அவூதுபில்லாஹி மினஸ் ஷைத்தான் நிர்ரஜீம்
உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கியருளப்பட்ட இவ்வேதம் உண்மையானதுதான் என்று அறிபவனும், இந்த உண்மையை அறியாமல் குருடனாக இருப்பவனும் சமம் ஆவார்களா? அறிவுடையவர்களே நல்லுபதேசங்களை ஏற்றுக் கொள்பவராய் இருக்கின்றனர்.
அவர்கள் எப்படிபட்டவர்கள் என்றால், அல்லாஹ்வுடன் செய்து கொண்ட உடன்படிக்கைகளை நிறை வேற்றுவார்கள். உறுதிப்படுத்திய பிறகு அவ்வுடன்படிக்கைகளை முறிக்க மாட்டார்கள்.
மேலும், எந்த உறவுமுறைகளை சேர்த்து வாழும்படி அல்லாஹ் கட்டளை இடுகின்றானோ அந்த உறவுமுறைகளைப் இணைத்து கொள்வார்கள். தம் இறைவனுக்கு அஞ்சுவார்கள். மேலும், (மறுமை நாளில்) கடுமையான முறையில் தம்மிடம் கணக்குக் கேட்கப்படுமோ என அச்சம் கொண்டவராக இருப்பார்கள்.
மேலும், அவர்கள் தமது இறைவனின் திருப்தியை நாடி பொறுமையை மேற்கொள்வார்கள். தொழுகையை நிலைநாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல்வழியில்) செலவிடுவார்கள். நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்துக் கொள்வார்கள். அவர்களுக்கே மறுமையில் நல்ல இருப்பிடம் உண்டு.
அதாவது, அவர்களும், அவர்களின் பெற்றோர், மனைவியர் மற்றும் சந்ததிகளில் நல்லோரும் நிலையான சொர்க்கச் சோலைகளில் நுழைவார்கள். வானவர்கள் ஒவ்வொரு வாசல் வழியாகவும் அவர்களிடம் வருவார்கள்.
(உலகில்) நீங்கள் பொறுமையாக இருந்ததால் உங்களுக்கு ஸலாம் உண்டாகட்டும். இவ்வுலகின் தீர்ப்பு (உங்களுக்கு) நல்லதாக உள்ளது (என்று கூறுவார்கள்).
ஆனால், அல்லாஹ்வின் உடன்படிக்கைகளை உறுதிப்படுத்திய பின்னர் அவற்றை முறித்து விடுகின்றவர்களும், மேலும் எந்த உறவுமுறைகளுடன் இணைந்து வாழ வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டிருக்கின்றானோ அந்த உறவுமுறைகளைத் துண்டித்து விடுகின்றவர்களும், மேலும் உலகில் குழப்பம் செய்கின்றவர்களும் சாபத்திற்கு உரியவர்களாவர். அவர்களுக்கு மறுமையில் கொடிய தங்குமிடமே கிடைக்கும்!
—————————————
📚அல்குர்ஆன்: 13:19-25