எது நாகரீகம்? ஹிஜாப் என்பது அலங்காரமா?
அதிவேகமாக வளர்ந்து வரும் அறிவியல் உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காலங்கள் மாற மாற அந்தந்த காலத்திற்கு ஏற்றாற்போன்று வாழ்க்கை முறையில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதையும், புதிய புதிய கண்டுபிடிப்புகளையும் நாம் கண்டுகொண்டே இருக்கிறோம்.
நமது சிறு வயதில் கண்கவர் பொருளாக இருந்த மண்ணெண்ணெய் விளக்கு, மெழுகுவர்த்தி, மாட்டுவண்டி போன்றவை இன்று தடம் தெரியாமல் அழிந்து விட்டன. இன்றைய தலைமுறையினருக்கு இதுபோன்ற பொருட்கள் என்னவென்றே தெரியாமல் போய்விட்டது. இவையெல்லாம் இன்றைய சமூகம் கண்ட வளர்ச்சி என்று நாம் பெருமிதம் கொண்டாலும் மறுபுறம் நாகரீகம் என்ற பெயரில் இவ்வளர்ச்சி பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. படிப்பறிவு இல்லாமல், எதையும் அறியாத பட்டிக்காடாக, பாமரர்களாக வாழ்ந்த காலத்தில் ஏற்படாத பல சமூக சீரழிவுகள் இன்று அரங்கேறி வருகின்றன.
ஆம்! கற்பழிப்பு, கள்ளத்தொடர்பு, ஓரினச் சேர்க்கை, விபச்சாரம், கெட் டு கெதர் எனப்படும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் தவறான உறவு என அன்றைய காலத்தில் அரிதாக இருந்த பல விஷயங்கள் இன்றைய நவீன யுகத்தில் மலிந்து போய்விட்டன.
கல்வி, செல்வம், விஞ்ஞானம் என முன்னோக்கிச் செல்லும் நாகரீக உலகில் கற்பொழுக்கம், பாரம்பரியம், பண்பாடு, ஆன்மீக நெறிகள் அனைத்தும் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. இதுதான் இன்றைய நவீன உலகின் வளர்ச்சி (?)
குறிப்பாக நாகரீகம் என்ற பெயரில் அடிமைப்பட்டு அத்துமீறி நடந்துகொள்பவர்களில் பெரும்பான்மையானோர் பெண்களாகவே இருக்கின்றனர். முஸ்லிம் பெண்களும் கூட மார்க்கம் சொல்லக் கூடிய ஒழுங்குகளைப் பேணாமல் இக்காலத்திற்கு ஏற்றாற்போல் தங்களை மாற்றிக் கொண்டு வருகின்றனர். அவர்கள் செய்யும் அட்டூழியங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது
வளர்ச்சி கண்ட வீழ்ச்சி
பெண்கள் தங்கள் குடும்பத்தைக் கவனிப்பது, குழந்தைகளைப் பராமரிப்பது, வீட்டு வேலைகள் பார்ப்பது என இருந்த காலம் மலையேறிப் போய் தற்போது சுற்றுலாத் தலங்கள், ஜவுளிக் கடை, நகைக்கடை, பொருட்காட்சி, கடைவீதி என எங்கு திரும்பினாலும் பெண்கள் கூட்டம் அலைமோதுகின்றது.
அது மட்டுமா? ஆணும் பெண்ணும் சரி சமம் என்று சமத்துவம் பேசுவது, ஆண்கள் துணையின்றிப் பயணிப்பது, சமூக வலைத்தளங்களில் அடிமைப்பட்டு அதிலேயே மூழ்கிக் கிடப்பது, யாரென்றே தெரியாத நபர்களுடன் பேசிப் பழகி காதல் வயப்பட்டு, கற்பிழந்து, உயிரிழக்கும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
இன்றைய காலத்திற்கு ஏற்றாற்போல் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தான் இத்தகைய செயல்களுக்குக் காரணியாக அமைகின்றது. ஊர் சுற்றுவதும், அந்நிய ஆண்களுடன் தனித்திருப்பதும் நவீன மயமோ, நாகரீக வளர்ச்சியோ கிடையாது. உண்மையில் இவை அநாகரீகம், அசிங்கமாகும்.
இதோ நமது மார்க்கம் நமக்குக் கற்றுத் தரும் நாகரீகத்தைப் பாருங்கள்.
உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்! தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இவ்வீட்டினராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப்படுத்தவுமே அல்லாஹ் நாடுகிறான்.
அல்குர்ஆன் 33:33
நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்ல. நீங்கள் இறையச்சமுடையோராக இருந்தால் குழைந்து பேசாதீர்கள்! யாரது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்.
அல்குர்ஆன் 33:32
இச்சட்டங்கள் நபியின் மனைவிமார்களைக் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டு இருந்தாலும், அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் பொருந்தக்கூடியதே! வெளியில் சுற்றித் திரிவது என்பது அறிந்தவர்களின் பண்பு கிடையாது; அது அறியாமைக் காலத்தவர்களின் பண்பு என்பதை இவ்வசனம் சுட்டிக் காட்டுகின்றது. எனினும் அவசியத் தேவைக்காகச் செல்வதை மார்க்கம் தடை செய்யவில்லை. அநாவசியமாகச் சுற்றுவதையே இங்கு சொல்லப்படுகின்றது. அவசியத் தேவைகளுக்காக வெளியில் செல்வது தவறில்லை என்பதை நபிகளாரின் ஹதீஸ்களிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடியும்.
சமூக வலைத்தளங்களான வாட்சப், ஃபேஸ்புக் போன்றவை வெறும் பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டுமல்ல! அது விபச்சாரத்தின் ஓர் அம்சம். விபச்சாரத்தைத் தூண்டக்கூடிய ஓர் ஆயுதம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விபச்சாரத்தில் மனிதனுக்குள்ள பங்கு (விதியில்) எழுதப்பட்டுள்ளது. அதை அவன் அடையக் கூடியவனாகவே உள்ளான். கண்கள் செய்யும் விபச்சாரம் (தவறான) பார்வையாகும். காதுகள் செய்யும் விபச்சாரம் (ஆபாசப் பேச்சுகளைச்) செவியுறுவதாகும். நாவு செய்யும் விபச்சாரம் (ஆபாசப்) பேச்சாகும். கை செய்யும் விபச்சாரம் (அந்நியப் பெண்ணைப்) பற்றுவதாகும். கால் செய்யும் விபச்சாரம் (தவறான உறவைத் தேடி) அடியெடுத்து வைப்பதாகும். மனம் இச்சை கொள்கிறது; ஏங்குகிறது. மர்ம உறுப்பு அதை உண்மையாக்குகிறது; அல்லது பொய்யாக்குகிறது.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); நூல்: முஸ்லிம் 5165
ஆள் பாதி! ஆடை பாதி!
ஒருவரது தரத்தை, தகுதியை அவரது ஆடையை வைத்தே முடிவு செய்து விடலாம் என்பதே, ஆள் பாதி, ஆடை பாதி என்பதன் பொருள். இந்த வாசகம் தற்போதைய பெண்களுக்கு முற்றிலும் பொருந்திப் போகின்றது. பண வசதி இல்லாமல், பட்டினியில் வாடிய வண்ணம் அன்றைய காலத்தில் இருந்த பெண்கள் தங்களிடம் இருந்த ஓரிரு ஆடைகளைக் கொண்டு தங்கள் உடல் முழுவதையும் மறைந்து வந்தார்கள். கிழிந்த ஆடைகளைத் தைத்து உடுத்தி வந்தார்கள்.
ஆனால் இன்றோ, பசியில்லை! பட்டினியில்லை! ஆடைகளுக்கு எவ்விதக் குறையுமில்லை! எனினும் ஃபேஷன் என்ற பெயரில் முட்டி தெரிய குட்டைப் பாவாடை, தொப்புள் தெரிய மேலாடைகள், ஜன்னல் வைத்த ஜாக்கெட்டுகள், கையில்லாத சுடிதார்கள், ஆங்காங்கே கிழிந்து தொங்கும் ஜீன்ஸ் பேண்ட், டி-சர்ட், முக்கால் டிரவுசர், உடலை ஒட்டிய லெக்கின்ஸ்கள், உள்ளாடை வெளியே தெரியுமளவுக்கு மேலாடைகள் என இன்றைய பெண்கள் ஆள் பாதி, ஆடை பாதியாகத் தான் இருக்கின்றார்கள்.
இவை தான் நவீன உலகின் நாகரீக ஆடைகள் என்று கூறுகின்றனர். சினிமா கூத்தாடிகளின் பாணியில் ஆடை முறைகளை மாற்றியமைத்துக் கொண்டு, காலம் மாறி விட்டது, அதற்கேற்றாற்போல் நாங்களும் மாறிக் கொண்டோம் என்று அங்கலாய்த்துக் கொள்கின்றனர். இத்தகைய ஆடைகள் தான் தங்களைக் கண்ணியமாகக் காட்டும் என்பதும், இது தான் நாகரீகம் என்பதுமே பெண்களின் மனநிலையாக இருக்கின்றது. உடல் முழுவதும் மறைத்து ஆடை அணிந்திருந்தால், பட்டிக்காடு என்று கிண்டல் செய்யும் உலகமாக இருக்கின்றது.
உண்மையில் பெண்களைக் கண்ணியப்படுத்தும் ஆடை எது என்பதைத் திருக்குர்ஆன் கூறுகின்றது.
நபியே! உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தங்கள் மீது தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது’’ அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.
அல்குர்ஆன் 33:59
பிறரின் தவறான பார்வையிலிருந்து நம்மைக் காக்கும் ஆடையே கண்ணியமானது. உடல் அங்கங்களை வெளிச்சமிட்டுக் காட்டும் வகையில் ஆடை அணிவது நாகரீகமோ, கண்ணியமோ கிடையாது. அவை பிறரின் கெட்ட பார்வைக்கும், அருவருப்பான பேச்சுக்குமே வழிவகுக்கும்.
அல்லாஹ் கூறும் இந்த வசனத்தில் ஹிஜாப் முறையை வலியுறுத்துகின்றான். இந்த ஹிஜாபிலும் தற்போது ஃபேஷன் புகுந்து விட்டது.
ஹிஜாப் என்பது அலங்காரமா?
இந்த நவநாகரீக உலகின் ஜாம்பவான்கள் நாங்கள் என்று சொல்லிக் கொண்டு, அரைகுறை ஆடைகளுடன் சுற்றித் திரியும் பெண்கள் ஒருபுறம் என்றால், இறைவன் கட்டளையிடும் ஆடையாகிய ஹிஜாபையே, இவர்கள் ஏன் இதை அணிந்திருக்கிறார்கள் என்று கேட்கச் செய்யும் பெண்கள் மறுபுறம்!
ஆம்! இன்றைய ஃபேஷன் உலகில் கண்ணியமான ஆடையாகிய ஃபர்தாவும் மாட்டிக் கொண்டு பாடாய் படுகின்றது. உடைகளில் பல்வேறு மாடல்கள் வருவது போன்று ஃபர்தாக்களிலும் அம்பர்லா, அனார்கலி, கவுன் மாடல் என்று விதவிதமான மாடல்கள் வந்து, அவையே பெண்களின் விருப்பத்திற்குரிய ஆடையாக இருக்கின்றது.
கைப்பகுதி, இடுப்புப் பகுதி, பின்புறம் இறுக்கமாகவும், கண்ணைக் கவரும் வேலைப்பாடுகள் நிறைந்த ஃபர்தாக்களும், அதற்கேற்றாற்போல் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட முக்காடுகளும் பார்க்காதவர்களைக் கூட திரும்பிப் பார்க்க வைக்கும் அளவிற்கு அலங்கார ஆடையாக, பெண்களை மேலும் மெருகூட்டும் ஆடையாக இன்றைய ஃபர்தாக்கள் மாறி விட்டன. இதேபோன்ற ஃபர்தாக்களைத் தான் பெண்கள் விரும்பி வாங்குவதாகவும், வேலைப்பாடுகள் இல்லாத சாதாரண ஃபர்தாக்கள் விற்பனையாவது இல்லை என்றும் வியாபாரிகள் கூறுகின்றனர்.
தமது அலங்காரமும், ஆடையும் தான் வெளியே தெரியாமல் மறைக்கப்படுகின்றது. ஃபர்தாவாவது கொஞ்சம் அலங்காரமாக இருக்கட்டுமே! என்று ஏக்கத்துடன் பெண்கள் தங்கள் தவறை நியாயப்படுத்துகின்றனர்.
உண்மையில் தற்போது பெண்கள் அணியும் ஆடம்பரமான ஹிஜாப் தான் அவர்களை மேலும் மேலும் அலங்கரித்துக் காட்டுகின்றது. ஆண்களைத் தம் பக்கம் கவரும் வகையில் அமைந்துள்ளது. இன்றைய காலத்து ஃபர்தாக்களுக்கு, சாதாரண சேலை, சுடிதாரே பரவாயில்லை என்று எண்ணுமளவுக்கு நமது பெண்களின் ஃபர்தா முறை மோசமாக இருக்கின்றது.
இத்தகைய அவல நிலைக்குப் பெண்கள் தள்ளப்பட்டதற்கு முக்கியக் காரணம், ஹிஜாப் அணிவது எதற்காக? அதன் மையக்கரு என்ன? என்று நமது பெண்கள் விளங்காமல் இருப்பது தான்.
இதில் நாம் கவனிக்க வேண்டிய, கவனிக்கத் தவறிய விஷயம் என்னவென்றால் ஹிஜாப் என்பது தனிப்பட்ட கருப்பு நிறத்தில் தயாரிக்கப்படும் ஓர் ஆடை கிடையாது. நமது உடல் அழகையும் அலங்காரத்தையும் மறைப்பதற்காக அணியக்கூடிய ஆடையே ஹிஜாப் ஆகும். நபித்தோழியர், தாம் உடுத்தியிருந்த ஆடையாலேயே தமது அலங்காரங்கள் வெளியே தெரியாத வண்ணம் உடல் முழுவதையும் மறைத்துக் கொண்டனர். ஆனால் இன்றோ, அலங்காரத்தை மறைப்பதற்கென்று அணியப்படும் ஓர் ஆடையே அலங்காரமாக மாறி விட்டது. இதுபோன்ற ஹிஜாப்களை அணியாமல் இருப்பதே மேல்! இதோ இறைவன் கூறுகிறான்.
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.
அல்குர்ஆன் 24:31
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஒரு பெண் (நடந்து வந்தால்) ஷைத்தான் (தூண்டிவிடும்) கோலத்திலேயே முன்னோக்கி வருகிறாள்; ஷைத்தான் (தூண்டிவிடும்) கோலத்திலேயே திரும்பிச் செல்கிறாள். எனவே, உங்களில் ஒருவரது பார்வை ஒரு பெண்ணின் மீது விழுந்து (இச்சையைக் கிளறி)விட்டால், உடனே அவர் தம் துணைவியிடம் செல்லட்டும். ஏனெனில், அது, அவரது மனத்தில் தோன்றும் (கெட்ட) எண்ணத்தை அகற்றிவிடும்’’ என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 2718
நாகரீக ஆடையும் நரகப் படுகுழியும்
அரைகுறை ஆடை அணிபவர்களே! ஹிஜாப் என்ற பெயரில் தங்கள் அழகையும் ஆடம்பரத்தையும் வெளிப்படுத்தும் பெண்களே! நீங்கள் அதிகமாக விரும்பி அணியக்கூடிய உங்கள் ஆடைகள், அலங்காரங்கள் அனைத்தும் நரகில் கொண்டு போய் தள்ளக்கூடிய நச்சுக்கள் என்பதை ஒருகணம் சிந்தியுங்கள்!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தாம் வாழ்கின்ற காலத்திலேயே சில முன்னறிவிப்புகளைச் செய்துள்ளார்கள். அதில் ஒன்று பெண்களைப் பற்றியது தான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அவ்விரு பிரிவினரை நான் பார்த்ததில்லை. (முதலாம் பிரிவினர் யாரெனில்,) பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக்கொண்டு மக்களை அடி(த்து இம்சி)க்கும் கூட்டத்தார்.
(இரண்டாம் பிரிவினர் யாரெனில்,) மெல்லிய உடையணிந்து, தம் தோள்களைச் சாய்த்தபடி (தளுக்கி குலுக்கி கர்வத்துடன்) நடந்து (அந்நிய ஆடவர்களின் கவனத்தை) தம் பக்கம் ஈர்க்கக்கூடிய பெண்கள் ஆவர். அவர்களின் தலை(முடி) சரிந்து நடக்கக்கூடிய கழுத்து நீண்ட ஒட்டகத்தைப் போன்றிருக்கும். அவர்கள் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள்; (ஏன்) அதன் வாடையைக்கூட நுகரமாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு தொலைவிலிருந்து வீசிக்கொண்டிருக்கும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); நூல்: முஸ்லிம் 5487
நபிகளார் கூறிய அந்தக் கூட்டத்தார் இக்கால நாகரீகப் பெண்கள் தானோ என்ற ஐயம் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே செல்கின்றது. ஏனெனில் இந்தப் பெண்களின் ஆடைகள் அவ்வாறே அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி தரையில் இழுபடக்கூடிய ஆடை அணிவதும் தடைசெய்யப்பட்டுள்ளது, நரகில் கொண்டு சேர்க்கக் கூடியது.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கர்வத்தோடு தன்னுடைய கீழாடையை(த் தரையில் படும்படி) இழுத்துச் சென்றவனை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி); நூல்: புகாரி 5787, 5788, 5789
நமது பெண்களில் பெரும்பாலானவர்களின் ஹிஜாப் தரையில் இழுபடும் விதத்தில் ஃபேஷனாகவே இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பொறுப்பாளிகளே! பொறுப்புணருங்கள்!
ஆண்களே! உங்கள் பொறுப்பின் கீழ் இருக்கும் புதல்வியர், சகோதரிகள், மனைவியர் ஆகியோர் மீது கவனம் செலுத்துங்கள். அவர்கள் அணியக் கூடிய ஆடை, ஹிஜாப் போன்றவை எவ்விதத்தில் இருக்கின்றது என்பதைக் கவனியுங்கள். அதேபோன்று, ஓர் ஆடை வாங்கித் தருவதற்கு முன், அதன் விலை மதிப்பை, தரத்தை, அலங்காரத்தைப் பார்ப்பதற்கு முன்னால், அது நமது பெண்கள் அணிவதற்குத் தகுதியானதாக உள்ளதா என்பதை உற்று நோக்குங்கள்! ஏனெனில், அதிகமான ஆண்கள் தமது மனைவி, மக்கள் எதைக் கேட்டாலும், எதன் பக்கம் கை நீட்டினாலும் துளி கூட யோசிக்காமல் அதை வாங்கிக் கொடுக்கின்றனர். அதனால் ஏற்படும் பின்விளைவு என்ன என்பதைச் சிந்திப்பதில்லை.
உங்கள் பெண்களின் அழகும் அலங்காரமும் அந்நிய ஆண்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் கண்காட்சி அல்ல என்பதை உணருங்கள்! உங்கள் பெண்களுக்கும் உணர்த்துங்கள்! நாம் அலட்சியமாக இருக்கும் ஆடை விஷயம் கூட நம்மை நரகத்தில் தள்ளக்கூடியதாக இருக்கின்றது என்பதை மறவாதீர்கள்!
நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறுசெய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.
அல்குர்ஆன் 66:6
எனவே நமது குடும்பத்தாரை நரகிலிருந்து காக்கும் பொறுப்பு நம்மில் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது. பொறுப்பாளிகளே! உங்களது கண்டிப்பின்மையும் கவனக்குறைவும் உங்கள் குடும்பத்துப் பெண்கள் நரகம் செல்லக் காரணியாக அமைந்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்!
ஸாலிஹான பெண்
இறைவன் தனது திருமறையில் ஸாலிஹான பெண்ணின் குணத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறான்.
கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றை (கற்பை) காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள்.
அல்குர்ஆன் 4:34
முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்படும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகியோருக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்.
அல்குர்ஆன் 33:35
காலம் மாறினாலும், மாற்றங்கள் பல தோன்றினாலும் மார்க்கச் சட்டங்கள், இறை நெறிகள் ஒருபோதும் மாறாது. எனவே, நாகரீகம் என்ற பெயரில் நம்மை நாமே அழித்துக் கொள்ளாமல் நமது ஆடை மற்றும் நடைமுறைகளில் கவனம் செலுத்துவோம்.
கற்பைப் பேணி வாழக்கூடிய ஸாலிஹான பெண்ணாக, இறைவனின் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் பெறும் பாக்கியத்தைப் பெறுபவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள்புரிவானாக!