எனக்காக துஆ செய்யுங்கள் என கேட்கலாமா?
கேட்கலாம்
இறைவனுடைய இடத்தில் பிறரை வைப்பதே இணைவைப்பாகும். நமக்காகப் பிரார்த்தனை செய்யுமாறு பிறரிடம் கூறும் போது இறைவனுடைய எந்தத் தகுதியையும் அவருக்கு நாம் வழங்கவில்லை. மாறாக நாம் யாரிடம் பிரார்த்தனை செய்யுமாறு கூறுகிறோமோ அவரும் அல்லாஹ்வின் அடிமை தான் என்ற கருத்து இந்தக் கோரிக்கையில் அடங்கியுள்ளது.
மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரு காரியத்தைச் செய்யுமாறு பிறரிடம் கூறுவது தவறல்ல. பிறருக்காக பிரார்த்தனை செய்வது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது மட்டுமின்றி மிகவும் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது.
அவர்களுக்குப் பின் வந்தோர் “எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்திவிட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! எங்கள் உள்ளங்களில் நம்பிக்கை கொண்டோர் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடாதே! நீ இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்” என்று கூறுகின்றனர்.
அல்குர்ஆன் (59 : 10)
“என் இறைவா! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டு எனது வீட்டில் நுழைந்தவரையும் நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் மன்னிப்பாயாக! அநீதி இழைத்தோருக்கு அழிவைத் தவிர வேறு எதையும் அதிகமாக்காதே!” (எனவும் பிரார்த்தித்தார்)
அல்குர்ஆன் (71 : 28)
ஸஃப்வான் கூறுகிறார் : நான் ஷாம் (சிரியா) நாட்டுக்குச் சென்ற போது (என் மனைவியின் தந்தை) அபுத்தர்தா (ரலி) அவர்களது இல்லத்திற்குச் சென்றேன். அங்கு அவரைக் காண முடியவில்லை. (என் மனைவியின் தாய்) உம்முத் தர்தா (ரலி) அவர்களைக் கண்டேன். அவர் என்னிடம், “இந்த ஆண்டில் நீங்கள் ஹஜ்ஜுக்குச் செல்ல நாடியுள்ளீர்களா?” என்று கேட்டார். நான் “ஆம்” என்றேன்.
அதற்கு அவர் சொன்னார்: அவ்வாறாயின் எங்கள் நலனுக்காகவும் பிரார்த்தியுங்கள்.
ஏனெனில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “ஒரு முஸ்லிம் கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகச் செய்யும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகிறது. அந்த முஸ்லிமின் தலைக்கருகில் அதற்கென நியமிக்கப்பட்டுள்ள வானவர் ஒருவர் உள்ளார்.
அந்த முஸ்லிம் தம் சகோதரருக்காக நன்மை வேண்டிப் பிரார்த்திக்கும் போதெல்லாம், அதற்கென நியமிக்கப்பட்டுள்ள அந்த வானவர், “இறைவா! (இவருடைய பிரார்த்தனையை) ஏற்றுக் கொள்வாயாக! என இறைவனிடம் பிரார்த்திக்கிறார். அதைப் போன்றே உமக்கும் கிடைக்கட்டும் எனப் பிரார்த்திக்கிறார்” என்று கூறினார்கள்.
பிறகு நான் (அங்கிருந்து) புறப்பட்டுக் கடைத்தெருவுக்குச் சென்ற போது, அபுத்தர்தா (ரலி) அவர்களைச் சந்தித்தேன். நபிகள் நாயகம் (ஸல் அவர்கள் அவ்வாறு கூறியதாக அவர்களும் என்னிடம் அறிவித்தார்கள்.
முஸ்லிம் (5281)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒரு முஸ்லிமான அடியார், கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகப் பிரார்த்திக்கும் போது, வானவர் “உனக்கும் அதைப் போன்றே கிடைக்கட்டும்!” என்று கூறாமல் இருப்பதில்லை.
அறிவிப்பார் : அபுத்தர்தா (ரலி)
முஸ்லிம் (5279)
நபித்தோழர்கள் நபிகள் நாயகம் (ஸல்)அவர்களிடம் பல சந்தர்ப்பங்களில் தங்களுக்காகப் பிரார்த்தனை செய்யுமாறு கூறியுள்ளார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அந்தத் தோழர்களுக்காக பிரார்த்தனை செய்துள்ளார்கள். இவ்வாறு கூறுவது இணைவைப்பு என்றால் இதைகள் நாயகம் நபி (ஸல்) அவர்கள் தடை செய்திருப்பார்கள். அவர்களின் கோரிக்கையை ஏற்று பிரார்த்தனை செய்திருக்க மாட்டார்கள்.
கறுப்பு நிறப் பெண்மணி ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் வலிப்பு நோயால் (அடிக்கடிப்) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்து கொள்கின்றது. ஆகவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்றார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்” என்று சொன்னார்கள்.
இந்தப் பெண்மணி, “நான் பொறுமையாகவே இருந்து விடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும் போது ஆடை விலகி) என் உடல் திறந்து கொள்கிறது. அப்படித் திறந்து கொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னார். அவ்வாறே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி (5652)
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தந்தை (புஸ்ர் பின் அபீபுஸ்ர்-ரலி) அவர்களிடம் (விருந்தாளியாகத்) தங்கினார்கள். அப்போது அவர்களுக்கு அருகே உணவும் (பேரீச்சம் பழம், பாலாடை, நெய் ஆகியவற்றால் செய்யப்பட்ட “வத்பா’ எனும்) ஒரு வகைப் பலகாரமும் வைத்தோம்.
அதிலிருந்து அவர்கள் உண்டார்கள். பிறகு பேரீச்சம் பழங்கள் கொண்டு வரப்பட்டன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேரீச்சம் பழத்தைச் சாப்பிட்டுவிட்டு, அவற்றின் கொட்டைகளை (பாத்திரத்தினுள்ளே போடாமல்) தம்மிரு விரல்களுக்கிடையே வைத்திருந்(துவிட்டு பிறகு வீசியெறிந்)தார்கள்.
பிறகு ஒரு பானம் கொண்டு வரப்பட்ட போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை அருந்தினார்கள். பிறகு மீதியிருந்ததைத் தமக்கு வலப் பக்கத்திலிருந்தவருக்குக் கொடுத்தார்கள். பிறகு (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்படத் தயாரான போது) என் தந்தை, அ
ல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாகனத்தின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு, “எங்களுக்காகப் பிரார்த்தியுங்கள்” என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இறைவா! நீ இவர்களுக்கு வழங்கிய உணவில் அருள்வளம் (பரக்கத்) புரிவாயாக! இவர்களை மன்னித்து, இவர்களுக்குக் கருணை புரிவாயாக!” (அல்லாஹும்ம, பாரிக் லஹும் ஃபீமா ரஸக்த்தஹும்,, வஃக்ஃபிர் லஹும், வர்ஹம்ஹும்) எனப் பிரார்த்தித்தார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி)
நூல் : முஸ்லிம் (4149)
மேலும் நாம் அன்றாடம் நமது தொழுகையில் நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்காக ஸலவாத் எனும் துஆ செய்கிறோம். இவ்வாறு தனக்காக துஆ செய்யுமாறு நபிகள் நாயகம் ஸல் அவர்கள் நம்மை வலியுறுத்தி உள்ளனர். மேலும் பாங்கு முடிந்தவுடன் எனக்காக துஆச் செய்யுங்கள் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறியுள்ளனர். அதை ஏற்று நாம் அல்லாஹும்ம் ரப்ப ஹாதிஹித் … என்ற துஆவை பாங்குக்குப் பின்னர் ஓதுகிறோம். இதையும் ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாம்.
உயிருள்ளவர் தன்னைப் போன்று உயிருடன் இருப்பவரிடம் தனக்காகப் பிரார்த்தனை செய்யுமாறு கூறுவது தவறல்ல. ஆனால் உயிருள்ளவர் இறந்து போனவரிடம் இவ்வாறு கோரிக்கை வைப்பது இணை வைப்பாகும்.
நாம் உயிருள்ளவரிடம் பேசும் போது அவரை சாதாரண மனிதன் என்றே கருதுகின்றோம். ஆனால் இறந்து போனவரிடம் பேசும் போது அவருக்கு இறைவனுடைய தன்மைகள் இருப்பதாக கருதப்படுகின்றது.
சப்தமின்றி மனதுக்குள் கேட்கப்படும் கோரிக்கையை அல்லாஹ்வால் மட்டுமே அறிய முடியும். எந்த மொழியில் கேட்டாலும் அதை இறைவனால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். ஒரே நேரத்தில் எத்தனை பேர் அழைத்தால் அனைவரின் பிரார்த்தனையையும் அவனால் மட்டுமே பிரித்து அறிய முடியும். இந்தத் தன்மைகள் மனிதர்களுக்கு இல்லை.
இறந்து போனவரிடம் கோரிக்கை வைப்பவர்கள் மேற்கண்ட தன்மைகள் இறந்து போனவர்களுக்கு இருப்பதாக நினைக்கின்றனர். எனவே தான் அல்லாஹ்விடம் கேட்பது போன்று இவர்களிடம் கேட்கின்றனர். இது இணைவைப்பாகும்.