ஏமாற்றுப் பேர்வழிகளின் ஏமாற்று வேலைகள்
இன்று கடன் என்ற பெயரில் யாசக வேட்டை நடக்கின்றது.
இவர்கள் அகராதியில் கடன் வாசகம் என்பது யாசகம் என்ற பெயரைக் கொண்டதாகும். வாங்கும் போதே இவர்கள் யாரிடம் வாங்குகின்றார்களோ, அவர்களை ஒரு வகையாக்கி விட வேண்டும் என்று கங்கணம் கட்டியே களத்தில் இறங்குகின்றனர்.
இப்படிப் பட்ட ஏமாற்றுப் பேர்வழிகள் ஏமாற்றுவதற்காகவே இந்தக் காரியத்தை செய்து வாங்கிய கடனை திரும்பக் கொடுப்பதில்லை, அவர்களுடைய எண்ணத்திற்குத் தக்க அல்லாஹ்வும் அவர்களுக்கு உதவுவதில்லை.
யார் மக்களின் பொருளை திரும்பக் கொடுக்க வேண்டும் என்று எண்ணி கடன் வாங்குகின்றாரோ, அவர் சார்பாக அல்லாஹ்வே அதனை திருப்பிச் செலுத்துவான்.
யார் அதை அழித்து விட வேண்டும் என்று எண்ணி (ஏமாற்றி) கடன் வாங்குகின்றாரோ அதை அல்லாஹ் அழித்தே விடுகின்றான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி 2387
எவ்வளவு பொருத்தமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள் என்று பாருங்கள். இவர்கள் கடனை வாங்கி ஏமாற்றுவதால் உண்மையில் கடன் வாங்கி திரும்பக் கொடுக்க வேண்டும் என்ற தூய்மையான எண்ணத்தில் கேட்பவர்களும் பாதிக்கப்பட்டு விடுகின்றார்கள்.
அவர்கள் இந்த ஏய்ப்பு ஏமாற்று வேலையால், ஏமாற்றிப் பிழைக்கும் சித்து வேலையால் வளர் தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ள சுத்தமான தொழில் முனைவோர்கள் ஈடுசெய்ய முடியாக இழப்புக்குள்ளாகி விடுகின்றனர்.
திரும்பக் கொடுக்கக் கூடாது என்ற கெட்ட எண்ணத்தை உள்ளத்தில் மறைத்து வைத்துக் கொண்டே ஒரு பொருளை வாங்குவதற்குப் பெயர் கடன் அல்ல! அது மோசடியாகும்.