சொல்வதெல்லாம் உண்மை
மார்க்கம் கூறும் நற்பண்புகளுள் முக்கிய ஒன்று உண்மை பேசுவதாகும். அத்திப் பூத்தாற்போல அரிதாக அல்லாமல், அதனை வாழ்வில் வழமையாக்கிக் கொள்ளும்போது அல்லாஹ்விடம் நற்சான்றும் பாராட்டும் கிடைக்கும்.
உண்மை, நன்மைக்கு வழிகாட்டும். நன்மை சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒரு மனிதர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் ‘வாய்மையாளர்’ (ஸித்தீக்) எனப் பதிவு செய்யப்படுவார்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)
நூல்: முஸ்லிம் (5081)
உதவிக்கரம் நீட்டுவோம்!
சமூக சேவையைப் போற்றும் சத்திய கொள்கையில் இருக்கிறோம். நமது ஒட்டுமொத்த ஆயுளில், வெறும் ஓரிரு தருணங்களில் மட்டும் பிறருக்கு உதவிவிட்டு முடங்கி விடக்கூடாது. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சகமனிதர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்யும்போது இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் உதவி கிடைக்கும்.
யார் இம்மையில் ஓர் இறைநம்பிக்கையாளரின் துன்பங்களில் ஒன்றை அகற்றுகிறாரோ அவருடைய மறுமைத் துன்பங்களில் ஒன்றை அல்லாஹ் அகற்றுகிறான். யார் சிரமப்படுவோருக்கு உதவி செய்கிறாரோ அவருக்கு அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் உதவி செய்கிறான். யார் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறாரோ அவருடைய குறைகளை அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் மறைக்கிறான். அடியான் தன் சகோதரன் ஒருவனுக்கு உதவி செய்துகொண்டிருக்கும் வரை அந்த அடியானுக்கு அல்லாஹ் உதவி செய்துகொண்டிருக்கிறான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 5231