உறங்குவதற்கு முன் ஓத வேண்டிய துஆக்கள்..

நீங்கள் படுக்கைக்குச் செல்லும் போது, ஆயத்துல் குர்ஸீயை ஓதுங்கள். உங்களுடன் ஒரு பாதுகாவலர் (வானவர்) இருந்து கொண்டேயிருப்பார். காலை நேரம் வரை ஷைத்தான் உங்களை நெருங்க மாட்டான்” என்று நபியவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 3275

மேலும் பகரா அத்தியாயத்தின் கடைசி இரு வசனங்களையும் ஓத வேண்டும்.

எவர் அல்பகரா எனும் (2வது) அத்தியாயத்தின் இறுதி இரு (286, 287) வசனங்களை இரவில் ஓதுகின்றாரோ அவருக்கு இந்த இரண்டுமே போதும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ மஸ்ஊத் (ரலி)

நூல்: புகாரி 5009

மேலும் படுக்கைக்குச் செல்லும் போது, திருக்குர்ஆனின் 112, 113, 114 அத்தியாயங்களையும் ஓதி,  நமது உடல் முழுவதும் தடவிக் கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் படுக்கைக்குச் சென்றால் ஒவ்வோர் இரவிலும் தமது உள்ளங் கைகளை இணைத்து அதில், “குல்ஹுவல்லாஹு அஹத், குல் அவூது பிரப்பில் ஃபலக், குல் அவூது பிரப்பின்னாஸ்” ஆகிய (112, 113, 114) அத்தியாயங்களை ஓதி ஊதுவார்கள். பிறகு தம் இரு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு) தமது உடலில் இயன்ற வரையில் தடவிக் கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து பிறகு முகம், பிறகு தம் உடலின் முற்பகுதியில் தடவுவார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 5017

இன்றைய பெண்கள் வீட்டு வேலைகளில் எந்த வேலையைச் செய்தாலும் இயந்திரங்கள் மூலமாகவே செய்கின்றார்கள். ஆனால் அதுவும் கூட அவர்களுக்குச் சிரமமாக உள்ளது. இதனால் சில பெண்கள் காலை முதல் மாலை வரை வீட்டு வேலைகளைச் செய்து விட்டு, இரவில் கணவரிடம் சென்று தங்கள் மனக் குறைகளைக் கொட்டுகின்றார்கள். இதனால் கணவனின் வெறுப்பைச் சம்பாதிக்கின்றார்கள்.

ஆனால் இவர்கள் இஸ்லாம் சொல்கின்ற அடிப்படையில் படுக்கைக்குச் செல்லும் முன் சொல்ல வேண்டிய திக்ருகளையும், தஸ்பீஹ்களையும் செய்து விட்டுப் படுத்தால் அவர்கள் என்ன தான் அன்று சிரமப்பட்டிருந்தாலும் அது அவர்களுக்கு ஒரு பொருட்டாகத் தெரியாது. அது மட்டுமின்றி இதன் மூலம் கணவனின் வெறுப்பையும் சம்பாதிக்காமல் இருக்கலாம்.

(என் மனைவி) ஃபாத்திமா திரிகை சுற்றுவதால் தமது கையில் ஏற்பட்ட காய்ப்பு குறித்து (தம் தந்தை) நபி (ஸல்) அவர்களிடம் முறையிடுவதற்காகச் சென்றார்கள்.

ஏனெனில், (போர்க் கைதிகளான) அடிமைகள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்திருப்பதாக அவருக்குச் செய்தி வந்தது. ஆனால் நபி (ஸல்) அவர்களைக் காணவில்லை. தாம் வந்த நோக்கத்தை ஆயிஷா (ரலி) அவர்களிடம் சொன்னார்கள்.

நபி (ஸல்) அவர்கள் வீட்டுக்கு வந்த போது, ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் விவரத்தைத் தெரிவிக்கவே நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நாங்கள் எங்கள் படுக்கைக்குச் சென்று விட்டோம்.

(நபியவர்களைப் பார்த்த) உடனே எழுந்திருக்க முயற்சித்தோம். அவர்கள், “நீங்கள் இருக்கும் உங்கள் இடத்திலேயே அமருங்கள்” என்று சொல்லி விட்டு, அவர்களே வந்து எனக்கும் ஃபாத்திமாவுக்கும் இடையே அமர்ந்தார்கள். அவர்களின் பாதங்கள் என் வயிற்றில் பட்டு அதன் குளிர்ச்சியை உணரும் அளவுக்கு நெருக்கமாக அமர்ந்தார்கள். அப்போது அவர்கள், “நீங்கள் இருவரும் கேட்டதை விடச் சிறந்ததை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? நீங்கள் இருவரும் உங்கள் படுக்கைக்குச் செல்லும் போது, 33 முறை சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) என்றும், 33 முறை அல்ஹம்துலில்லாஹ் (அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்) என்றும், 33 முறை அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்றும் சொல்லுங்கள். அது உங்களுக்குப் பணியாள் ஒருவர் இருப்பதை விடச் சிறந்ததாகும்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல்: புகாரி 5361

பிறகு பின்வரும் துஆக்களில் ஒன்றை ஓத வேண்டும்.

பி(இ)ஸ்மி(க்)க ரப்பீ(இ), வளஃது ஜன்பீ(இ) வபி(இ)(க்)க அர்ப(எ)வுஹு, இன் அம்ஸக்(த்)த நப்(எ)ஸீ ப(எ)ர்ஹம்ஹா வஇன் அர்ஸல்(த்)தஹா ப(எ)ஹ்ப(எ)ள்ஹா பி(இ)மா தஹ்ப(எ)ளு பி(இ)ஹி இபா(இ)த(க்)கஸ் ஸாலிஹீன்.

பொருள்:

என் அதிபதியே! உன் பெயரால் நான் விலாவை (தரையில்) வைத்தேன். உன் உதவியாலேயே (மீண்டும்) எழுவேன். என் உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால் அதற்கு நீ மன்னிப்பளிப்பாயாக! அதை நீ (கைப்பற்றாமல்) விட்டு விட்டால் உன் நல்லடியார்களை நீ எதன் மூலம் பாதுகாப்பாயோ அதன் மூலம் என் உயிரையும் காத்திடுவாயாக!

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 7393

அல்லாஹும்ம பி(இ)ஸ்மி(க்)க அமூத்து வஅஹ்யா

பொருள்:

இறைவா! உன் பெயரால் மரணிக்கின்றேன். உன் பெயரால் உயிர் பெறுகின்றேன்.

நூல்: புகாரி 6325

இவைகள் அனைத்தையும் ஓதி முடித்த பின் வலப்புறமாக ஒருக் களித்துப் படுத்து, பின்வரும் துஆவை ஓதி அந்த வார்த்தையையே அன்றைய தினத்தின் இறுதி வார்த்தைகளாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

“நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும் போது தொழுகைக்கு உளூச் செய்வது போல் உளூச் செய்து கொள். பின்னர் உனது வலது கைப் பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள். பின்னர்,

அல்லாஹும்ம அஸ்லம்(த்)து வஜ்ஹீ இலை(க்)க, வப(எ)வ்வள்(த்)து அம்ரீ இலை(க்)க, வஅல்ஜஃ(த்)து ளஹ்ரீ இலை(க்)க, ரஃக்ப(இ)(த்)தன் வரஹ்ப(இ)(த்)தன் இலை(க்)க லா மல்ஜஅ வலா மன்ஜஅ மின்(க்)க இல்லா இலை(க்)க அல்லாஹும்ம ஆமன்(த்)து பிகிதாபி(இ)(க்)கல்லதீ அன்ஸல்(த்)த வபி(இ)நபி(இ)ய்யி(க்) கல்லதீ அர்ஸல்(த்)த

பொருள்:

யா அல்லாஹ்! நான் எனது முகத்தை உன்னிடத்தில் ஒப்படைத்தேன். என்னுடைய காரியங்களை உன்னிடத்தில் ஆதரவு வைத்தவனாகவும், உன்னைப் பயந்தவனாகவும் இதைச் செய்கின்றேன். உன்னை விட்டுத் தப்பிச் செல்லவும் உன்னை விட்டு ஒதுங்கி விடவும் உன் பக்கமே தவிர வேறிடம் இல்லை. யா அல்லாஹ்! நீ இறக்கிய உனது வேதத்தை நான் நம்பினேன். நீ அனுப்பிய உனது நபியையும் நான் நம்பினேன்.

என்ற பிரார்த்தனையை நீ செய்து கொள்.

(இவ்வாறு நீ சொல்லிவிட்டு உறங்கினால்) அந்த இரவில் நீ இறந்து விட்டால் நீ தூய்மையான வனாய் ஆகி விடுகின்றாய். இந்தப் பிரார்த்தனையை உனது (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக் கொள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடத்தில் கூறினார்கள்.

அறிவிப்பவர்: பராஃ இப்னு ஆஸிப் (ரலி)

நூல்: புகாரி 247

இவ்வாறு உன்னதமான உறங்கும் முறையை இஸ்லாம் போதிக்கின்றது. எனவே இதன் அடிப்படையில் நாமும் செயல்பட்டு, நம் சந்ததிகளையும், நம்மைச் சுற்றி உள்ளவர்களையும் செயல்படச் செய்து, நபிவழியைப் பின்பற்றியவர்களாக அல்லாஹ் என்றென்றும் நம்மை ஆக்கி வைப்பானாக!

ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *