உணவுகளில் ஹலால் ஹராமை எப்படி பிரித்தறிவது?
? கீறிக் கிழிக்கும் விலங்குகளை உண்பது ஹராம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஹலாலான விலங்கையும் ஹராமான விலங்கையும் கண்டறிவது எப்படி? சுறா, திமிங்கிலம் போன்றவை ஹலாலா? டால்பின் பன்றி இனத்தைச் சேர்ந்தது. எனவே அது ஹலாலா? கடலில் உள்ள அனைத்தும் ஹலால் என்றால் பாம்பு, முதலை, ஆமை போன்றவை எப்படி? விளக்கவும்.

பதில்

விலங்கினங்களைப் பொறுத்த வரை பன்றி பற்றி குர்ஆனில் (2:173, 5:3, 6:145, 16:115)கூறப்பட்டுள்ளது. வீட்டுக் கழுதை ஹராம் என்று புகாரி 4217, 4215, 4199, 3155, 4218, 4227, 5115, 5522, 5527, 5528 ஆகிய ஹதீஸ்கள் கூறுகின்றன. புகாரி 4215வது ஹதீஸில் வீட்டுக் கழுதை ஹராம் எனவும் குதிரை ஹலால் எனவும் கூறப்பட்டுள்ளது.

இவை தவிர மற்ற விலங்கினங்களைப் பற்றி எவ்வாறு முடிவு செய்வது என்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொதுவான அளவுகோலை நம் முன்னே வைத்துள்ளனர்.

விலங்கினங்களில் எவற்றுக்குக் கோரைப் பற்கள் உள்ளனவோ அவற்றை உண்ணக் கூடாது என்று நபிகள் நாயகம்(ஸல்) தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஸலமா (ரலி),

நூல்: புகாரி 5781, 5530.

மேற்பகுதியில் உள்ள பல் வரிசையின் முன் பற்களில் நான்கு பற்களுக்குப் பின் உள்ள பல் கோரைப் பல் எனப்படும்.

கோரைப் பல் என்பது மற்ற பற்களை விட நீளமாக இருக்கும். மனிதனுக்குக் கூட மற்ற விலங்கினம் அளவு இல்லா விட்டாலும் கோரைப் பல் இருக்கிறது. மேல் பகுதியில் அமைந்துள்ள பற்களில் வலப்பக்கம் ஒரு பல்லும் இடப்பக்கம் ஒரு பல்லும் மற்றபற்களை விட நீளம் அதிகமாக இருக்கும்.

இப்படி கோரைப் பல் எவற்றுக்கு உள்ளதோ அதை நாம் உண்ணக் கூடாது. ஆடு, மாடு போன்றவற்றின் பற்கள் அனைத்தும் சமமான உயரம் கொண்டதாக அமைந்திருக்கும். பூனை,நாய், சிங்கம், புலி போன்ற விலங்குகளுக்கு இரண்டு பற்கள் மட்டும் மற்ற பற்களை விட மிகவும் நீளமாக இருக்கும்.

இந்த அளவுகோலை விளங்கிக் கொண்டால் எவற்றை உண்ணலாம் என்பது எளிதில் விளங்கி விடும். கழுதையைப் பொறுத்தவரை அதன் பற்கள் வரிசையாக இருந்தாலும் இந்த அளவு கோலில் அவை அடங்காவிட்டாலும் அதைக் குறிப்பிட்டு ஹராமாக்கி விட்டதால் கழுதைக்கு இந்த அளவு கோலைப் பொருத்தக் கூடாது.

பல துறைகளிலும் விற்பன்னராக இருந்த அபூஅலீ இப்னு ஸீனா அவர்கள் விலங்கினங்களை ஆய்வு செய்து ஒரு தகவலைத் தருகிறார். கொம்பு உள்ள எந்த உயிரினத்துக்கும் கோரைப் பல் இருக்காது என்பது அவரது ஆய்வு.

எனவே எந்த விலங்குக்காவது கொம்பு இருந்தால் அதை நாம் உண்ணலாம். எவற்றுக்கு கொம்பு இல்லையோ அவற்றுக்கு மட்டும் கோரைப் பல் உள்ளதா என்று ஆய்வு செய்த பின் உண்ணலாம்.

கடல் வாழ் உயிரினங்களில் விலக்கப்பட்ட ஒன்று கூட இல்லை. கடல் வாழ் உயிரினங்கள் அனைத்துமே ஹலால் தான். கடல்வாழ் உயிரினங்களில் கோரைப் பற்கள் உள்ளதா என்று பார்க்குமாறு நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை, மத்ஹபுகளில் சுறா, திமிங்கலம் ஆகியவற்றை உண்ணக் கூடாது என்று எழுதி வைத்துள்ளனர். இவ்வாறு கூறுவதற்கு குர்ஆனிலும் ஹதீஸிலும் எந்த ஆதாரமும் இல்லை.

கடலில் வேட்டையாடுவதும் அதன் உணவும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

(அல்குர்ஆன் 5:96)

புத்தம் புதிய மாமிசத்தை நீங்கள் புசிப்பதற்காக அவன் தான் கடலை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான்.

(அல்குர்ஆன் 16:14)

கடல் வாழ் உயிரினங்களில் ஏதேனும் உண்ணத் தடை செய்யப்பட்டது இருந்திருந்தால் அதை அல்லாஹ்வும் அவனது தூதரும் தான் கூறவேண்டும். வேறு எவருக்கும் ஹராமாக்கும் அதிகாரம் கிடையாது.

அல்லாஹ்வும் அவனது தூதரும் கடல்வாழ் உயிரினங்களில் எந்த ஒன்றையும் ஹராம் என அறிவிக்கவில்லை.

உங்களை நீங்கள் அழித்துக் கொள்ளாதீர்கள்

(அல்குர்ஆன் 2:195)

உங்களை நீங்கள் சாகடித்துக் கொள்ளாதீர்கள்

(அல்குர்ஆன்4:29)

இந்த வசனங்களின் அடிப்படையில் மனிதனுக்குக் கேடு விளைவிக்கும் என்பது நிரூபணமானால் அவற்றை உண்ணக் கூடாது. இது உயிரினங்களுக்கு மட்டுமின்றி தாவரத்துக்கும் தானியத்துக்கும் ஏனைய உணவு வகைகளுக்கும் பொதுவானதாகும்.

ஒரு தாவரத்தைச் சாப்பிடுவது கேடு விளைவிக்கும் என்றால் அதை உண்பது ஹராம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

பாம்பு, பல்லி, கடல் வாழ் விஷ ஜந்துக்கள் ஆகியவை இந்த அளவு கோலுக்குள் அடங்கும்.

டால்பின் என்பது பன்றி வகையைச் சேர்ந்தது அல்ல. அதுவும் மீன் வகையைச் சேர்ந்தது தான். குர்ஆனில் தடை செய்யப்பட்டுள்ளது பன்றி என்ற விலங்கின் இறைச்சி தானே தவிர பார்ப்பதற்கு பன்றியின் தோற்றத்தில் உள்ளது எல்லாம் ஹராம் என்று கூறப்படவில்லை.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *