ஏமாற்றும் வசதிகளே உலகம்
———————————————
இந்த உலகத்திலுள்ள வசதி வாய்ப்புகள் அனைத்தும் நமது மறுமைத் தேடலை மறக்கடிக்கும் வகையில் அமைந்துள்ளன.
அவற்றின் மீது அபரிமிதமான ஆர்வத்தையும் மோகத்தையும் தூண்டி வழிகெடுக்க ஷைத்தான் துடித்துக் கொண்டிருக்கிறான். அதற்கு ஒருக்காலும் நாம் இடம் கொடுத்து விடக் கூடாது.
மறுமையில் (தீயோருக்குக்) கடும் வேதனையும், (நல்லோருக்கு) அல்லாஹ்விடமிருந்து மன்னிப்பும், திருப்தியும் உண்டு. இவ்வுலக வாழ்வு ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை.
(திருக்குர்ஆன் 57:20)
மனிதர்களே! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. இவ்வுலக வாழ்வு உங்களை ஏமாற்றி விட வேண்டாம். ஏமாற்றுபவன் (ஷைத்தான்) அல்லாஹ் விஷயத்தில் உங்களை ஏமாற்றி விட வேண்டாம்.
(திருக்குர்ஆன் 35:5)
மயக்கும் மாய வாழ்க்கை
—————————————-
மனிதனின் எண்ணத்தை, சிந்தனையைக் கவர்ந்திழுக்கும் வகையில் உலக வாழ்வின் கட்டமைப்பு இருக்கிறது. அதன் எந்த மூலைக்குச் சென்றாலும் மனதை மயக்கும் அம்சங்கள் மலிந்து இருக்கும். இதனால்தான் அதன் இனிமையிலும் பசுமையிலும் பலரும் மயங்கிக் கிடக்கிறார்கள்.
(முஹம்மதே!) சோதிப்பதற்காக அவர்களில் சிலருக்கு நாம் வழங்கிய இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நோக்கி உமது கண்களை நீட்டாதீர்! உமது இறைவனின் செல்வம் சிறந்ததும், நிலையானதுமாகும்.
(திருக்குர் ஆன் 20:131)
யார் தமது மார்க்கத்தை விளையாட்டாகவும், வீணாகவும் ஆக்கி, இவ்வுலக வாழ்க்கையும் அவர்களை மயக்கி விட்டதோ அவர்களை விட்டு விடுவீராக! தான் செய்தவற்றுக்கு ஒவ்வொருவரும் கூலி கொடுக்கப்படுவது பற்றி இதன் மூலம் அறிவுரை கூறுவீராக!
(திருக்குர்ஆன் 6:70)
இந்த உலகம் இனிமையானதும் பசுமையானதும் ஆகும். அதில் உங்களை அல்லாஹ் பொறுப்பாளர்களாக ஆக்கி, நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்று பார்க்கிறான்.
ஆகவே, இவ்வுலகத்தின் சோதனையிலிருந்தும் பெண்களின் சோதனையிலிருந்தும் உங்களைக் காத்துக்கொள்ளுங்கள். ஏனெனில், பனூ இஸ்ராயீல் சமுதாயத்தார் இடையே நடைபெற்ற முதல் குழப்பம் பெண்களால்தான் ஏற்பட்டது.
இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: முஸ்லிம் (5292)
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் முஹம்மத் பின் பஷ்ஷார் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்று பார்ப்பதற்காக (அவ்வாறு இனிமையும் பசுமையும் நிறைந்ததாக அதை ஆக்கியுள்ளான்) என்று காணப்படுகிறது.
———————-
ஏகத்துவம்