என் தந்தையின் சொத்தை எவ்வாறு பங்கிடுவது?
என் தந்தை மரணித்து 10 வருடங்கள் ஆகின்றன. என் தந்தைக்கு சொத்து (வீடு) உள்ளது. வீட்டின் மதிப்பு ஒரு லட்சம் ஆகும். என் தந்தைக்கு ஒரு மனைவி மற்றும் பிள்ளைகளாக நான் மற்றும் எனது தம்பி ,எனது சகோதரி ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளோம். சொத்தை எவ்வாறு பங்கிடுவது?
இறந்தவருக்குப் பிள்ளைகள் இருந்தால் மனைவிக்கு எட்டில் ஒரு பாகமும் பிள்ளைகள் இல்லாவிட்டால் மனைவிக்கு நான்கில் ஒரு பாகமும் அதாவது கால் பாகம் கொடுக்க வேண்டும் என்று குர்ஆன் உத்தரவிடுகின்றது.
உங்களுக்குக் குழந்தை இல்லாவிட்டால் நீங்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்கள் மனைவியருக்கு உண்டு. உங்களுக்குக் குழந்தை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம் அவர்களுக்கு உண்டு. நீங்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பின்பே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்).
திருக்குர்ஆன் 4:12
இந்த வசனத்தின் அடிப்படையில் உங்கள் தாய்க்கு மொத்த சொத்தில் எட்டில் ஒரு பாகத்தைக் கொடுக்க வேண்டும். மீதமுள்ள சொத்து மகனுக்கு இரண்டு பங்கு மகளுக்கு ஒரு பங்கு என்ற அடிப்படையில் பங்கிடப்பட வேண்டும்.
ஆண் மக்கள் இருவர் இருப்பதால் ஒவ்வொருவருக்கும் இரண்டு பங்கு என்ற கணக்கில் நான்கு பங்குகள் உண்டு. உங்கள் சகோதரிக்கு ஒரு பங்கு உண்டு.
இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு” என்று உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான்.
திருக்குர்ஆன் 4:11
சொத்தின் மதிப்பு ஒரு லட்சம் என்று கூறியுள்ளீர்கள். ஒரு லட்சத்தில் எட்டில் ஒரு பாகம் என்பது 12500 ரூபாயாகும். எனவே இந்தத் தொகை உங்களுடைய தாய்க்கு உரிய பங்கு. இது போக மீதமுள்ள 87500 ரூபாயை 5 பங்குகளாக ஆக்கினால் ஒரு பங்கின் மதிப்பு 17500 ஆகும்.
உங்கள் சகோதரிக்கு ஒரு பங்கு உண்டு என்பதால் 17500 ரூபாய் அவருக்கு உரியது. உங்களுக்கும் உங்கள் சகோதரருக்கும் இரண்டு இரண்டு பங்குள் வீதம் உங்களில் ஒவ்வொருவருக்கும் 35000 ரூபாய் உண்டு.
பாகம் பிரிக்கும் போது சொத்தின் விலை கூடினால் அல்லது குறைந்தால் அதற்கேற்ப கணக்கிட்டுக் கொள்ளவும்.