எறும்பும் பறவையும் கற்றுத்தரும் பாடம்
துரு துருவென ஓடும் எறும்பை சுறுசுறுப்புக்கு உதாரணம் காட்டுவதும், உணவிற்காகப் பல மைல்கள் தூரம் பறந்து செல்லும் பறவையை கடின உழைப்பிற்கு உதாரணம் காட்டுவதும் மக்களிடையே பரவலாக அறியப்பட்ட ஒன்றே! எறும்பிலும் பறவையிலும் மனிதர்கள் கற்றுக் கொள்ளத்தக்க பல சிறப்புமிக்க அம்சங்கள் இருந்தாலும் இந்தக் கட்டுரையில் நாம் அதனைப்பற்றி ஆராய முற்படவில்லை.
மனித குலத்திற்கு அறிவுரையாக அருளப்பட்ட திருக்குர்ஆன் பல இறைத்தூதர்களின் வரலாறுகளைப் பதிவு செய்துள்ளது. சில நல்லடியார்களின் வரலாற்றினையும் எடுத்துக் கூறுகிறது. அவற்றை கதை ரசனைக்காகவோ, இலக்கியச் சுவைக்காகவோ இறைவன் கூறவில்லை. மாறாக மனிதர்கள் படிப்பினை பெறவேண்டும் என்பதற்காகவே இறைவனால் எடுத்துக் கூறப்பட்ட உண்மை வரலாறாகும். பின்வரும் வசனம் இதைத் தெளிவுபடுத்துகின்றது.
முடிவில் தூதர்கள் நம்பிக்கை இழந்து, தாங்கள் நிராகரிக்கப்பட்டு விட்டோம் என்று எண்ணியபோது நமது உதவி அவர்களிடம் வந்தது. நாம் யாரை நாடினோமோ அவர்கள் காப்பாற்றப்பட்டனர். குற்றம் புரிந்த கூட்டத்தை விட்டும் நமது வேதனை நீக்கப்படாது. அவர்களின் வரலாற்றில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது. (இது) இட்டுக்கட்டப்பட்ட செய்தி அல்ல. மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்தி, ஒவ்வொரு பொருளையும் விளக்கிக் கூறுகிறது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நேர்வழியாகவும், அருளாகவும் உள்ளது.
(அல்குர்ஆன்:12:110,111)
இறைத்தூதர்களின் வரலாறு மனிதர்கள் படிப்பினை பெறவே என்பதை இவ்விரு வசனங்கள் விளக்குகின்றன.
அந்த வரிசையில் இறைத்தூதர் சுலைமான் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அல்லாஹ் திருக்குர்ஆனில் எடுத்துரைக்கின்றான். நபி சுலைமான் (அலை) அவர்களைப் பொறுத்த வரை பல்வேறு அற்புதங்கள் வழங்கப்பட்ட இறைத்தூதர் ஆவார்.
ஜின்கள், மனிதர்கள், பறவைகள் ஆகியவற்றின் படைகள் ஸுலைமானுக்காகத் திரட்டப்பட்டு, அவர்கள் அணி வகுக்கப்பட்டனர்.
(அல்குர்ஆன்:27:17)
பறவைகளின் பாஷையும் சுலைமான் நபியவர்களுக்கு இறைவனால் கற்றுக் கொடுக்கப்பட்டிருந்தது.
தாவூதுக்கு ஸுலைமான் வாரிசானார். “மக்களே! பறவையின் மொழி எங்களுக்குக் கற்றுத் தரப்பட்டுள்ளது. அனைத்துப் பொருட்களும் எங்களுக்குத் தரப்பட்டுள்ளன. இதுவே தெளிவான அருட்கொடையாகும்’’ என்று அவர் கூறினார்.
(அல்குர்ஆன்:27:16)
இத்தகைய சுலைமான் நபியின் வாழ்வில் ஓர் எறும்பினைப் பற்றியும் ஒரு பறவையைப் பற்றியும் அல்லாஹ் கூறுகிறான். இறைவன் எந்த ஒன்றையும் வீணாகக் கூறுபவன் அல்ல என்ற அடிப்படையில் இது தொடர்பாக இறைவன் கூறும் நிகழ்வை நோக்கும் போது, மனிதர்கள் படிப்பினை பெறத்தக்க அம்சம் இதிலே அடங்கியுள்ளது என்ற முடிவிற்கு எளிதாக வரலாம். எறும்பு தொடர்பாக இறைவன் கூறும் தகவல் இது தான்.
அவர்கள் எறும்புப் புற்றின் அருகே வந்தபோது “எறும்புகளே! உங்கள் குடியிருப்புகளுக்குள் நுழையுங்கள்! ஸுலைமானும், அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்திடக் கூடாது’’ என்று ஓர் எறும்பு கூறியது. அதன் கூற்றினால் (ஸுலைமான்) புன்னகை சிந்தி சிரித்தார். “என் இறைவா! என் மீதும், எனது பெற்றோர் மீதும் நீ செய்த அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்தவும், நீ திருப்தியடையும் நல்லறத்தைச் செய்யவும் எனக்கு உதவுவாயாக! உனது அருளால் உனது நல்லடியார்களில் என்னையும் சேர்ப்பாயாக!’’ என்றார்.
(அல்குர்ஆன்:27:18,19)
சுலைமான் நபியவர்கள் தனது படை, பரிவாரங்களுடன் புறப்பட்டு செல்லும் போது ஓர் எறும்பு சுலைமான் நபியின் படை வருவதை அறிகிறது. படையினரின் மிதிக்குள்ளாகி நசுங்கி விடாமல் தன்னைப் பாதுகாப்பதுடன் சக எறும்புகளையும் பாதுகாக்கக் குரலெழுப்புகின்றது.
‘‘எறும்புகளே! உங்கள் குடியிருப்புகளுக்குள் நுழையுங்கள்! ஸுலைமானும், அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்திடக் கூடாது’’
இது தான் எறும்பு எழுப்பிய குரல்! என்னே ஒரு பொதுநலம்!
ஓர் ஆபத்திலிருந்து தன்னை மட்டும் காத்துக் கொண்டால் போதாது. சக கூட்டாளிகளையும் காக்க வேண்டும் என்ற எறும்பின் பொதுநல உணர்வை, சமூக அக்கறையை என்னவென்பது? சுயநலத்தைத் துறந்து, பொதுநலத்துடன் வாழும் அழகிய பண்பை திருக்குர்ஆன் கூறும் இந்த எறும்பு கற்றுத்தருகிறது.
தானுண்டு, தன் வேலையுண்டு என்றில்லாமல் சமூக அக்கறையுடன் வாழும் போக்கை வாழ்வில் கடைபிடிக்க வேண்டும் எனும் சிந்தனையை இது தூண்டுகிறது.
இதுமட்டுமின்றி சுலைமான் நபியவர்களின் வாழ்வில் ஹுத்ஹுத் எனும் பறவை பற்றியும் கூறப்படுகிறது. தன்னைத் தாண்டி, பிறர் குறித்தும் சிந்திக்க வேண்டும் என்கிற போதனை பறவைக்கும் சுலைமான் நபிக்கும் நடைபெறும் உரையாடலினூடாகவும் ஊட்டப்படுவதை உணரலாம். இதோ பறவை பற்றி இறைவன் கூறும் தகவல்…
பறவைகளை அவர் ஆய்வு செய்தார். “ஹுத்ஹுத் பறவையை நான் காணவில்லையே! அது ஓடி ஒளிந்து விட்டதா?” என்றார். “அதைக் கடுமையான முறையில் தண்டிப்பேன்; அல்லது அதை அறுத்து விடுவேன். அல்லது அது என்னிடம் தெளிவான சான்றைக் கொண்டு வர வேண்டும்” (என்றும் கூறினார்). (அப்பறவை) சிறிது நேரமே தாமதித்தது. “உமக்குத் தெரியாத ஒன்றைத் தெரிந்து, ஸபா எனும் ஊரிலிருந்து உறுதியான ஒரு செய்தியை உம்மிடம் கொண்டு வந்துள்ளேன்’’ என்று கூறியது.
“நான் ஒரு பெண்ணைக் கண்டேன். அவள் அவர்களை ஆட்சி செய்கிறாள். அவளுக்கு ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது. அவளுக்கு மகத்தான சிம்மாசனமும் உள்ளது. அவளும், அவளது சமுதாயமும் அல்லாஹ்வுக்கன்றி சூரியனுக்கு ஸஜ்தா செய்யக் கண்டேன். அவர்களின் செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டி, அவர்களை (நல்)வழியை விட்டும் தடுத்துள்ளான்.
எனவே அவர்கள் நேர்வழி பெற மாட்டார்கள். வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை வெளிப்படுத்தும் அல்லாஹ்வுக்கு ஸஜ்தாச் செய்ய மாட்டார்களா? நீங்கள் மறைப்பதையும், வெளிப்படுத்துவதையும் அவன் அறிவான். அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் மகத்தான அர்ஷின் அதிபதி” (என்றும் கூறியது)
(அல்குர்ஆன்:27:20-26)
பறவைகளை சுலைமான் நபிக்கு அல்லாஹ் வசப்படுத்திக் கொடுத்திருந்தான் என்பதை முன்னர் கண்டோம். அதன்படி பறவைகளை அவர் ஆய்வு செய்கின்ற போது, ஹுத்ஹுத் எனும் பறவை தாமதமாக வருகின்றது. ஸபா எனும் ஊரில் அதன் அரசியும் அந்நாட்டு மக்களும் சூரியனை வணங்கி வழிபடுகின்றனர். வானம், பூமியைப் படைத்து பரிபாலிக்கும் ஏக இறைவன் அல்லாஹ்வையல்லவா அவர்கள் வணங்க வேண்டும்? என்று தகவல் தெரிவிக்கின்றது.
அதன் பிறகே சுலைமான் நபியவர்கள் அந்நாட்டு அரசிக்குக் கடிதம் மூலம் இஸ்லாத்தை எத்திவைத்தார்கள்.
இறுதியில் அந்நாட்டு அரசி இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறார்.
(பார்க்க: அல்குர்ஆன் 27வது அத்தியாயம், வசனம் 28 முதல் 44 வரை)
அந்நாட்டு மக்கள் சூரியனை வணங்குகிறார்கள் எனும் போது, அல்லாஹ்வை அல்லவா இவர்கள் வணங்க வேண்டும் என்று தனது ஆதங்கத்தைத் தெரிவிப்பதிலிருந்து அப்பறவைக்குள்ள சமூக அக்கறை வெளிப்படுவதை அறியலாம்.
இவை யாவும் இறை அற்புதத்தில் நடைபெற்ற நிகழ்வுகளாகும். இவ்விரு நிகழ்வுகளும் மனிதர்களுக்குக் கற்பிக்கும் போதனை… நமக்கேன் வம்பு என்று இருந்து விடாமல் நம்மைச் சுற்றியிருப்பவர்கள் குறித்தும் சிந்திக்க வேண்டும் என்பதைத்தான். இத்தகைய சமூக அக்கறை என்பது அல்குர்ஆனும் அண்ணல் நபியவர்களும் போதிக்கும் அழகிய குணமாகும்.
நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலைநாட்டுவார்கள். ஜகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள்புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
(அல்குர்ஆன்:9:71)
முஃமினான ஆண்கள், பெண்கள் பிற மக்களுக்கு நன்மையை ஏவுவார்கள்; தீமையைத் தடுப்பார்கள் என்கிறது இவ்வசனம். நன்மையை ஏவி, தீமையைத் தடுத்தல் என்பது சமூக அக்கறையின் விளைவே. முஃமின்கள் அதைக் கைக்கொள்ள வேண்டும் என்று திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது. ஒவ்வொரு முஸ்லிமிடமும் இத்தகைய சமூக உணர்வு மேலிட வேண்டும் என்று நபியவர்கள் போதிக்கின்றார்கள்.
பாதையில் கிடக்கும் முற்களை அகற்றச் சொன்னது இதன் அடிப்படையிலேயாகும்.
“தொல்லை தரும் பொருளை அகற்றிப் போடுவது தர்மமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 246
“ஒரு மனிதன் பாதையில் நடந்து சென்ற போது முற்கிளையைக் கண்டு அதை எடுத்து அகற்றிப் போட்டார். அவரின் இந்த நல்ல செயலை அல்லாஹ் ஏற்றுக் கொண்டு அவருக்குப் பாவமன்னிப்பு அளிக்கின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 2472
வாகனத்தில் ஏற சிரமப்படும் ஒருவரை வாகனத்தில் ஏற்றி விடுவதும் சிறந்த நற்காரியம் என்று நபிகளார் நவின்றார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதனின் (உடலிலுள்ள) ஒவ்வொரு மூட்டிற்காகவும் ஒவ்வொரு நாளும் தர்மம் செய்வது கடமையாகும். ஒருவருக்கு அவரின் வாகனத்தில் ஏறிட உதவுவது, அல்லது அவரின் வாகனத்தின் மீது அவரின் மூட்டை முடிச்சுகளை ஏற்றி வைப்பது கூட தர்மமாகும். நல்ல சொல்லும் தொழுகைக்கு நடந்து செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும், (வழியறியாமல் தடுமாறும் ஒருவருக்குச் சரியான) பாதையை அறிவித்துத் தருவதும் தர்மமாகும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 2891
இப்படி, பசித்தோருக்கு உணவளித்தல், அனாதைகளைப் பராமரித்தல், பாதிக்கப் பட்டோருக்காகக் குரலெழுப்புதல் இன்னும் இதுபோன்று நபிகளார் கூறும் பல பணிகள், நம்மைச் சுற்றிலும் வாழும் சமூக மக்கள் மீது அக்கறையுடன் செயலாற்ற வேண்டும் என்பதையே பிரதிபலிக்கின்றன. ஆனால் சில முஸ்லிம்களிடம் இந்தச் சமூக அக்கறை உள்ளதா என்று கேள்வி எழுப்பினால் இல்லை என்பதே அதற்குரிய நியாயமான பதிலாகும்.
இத்தகையோர் பல செயல்களில் நமக்கேன் வம்பு என்று இருந்து விடுகிறார்கள். நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும் அழைப்புப் பணியில் அக்கறை செலுத்துவதில்லை. சமுதாயத்திற்கு ஆட்சியாளர்களாலோ பிற மக்களாலோ தீமை ஏற்படும் போது அதை உரிய விதத்தில் தட்டிக் கேட்பது, பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவுக் கரம் நீட்டுவது போன்ற செயல்களில் பங்கெடுப்பதில்லை. இத்தகைய சுயநலம் வெறுப்பிற்குரியதாகும்.
நான், எனது என்ற சுயநல உணர்வைத் தாண்டி, பிற மக்கள் நலன் குறித்தும் சிந்திக்கும் பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். முஸ்லிமாக இருக்கின்ற ஒவ்வொருவரிடமும் இத்தகைய சமூக அக்கறை மேலிட வேண்டும். திருக்குர்ஆனில் கூறப்பட்ட எறும்பும் பறவையும் கற்றுத் தரும் பாடமும் அதுவே!