; எனவே வைத்துக் கொள்ளலாமா என்று அந்தப் பெண் கேட்ட போது கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
புஹாரி 3468, 3488, 4887, 5205, 5933, 5934, 5935, 5938,
ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
முஆவியா (ரலி) அவர்கள் ஹஜ் செய்த ஆண்டில் (மேடை) மிம்பரின் மீதிருந்தபடி, காவலர் ஒருவரின் கையிலிருந்த முடிக் கற்றை (சவுரிமுடி) ஒன்றை எடுத்து (கையில் வைத்துக் கொண்டு), “மதீனா வாசிகளே! உங்கள் (மார்க்க) அறிஞர்கள் எங்கே?” என்று கேட்டு விட்டு,
“நபி (ஸல்) அவர்கள் இது போன்றதிலிருந்து (மக்களைத்) தடுத்ததையும், “பனூ இஸ்ராயீல் சமுதாயத்தார் அழிந்து போனதெல்லாம் இதை அவர்களுடைய பெண்கள் பயன்படுத்திய போது தான்‘ என்று சொல்வதையும் நான் செவியுற்றிருக்கிறேன்”* என்று சொல்லக் கேட்டேன் எனக் கூறினார்கள்.
நூல் : புகாரி (3468)
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
ஒட்டுமுடி (முடியாலான சவுரி) வைத்துக் கொள்ளும் பெண்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்.
புகாரி (4887)
மனிதர்களின் முடியைத் தான் வைத்துக் கொள்ளக் கூடாது. செயற்கையாக தயாரிக்கப்பட்டவைகளை அவித்துக் கொள்ளலாம் என்று சிலர் கூறுகின்றனர். இது தவ்றாகும். ஏனெனில் முஸ்லிமில் வரும் பின்வரும் ஹதீஸில் எதனையும் சேர்க்கக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளனர்.
பெண்கள் தமது தலை முடியில் எந்தப் பொருளையும் சேர்க்கக் கூடாது என்று தடை செய்தார்கள்.