• இணை வைப்பு இமாமுக்குப் பின்னால் நின்று தொழுவதில்லை.
  • இணைவைப்பில் இறந்தவர், பெற்ற தாய் தந்தையாக இருந்தாலும் அவர்களுக்கு ஜனாஸா தொழுகை தொழுவதில்லை.
  • மவ்லிது, கத்தம் ஃபாத்திஹா ஓதுகின்ற நிகழ்ச்சியில் பங்கெடுப்பதில்லை.
  • அந்த நிகழ்ச்சி நடத்தி பரிமாறப்படுகின்ற நேர்ச்சையைப் பெறுவதில்லை.
  • அதே நிகழ்ச்சிக்காக வைக்கப்படுகின்ற விருந்து வைபவங்களில் கலந்து கொள்வதில்லை.
  • நபி பிறந்த தின விழா, நினைவு நாள் போன்ற நிகழ்ச்சிகளிலும் சேர்வதில்லை.
  • கந்தூரிகள், கருமாதிகள் என்று எதிலும் இணைவதில்லை.
  • வரதட்சணை வாங்குகின்ற மற்றும் ஆடம்பரமாக நடத்தப்படுகின்ற திருமணங்களில் நம் சொந்த வீடுகளிலும் அந்நிய வீடுகளிலும் கலந்து கொளவதில்லை.

“உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது’’ என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது.

(அல்குர்ஆன்:60:4)

இப்படி எதிலும் புறக்கணிப்பு, எங்கும் புறக்கணிப்பு என்று இப்ராஹீம் நபி பாதையில்  ஓரளவு நமது வாழ்கையை கொள்கை உறுதியுடன்  தியாக உணர்வுடனும் ஈமானிய சிந்தனையுடனும் உறுதியாகப் பயணித்துக் கொண்டு இருக்கிறோம். அல்ஹம்துலில்லாஹ்.

எல்லாம் வல்ல அல்லாஹ் தனது திருக்குர்ஆனில் இப்ராஹீம் நபியைப் பற்றியும், ஹஜ் எனும் வணக்கம் மற்றும் கால்நடைப் பலியிடுதல் பற்றியும் குறிப்பிடும் போது  மக்களை நோக்கிப் பின்வருமாறு கட்டளையிடுகின்றான்.

சிலைகள் எனும் அசுத்தத்திலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! பொய் பேசுவதிலிருந்தும் விலகிக் கொள்ளுங்கள்!

(அல்குர்ஆன்:22:30)

இப்ராஹீம்  நபியிடத்தில் புறக்கணிப்பில் உள்ள முன்மாதிரியைப் பின்பற்றுவது போன்று அவர்களின் வாழ்க்கையில் இன்னொரு முன்மாதிரியைப் பின்பற்றுவதில் நாம் நிறையவே பின் தங்கி இருக்கின்றோம். அதுதான் அவர்கள் தன் வாழ்வில் கடைப்பிடித்த உண்மை பேசுதல் என்ற நல்ல பண்பாகும். மொத்தமாக அவர்கள் பேசிய பொய்கள் மூன்று தான். அந்த மூன்றும் அல்லாஹ்வின் மார்க்கத்திற்காகப் பேசியது தான்.   இதை நாம் பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

இப்ராஹீம் (அலை) அவர்கள் மூன்று பொய்களைத் தவிர வேறு பொய் எதுவும் பேசியதில்லை. அவற்றில் இரண்டு அல்லாஹ்வின் (மார்க்கத்தின் நலன் காக்கும்) விஷயத்தைச் சொன்னவையாகும். அவை,

  1. (அவரை இணைக்கும் திருவிழாவிற்கு மக்கள் அழைத்தபோது) நான் நோயுற்றியிருக்கின்றேன் நான் நோயுற்றிருக்கின்றேன் என்று (அதில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பதற்காகக்) கூறியதும்-
  2. (சிலைகளை உடைத்துப் பெரிய சிலையின் தோளில் கோடாரியை மாட்டிவிட்டு மக்கள் இப்படிச் செய்தது யார் என்று பேட்ட போது) ‘இவர்களில் பெரிய சிலையான இந்தச் சிலை தான் இதைச் செய்தது’ என்று கூறியதுமாகும்.
  3. ஒரு நாள் இப்ராஹீம் (அலை) அவர்களும் (அவர்களின் துணைவியார்) சாரா (அலை) அவர்களும் கொடுங்கோல் மன்னர்களில் ஒருவனுடைய வழியாகச் சென்றார்கள். அப்போது அந்த மன்னனிடம் (அவர்களைக் குறித்து), ‘‘இங்கு ஒரு மனிதர் வந்திருக்கிறார். அவருடன் அவரது அழகான மனைவியும் இருக்கிறாள்’’ என்று கூறப்பட்டது.

உடனே, இப்ராஹீம் (அலை) அவர்களை அழைத்து வரச் சொல்லி அந்த மன்னன் ஆள் அனுப்பினான். (அவர்கள் வந்தவுடன்) அவர்களிடம் சாராவைப் பற்றி, இவர் யார் என்று விசாரித்தான். இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘என் சகோதரி’ என்று பதிலளித்தார்கள். 

பிறகு சாரா (அலை) அவர்களிடம் சென்று, ‘‘சாராவே! பூமியின் மீது உன்னையும் என்னையும் தவிர இறை நம்பிக்கை உடையவர் (தற்போது) எவரும் இல்லை. இவனோ என்னிடம் உன்னைப் பற்றிக் கேட்டு விட்டான். நான் நீ என் சகோதரி என்று அவனுக்குத் தெரிவித்து விட்டேன். ஆகவே நீ (உண்மையைச் சொல்லி) என்னைப் பொய்யனாக்கி விடாதே’’ என்று கூறினார்கள்.

நூல்: புகாரி-3358

சிலை வணக்கத்தையும் பொய் சொல்வதையும் அல்லாஹ் ஒரே தரத்தில் கொண்டு வைக்கின்றான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அதே போன்று விளக்கமளிக்கின்றார்கள்.

‘பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?’ என்று நபி (ஸல்) அவர்கள் (மூன்று முறை) கேட்டார்கள். மக்கள், ‘ஆம், இறைத்தூதர் அவர்களே! (அறிவியுங்கள்)’ என்றார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும், பெற்றோருக்குத் துன்பம் தருவதும் (தான் அவை)’ என்று கூறிவிட்டு, சாய்ந்து கொண்டிருந்தவர்கள் எழுந்து அமர்ந்து, ‘அறிந்து கொள்ளுங்கள்; 

பொய் சாட்சியமும் (மிகப் பெரும்பாவம்) தான்’ என்று கூறினார்கள். ‘நிறுத்திக் கொள்ளக் கூடாதா’ என்று நாங்கள் சொல்கிற அளவுக்கு அதை (இறுதியாகச் சொன்னதை) திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டேயிருந்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ பக்ரா(ரலி)

நூல்: புகாரி 2654

இப்ராஹீம் நபி (அலை) அவர்கள் புரிந்த சிலை வணக்கத்திற்கு எதிரான யுத்தத்தை நாம் நன்கு அறிந்திருக்கின்றோம். அதே இப்ராஹீம் நபியவர்கள் மேற்கண்ட இந்த 3 விஷயங்களைத் தவிர்த்து அவர்கள் பொய்க்கு எதிரானவர்கள் என்பதையும் நாம் நன்கே விளங்கி வைத்திருக்கின்றோம்.  அவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் உண்மை பேசிய உத்தமராவார்கள். அதனால் உண்மை பேசுவது என்பதும் அந்த உத்தம சீலரின் மார்க்கத்தில் உள்ளது தான்.

“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!’’ என்று உமக்கு தூதுச்செய்தி அறிவித்தோம். அவர் இணைகற்பிப்பவராக இருந்ததில்லை.

(அல்குர்ஆன்:16:123.)

அல்லாஹ் சொல்வது போன்று நாம் உண்மையைப் பேசுவதும் இப்ராஹீம் நபியவர்களின் மார்க்கத்தைப் பின்பற்றுகின்ற செயலாகும். அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் தன் வாழ்நாளில் ஒரு போதும் பொய் சொன்னது கிடையாது. அவர்களது தோழரான அபூபக்ர் (ரலி) அவர்கள் சித்தீக் –  உண்மையாளர் என்ற பட்டத்தைப் பெற்ற அவர்கள், மிக நெருக்கடியான கால கட்டத்திலும் அவர்கள் பொய் சொன்னது கிடையாது. இதற்கு ஹிஜ்ரத்தை நாம் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தமக்குப் பின்னால் அபூபக்ர் (ரலி) வர (மக்காவிலிருந்து) மதீனா நோக்கி (ஹிஜ்ரத்) சென்றார்கள். அபூபக்ர் (ரலி) (இள நரையின் காரணத்தினால் தோற்றத்தினால்) மூத்தவராகவும், (மதீனாவாசிகளிடையே வியாபார நிமித்தமாக அடிக்கடி சென்றதில் அவர்களிடையே) அறிமுகமானவராகவும் இருந்தார்கள். 

ஆனால், இறைத்தூதர் (ஸல்) அவர்கள், (நரை விழாத காரணத்தினால் உருவத்தில்) இளையவராகவும் (வெளியூர் சென்று நீண்ட காலமாகிவிட்டதால் அந்த மக்களிடையே) அறிமுகமற்றவராகவும் இருந்தார்கள். (அவர்கள் இருவரும் ஹிஜ்ரத் சென்ற அந்தப் பயணத்தின் போது) அபூபக்ர் (ரலி) அவர்களை ஒருவர் சந்தித்து, ‘அபூபக்ரே! உமக்கு முன்னால் உள்ள இந்த மனிதர் யார்?’ என்று கேட்கிறார். 

அதற்கு, அபூபக்ர் (ரலி), ‘இந்த மனிதர் எனக்கு வழிகாட்டுபவர்’ என்று (நபியவர்களை எதிரிக்குக் காட்டிக் கொடுத்து விடாமலும், அதே சமயம் உண்மைக்குப் புறம்பில்லாமலும் இரண்டு பொருள்படும்படி) பதிலளிக்கிறார்கள். இதற்கு, (பயணத்தில்) பாதை (காட்டுபவர்)’ என்றே அபூபக்ர் பொருள் கொள்கிறார் என எண்ணுபவர் எண்ணிக் கொள்வார். ஆனால், ‘மார்க்கத்திற்கு (வழிகாட்டுபவர்)’ என்ற பொருளையே அபூபக்ர் கொண்டிருந்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி)

நூல்: புகாரி-3911

நபி (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் பயணம் என்பது உயிரைப் பணயம் வைத்துச் சென்ற ஒரு பயணமாகும். இந்தப் பயணத்தில் ரசூல் (ஸல்) அவர்களின் உயிரைக் காப்பதற்காக வேண்டி பொய் சொன்னாலும் தப்பில்லை. இருப்பினும் அபூபக்ர் (ரலி) அவர்கள், உண்மையும் சொல்ல வேண்டும், அதே சமயம் காட்டியும் மாட்டியும் கொடுத்து விடக்கூடாது என்பதற்காக  அற்புதமான பதிலைச் சொல்லி கடந்து செல்கின்றார்கள்.

இது, உண்மை பேச வேண்டும் என்று உண்மைத் தூதரிடத்தில் அவர்கள் கற்றுக் கொண்ட பாடமாகும்.

கஅப் பின் மாலிக் (ரலி) தபூக் போரில் கலந்து கொள்ளாமல் பின்தங்கி விடுகின்றார்கள்.  நபி (ஸல்) அவர்கள் போரிலிருந்து திரும்ப வந்ததும் பொய் சொல்லித் தப்பிக்கலாம் என்று நினைக்கின்றார்கள். பின்னர் உண்மையைச் சொல்லி தண்டனையை பெற்றுக்கொள்கின்றார்கள்.

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்களுக்கு நான் சலாம் சொன்ன போது கோபத்திலிருப்பவர் எவ்வாறு புன்னகைப்பாரோ அது போலப் புன்னகைத்தார்கள். பிறகு, வாருங்கள் என்று கூறினார்கள். உடனே, நான் அவர்களிடம் (சில எட்டுகள் வைத்து) நடந்து சென்று அவர்களின் முன்னிலையில் அமர்ந்து கொண்டேன். அப்போது அவர்கள் என்னிடம், ‘‘(போரில்) நீங்கள் ஏன் கலந்து கொள்ளவில்லை. நீங்கள் (போருக்காக) வாகனம் வாங்கி வைத்துக் கொண்டிருக்கவில்லையா?’’ என்று கேட்டார்கள்.

நான், ‘‘ஆம். (வாங்கி வைத்திருந்தேன்.) அல்லாஹ்வின் மீதாணையாக! தாங்கள் அல்லாத (வேறு எவரேனும் ஓர்) உலகாதாயவாதிக்கு அருகில் நான் அமர்ந்து கொண்டிருந்தால் ஏதாவது (பொய்யான) சாக்குப் போக்குச் சொல்லி (அவரது) கோபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள உடனடியாக வழி கண்டிருப்பேன். (எவராலும் வெல்ல முடியாத) வாதத்திறன் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. 

ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களிடம் ஏதாவது பொய்யைச் சொல்லி இன்று உங்களை நான் என்னைக் குறித்துத் திருப்தியடையச் செய்து விட்டாலும், அல்லாஹ் வெகுவிரைவில் (உண்மை நிலவரத்தைத் தங்களுக்குத் தெரியப்படுத்தி) என் மீது தங்களைக் கடுங்கோபம் கொள்ளச் செய்து விடுவான் என்பதை நான் நன்கு அறிந்துள்ளேன். (அதே சமயம்) தங்களிடம் நான் உண்மையைச் சொல்லிவிட்டால் (தற்சமயம்) அது தொடர்பாக என் மீது தாங்கள் வருத்தப்படுவீர்கள். ஆயினும், அது விஷயத்தில் அல்லாஹ்வின் மன்னிப்பை நான் எதிர்பார்க்கிறேன்.

இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! (நான் போரில் கலந்து கொள்ளாததற்கு) என்னிடம் எந்தக் காரணமும் இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களை விட்டும் நான் பின்தங்கிவிட்ட அந்த நேரத்தில் எனக்கு இருந்த உடல் பலமும் வசதி வாய்ப்பும் அதற்கு முன் ஒரு போதும் எனக்கு இருந்ததில்லை’’ என்று கூறினேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இவர் உண்மை சொல்லிவிட்டார் (என்று கூறிவிட்டு, என்னை நோக்கி) சரி! எழுந்து செல்லுங்கள். உங்கள் விஷயத்தில் அல்லாஹ்வே தீர்ப்பளிப்பான்’’ என்று கூறினார்கள். உடனே நான் எழுந்து சென்றேன்.

நூல்: புகாரி-4418

இதன்படி கஅப் பின் மாலிக் அவர்கள் 50 நாட்கள் சமூக பகிஷ்காரம் செய்யப்படுகின்றார்கள். இது அவர்களுக்குப் பெரும் பாரமாகவும் பளுவாகவும் இருந்தது. இறுதியில் அல்லாஹ் அவர்களை மன்னித்து விடுகின்றான்.  இவர்கள் தொடர்பாக (9:117-119) ஆகிய வசனங்கள் இறங்கின.

இந்த நபியையும், ஹிஜ்ரத் செய்தவர்களையும், அன்ஸார்களையும் அல்லாஹ் மன்னித்தான். அவர்களில் ஒரு சாராரின் உள்ளங்கள் தடம் புரள முற்பட்ட பின்னரும், சிரமமான காலகட்டத்தில் அவரைப் பின்பற்றியவர்களையும் மன்னித்தான். அவன் அவர்களிடம் நிகரற்ற அன்புடையோன்; இரக்கமுடையோன்.

தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்ட அந்த மூவரையும் (இறைவன் மன்னித்தான்.) பூமி விசாலமானதாக இருந்தும் அவர்களைப் பொறுத்த வரை அது சுருங்கி விட்டது. அவர்களது உள்ளங்களும் சுருங்கி விட்டன. அல்லாஹ்வை விட்டு (தப்பிக்க) அவனிடமே தவிர வேறு போக்கிடம் இல்லை என்று அவர்கள் நம்பினார்கள். பின்னர் அவர்கள் திருந்துவதற்காக அவர்களை மன்னித்தான். அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உண்மையாளர்களுடன் ஆகுங்கள்!

(அல்குர்ஆன்:9:117-119)

உண்மைக்காக ஒரு விலை கொடுத்தார்கள். இது அவர்களுக்குப் பெரிய விடுதலையையும் விமோசனத்தையும் அளித்தது.

‘‘அல்லாஹ்வின் தூதரே! உண்மை பேசிய காரணத்தினால் தான் அல்லாஹ் என்னைக் காப்பாற்றினான். (உண்மைக்குக் கிடைத்த பரிசாக) என் பாவம் மன்னிக்கப்பட்டதையடுத்து நான் உயிரோடு வாழும் வரையில் உண்மையைத் தவிர வேறெதையும் பேச மாட்டேன்’’                       (நூல்: புகாரி 4418) என்று கூறி சபதம் எடுத்துக் கொள்கின்றார்கள்.

இது ஒவ்வொரு முஸ்லிமாலும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அதிலும் குறிப்பாக மேற்கண்ட 119வது வசனம் இறைவனை அஞ்சவும் உண்மை பேசவும் நமக்கு ஆணையிடுகின்றது.  இப்ராஹீம் நபி (அலை) அவர்கள் பேசிய பொய் அல்லாஹ்வால் பிடிக்கப்படாததாக இருந்தாலும்  அவர்கள் அதற்காக அஞ்சி நடுங்குவதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

மக்கள் மறுமை நாளில் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் சென்று, “இப்ராஹீமே! நீங்கள் இறைத்தூதரும் பூமியில் வசிப்பவர்களில் இறைவனின் உற்ற நண்பரும் ஆவீர்கள். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?’ என்று கேட்பார்கள்.

அதற்கு இப்ராஹீம் (அலை) அவர்கள் “என் இறைவன் இன்று என் மீது கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன்பும் இதைப் போல் அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் இதைப் போன்று அவன் ஒருபோதும் கோபம் கொள்ளப் போவதுமில்லை. நான் மூன்று பொய்களைச் சொல்லியுள்ளேன். நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது! (ஆகவே,) வேறெவரிடமாவது நீங்கள் செல்லுங்கள். (இறைத் தூதர்) மூசாவிடம் செல்லுங்கள்’’ என்று கூறுவார்கள்.

நூல்: புகாரி : 4712

ரஹ்மானின் நண்பரான இப்ராஹீம் நபி (அலை) அவர்கள் இப்படி பயப்படுகின்றார்கள். நாம் கண்டமேனிக்கு வாய் திறந்தாலே பொய்களை நொடிக்கு நொடிக்கு அடித்துத் தள்ளுகிறோமே! இதற்கு அல்லாஹ்விடம் நமக்குப் பதில் இருக்கின்றதா? என்று எண்ணிப் பார்க்க வேண்டும். அதனால் அல்லாஹ்வை அஞ்சி, நம்முடைய வாழ்க்கையில் என்றும் உண்மை பேசுவோமாக! பொய்யை முழுமையாகத் தவிர்ப்போமாக!

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *