உறவைப் பேணுதல்
பதிலுக்குப் பதில் உறவாடுகின்றவர் (உண்மையில்) உறவைப் பேணுகின்றவர் அல்லர், மாறாக, உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைந்து வாழ்பவரே உறவைப் பேணுபவர் ஆவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி); நூல்: புகாரி : 5991
விளக்கம்:
இரத்த உறவைப் பேணி வாழ்வது முஸ்லிம்களின் கடமைகளில் ஒன்றாகும். உறவு முறையைப் பேணி, அவர்களின் நலன்களில் அக்கறை கொண்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருமாறு இஸ்லாம் கட்டளையிட்டுள்ளது.
இஸ்லாத்தின் இந்தக் கட்டளையைப் பேணும் சிலர், தம்முடன் இணைந்து உறவாட விரும்புவோரிடம் மட்டுமே இணைந்திருக்கிறார்கள்.
ஒரு சண்டை வந்துவிட்டால் அல்லது அவர்கள் பேச விரும்பாவிட்டால் அவர்களிடம் நாம் ஏன் பேச வேண்டும்? அவர்களுக்கு ஏன் உதவி செய்ய வேண்டும்? என்று கூறி அவர்களின் உறவை நிரந்தரமாக வெட்டி விடுகின்றனர்.
ஆனால் இஸ்லாம் இந்த நிலையை ஏற்றுக் கொள்வதில்லை. உறவைப் பேணுதல் என்றால் அவர்கள் விரும்பாவிட்டாலும் அவர்களின் நலன் நாடுபவனே உண்மையில் உறவைப் பேணுபவன் என்று கூறுகிறது
–நபிகளாரின் நற்போதனைகள்