உலகிலுள்ள அனைத்தையும் விட உயர்வானது எது❓
தனது அடியார்கள் ஒவ்வொரு தருணத்திலும் தன்னை நினைவு கூர வேண்டும் என்றும்,
அவ்வாறு அவனை நினைத்துத் துதிப்பது இவ்வுலகில் நாம் செய்யும் அனைத்து நற்காரியங்களை விடவும் உயர்வானது என்றும் தனது திருக்குர்ஆனில் இறைவன் கூறுகின்றான்.
அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது.
அல்குர்ஆன் 29:45
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: என்னைக் குறித்து என் அடியான் எப்படி நினைக்கிறானோ அப்படியே நான் அவனிடம் நடந்துகொள்வேன். அவன் என்னை நினைவுகூரும்போது அவனுடன் நான் இருப்பேன்.
அவன் தனது உள்ளத்தில் என்னை நினைவுகூர்ந்தால், நானும் எனது உள்ளத்தில் அவனை நினைவுகூருவேன்.
என்னை ஓர் அவையோர் மத்தியில் அவன் நினைவுகூர்ந்தால், அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையோரிடம் அவனை நான் நினைவுகூருவேன்.
அவன் என்னை ஒரு சாண் அளவு நெருங்கினால், நான் ஒரு முழம் அளவு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவு என்னை நெருங்கினால், (வலமாகவும் இடமாகவும் விரிந்த) இரு கைகளின் நீட்டளவு அவனை நான் நெருங்குவேன்.
என்னை நோக்கி அவன் நடந்துவந்தால், அவனை நோக்கி நான் ஓடிச்செல்வேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: முஸ்லிம் 5195
என்னை நினையுங்கள்! நானும் உங்களை நினைக்கிறேன். எனக்கு நன்றி செலுத்துங்கள்! எனக்கு நன்றி மறக்காதீர்கள்!
அல்குர்ஆன் 2:152
இறைவன் நம்மை நினைக்கிறான் என்றால் நாம் நினைப்பது போன்று அல்ல. நாம் இறைவனைப் புகழ்ந்து, துதித்து அவனை அழைக்கும் போது அதற்காக நன்மையை வழங்குகிறான் என்பதாகும்.
மக்கள் தொழுகை, நோன்பு, தர்மம் போன்ற வணக்கங்களில் காட்டும் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் திக்ர் செய்வதில் காண முடிவதில்லை. பிரச்சாரங்களில் கூட மேற்சொன்ன வணக்கங்கள் வலியுறுத்தப்படும் அளவிற்கு இது வலியுறுத்தப்படுவதும் இல்லை. இதில் ஏகத்துவவாதிகளும் விதிவிலக்கு இல்லை.
ஆனால் அல்லாஹ்வோ எந்த நிலையிலும் தன்னை நினைவுற வேண்டும் என வலியுறுத்துகின்றான்.
நீங்கள் தொழுகையை முடித்ததும் நின்றும், அமர்ந்தும், படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினையுங்கள்!
அல்குர்ஆன் 4:103
இறைவனைப் புகழ்ந்து, துதித்து, தூய்மைப்படுத்துவதற்கென்று நபி (ஸல்) அவர்கள் அழகிய திருநாமங்களையும் கற்றுத் தந்து, அதற்கான கூலியையும் குறிப்பிட்டுள்ளார்கள்.
—————————
ஏகத்துவம்