இஹ்ராமில் கட் ஷூ அணிந்துக் கொள்ளலாமா?
ஒருவரிடம் செருப்புகள் இல்லையென்றால், அவர் காலுறைகளை (அவற்றின் மேலிருந்து) கணுக்காலுக்குக் கீழுள்ள பகுதிவரை கத்தரித்துக் கொள்ளட்டும்!’ என்ற நபிமொழியின்படி, கட் ஷூ அணிந்து கொள்ளலாமா? குளிர் அதிகமாக உள்ள பகுதிகளில் செருப்புக்குப் பதிலாக அதையே இஹ்ராமிலும் அணிந்துக் கொள்ளலாமா?
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: “ஒருவரிடம் செருப்புகள் இல்லையென்றால், அவர் காலுறைகளை (அவற்றின் மேலிருந்து) கணுக்காலுக்குக் கீழுள்ள பகுதிவரை கத்தரித்துக் கொள்ளட்டும்!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி 1838
நபி (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் காலுறைகளை வெட்டி அணிந்து கொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார்கள். ஆனால் பின்வரும் ஹதீஸில் வெட்ட வேண்டும் என்று கூறவில்லை.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் அரஃபாவில் உரை நிகழ்த்தும்போது, “யாருக்கு செருப்பு கிடைக்கவில்லையோ அவர் காலுறைகளை அணியட்டும்; யாருக்கு வேட்டி கிடைக்கவில்லையோ அவர் கால் சட்டைகளை அணியட்டும்! யாருக்கு செருப்பு கிடைக்கவில்லையோ அவர் காலுறைகளை அணியட்டும்!” என்று இஹ்ராம் கட்டியவர்களுக்குக் கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.
நூல்: புகாரி 1841
இது நபி (ஸல்) அவர்கள் அரஃபா தினத்தில் கூறியதாகும். எனவே, ஆரம்ப நிலையில் காலுறைகளை வெட்டி அணிய வேண்டும் என்று கூறியிருந்தாலும், இறுதியாக அந்த நிபந்தனையைக் கூறாமல் காலுறை அணிந்து கொள்ளட்டும் என்று பொதுவாகக் கூறுவதால் இந்த அனுமதியைத் தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என தற்கால மார்க்க அறிஞர்கள் கூறுகின்றனர். இதன் அடிப்படையில் ஷூ அணிவதில் தவறில்லை.