இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமா ?

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் அன்று. மாறாக, இஸ்லாத்தின் பகுத்தறிப்பூர்வமான கடவுள் கொள்கை, மனிதர்கள் அனைவரும் சமம், மதகுரு என்ற ஒன்று இல்லாமை என மாற்றுமத மக்களும் ஒப்புக் கொள்ளும் பல்வேறு சிறப்பம்சங்களின் காரணமாகவே இஸ்லாம் அபார வளர்ச்சியடைந்தது, இன்றைக்கும் வளர்ச்சி அடைகிறது . நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் இஸ்லாம் தாறுமாறாக பரவியதற்கு மிக முக்கிய காரணம், அவர்களிடத்தில் இருந்த நளினமும், அடக்கமும், மன்னிப்புமேயன்றி வோறொன்றுமின்லை.

சுமாமாவை ஈர்த்த இஸ்லாம்

நபி (ஸல்) அவர்கள் நஜ்த் பகுதியை நோக்கி குதிரைப் படையொன்றை அனுப்பினார்கள். அந்தப் படையினர் பனூ ஹனீஃபா குலத்தைச் சேர்ந்த சுமாமா பின் உஸால் என்றழைக்கப்படும் மனிதர் ஒருவரைக் (கைது செய்து) கொண்டு வந்தார்கள். பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அவரைக் கட்டிப் போட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள், அவரிடம் வந்து, “நீ என்ன கருதுகின்றாய்? சுமாமாவே!” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “நான் நல்லதையே கருதுகின்றேன். முஹம்மதே! நீங்கள் என்னைக் கொன்றால் இரத்தப் பழி வாங்க வேண்டிய ஒருவனையே கொன்றீர்கள். (என்னை மன்னித்து) நீங்கள் உபகாரம் செய்தால் நன்றி செய்யக் கூடிய ஒருவனுக்கே உபகாரம் செய்கின்றீர்கள். நீங்கள் செல்வத்தை விரும்பினால் அதில் நீங்கள் விரும்புவதைக் கேளுங்கள்” என்று பதிலளித்தார். எனவே அவர் விடப்பட்டார். மறுநாள் வந்த போது, அவரிடம், “சுமாமாவே! நீ என்ன கருதுகின்றாய்?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், “நான் ஏற்கனவே தங்களிடம் சொன்னதைத் தான் கருதுகின்றேன்” என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், இஸ்லாத்தில் நிர்ப்பந்தம் இல்லைவிழ்த்து விடுங்கள்” என்று கூறினார்கள்.

உடனே சுமாமா, பள்ளிவாசலுக்கு அருகிலிருந்த பேரீச்சந் தோட்டத்திற்குச் சென்று குளித்து விட்டுப் பள்ளிவாசலுக்கு வந்து, “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு எவருமில்லை என்று நான் உறுதி கூறுகின்றேன். மேலும், முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் உறுதி கூறுகின்றேன்” என்று மொழிந்தார்.

பிறகு, “முஹம்மதே! அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் முகத்தை விட என்னிடம் வெறுப்புக்குரிய முகம் பூமியில் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால் (இன்று) உங்களுடைய முகம் எல்லா முகங்களை விடவும் பிரியமானதாக ஆகி விட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் மார்க்கத்தை விட என் வெறுப்புக்குரிய மார்க்கம் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால் இன்று மார்க்கங்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானதாக உங்கள் மார்க்கம் ஆகி விட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் ஊரை விட எனக்கு வெறுப்பான ஊர் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால் இப்போது உங்கள் ஊரே எனக்கு மிகவும் பிரியமான ஊராகி விட்டது. உங்கள் குதிரைப் படையினர் என்னைப் பிடித்துக் கொண்டு விட்டனர்” என்று கூறிவிட்டு, “நான் இப்போது (மக்காவிற்குச் சென்று) உம்ராச் செய்ய விரும்புகின்றேன். நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?” என்று கேட்டார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு நற்செய்தி கூறி உம்ராச் செய்ய அனுமதி அளித்தார்கள். அவர் மக்காவிற்குச் சென்ற போது, ஒருவர் அவரிடம், “நீ மதம் மாறி விட்டாயா?” என்று கேட்டார். அதற்கு சுமாமா (ரலி), “அல்லாஹ்வின் மீதாணையாக! இல்லை. மாறாக, அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுடன் இணைந்து இறைவனுக்குக் கீழ்ப்படியும் முஸ்லிமாக மாறி விட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் அனுமதி தரும் வரை (எனது நாடான) யமாமாவிலிருந்து ஒரு கோதுமை தானியம் கூட (மக்காவாசிகளான) உங்களுக்கு வராது” என்று சொன்னார்.

அறிவிப்பவர்  : அபூஹுரைரா (ரலி),

நூல் : புகாரி 4372

சுமாமா என்பவர் போர்க் கைதியாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்படுகின்றார். தனியாளாக வந்து இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் மாட்டிக் கொள்கின்றார். இந்த நேரத்தில் நபிகள் நாயகம் நினைத்திருந்தால், அவரை இஸ்லாத்தில் இணையுமாறு கட்டாயப் படுத்தியிருக்கலாம். ஆனால் அப்படி எதையும் செய்யவில்லை. அவரை மன்னித்து விடுகின்றார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த மன்னிக்கும் மனப்பான்மையால் ஈர்க்கப்பட்ட அந்த மனிதர் இஸ்லாத்தைத் தழுவுகின்றார். அதுவரை உலகத்திலேயே அதிக வெறுப்புக்கு உரியவராக நபி (ஸல்) அவர்களைத் தான் சுமாமா கருதியிருந்தார். ஆனால் இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, உலகத்திலேயே மிகவும் விருப்பத்திற்கு உரியவராக மாறி விட்டார்கள் என்ற செய்தியையும் சுமாமா அவர்களே தெரிவிக்கின்றார்கள்.

இங்கே நாம் கவனிக்கவேண்டியது, சுமாமாவை இஸ்லாத்தின் பால் ஈர்த்தது எது? மாநபியன்  மன்னிக்கும் குணமல்லவா?

மன்னிப்பை தேர்தெடுத்த நபி

நபி (ஸல்) அவர்கள் ஒரு போரை முடித்து விட்டுத் தம் தோழர்களுடன் வந்து கொண்டிருந்தார்கள். இளைப்பாறுவதற்காக ஒவ்வொருவரும் ஒரு மரத்தடியில் தங்கலானார்கள். நபி (ஸல்) அவர்கள் தனியாகச் சென்று ஒரு மரத்திற்கு அடியில் இளைப்பாறினார்கள்.

திடீரென்று ஒருவர் நபி (ஸல்) அவர்களைக் கொலை செய்வதற்காகத் தன் கையில் வாளை எடுத்துக் கொண்டு, “முஹம்மதே! இப்போது உன்னை யார் காப்பாற்றுவார்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் காப்பாற்றுவான்” என்று கூறினார்கள்.

பின்பு அவர் கையில் இருந்த வாள் கீழே விழுந்தவுடன் நபியவர்கள் அந்த வாளை எடுத்துக் கொண்டு, “இப்போது உன்னை யார் காப்பாற்றுவார்? வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறேதுவும் கடவுள் இல்லை என்பதை ஒத்துக் கொள்கிறாயா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.

அதற்கு அவர், “இல்லை! இதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஆனால் இனிமேல் உங்களுக்கு எதிராக நான் போரிட மாட்டேன் என்று உறுதிமொழி அளிக்கிறேன்” என்றார். நபி (ஸல்) அவர்கள் அவரைத் தண்டிக்காமல் விட்டு விட்டார்கள். அந்த மனிதர் தன்னுடைய தோழர்களிடத்தில் சென்று, “மக்களிலேயே மிகவும் சிறந்த ஒருவரிடமிருந்து நான் வந்திருக்கிறேன்” என்று கூறினார்.

அறிவிப்பவர்  : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி),

நூல் : அஹமத் 14401

கொலை செய்ய வந்தவரைத் தண்டிக்காமல் நபி (ஸல்) அவர்கள் மன்னித்து விட்டது அவர்களின் பரந்த மனப்பான்மையையும் அவர்கள் எதிரிகளிடத்தில் காட்டிய மனித நேயத்தையும் காட்டுகிறது.

அவர்கள் நினைத்திருந்தால் ஒரு சப்தமிட்டு அனைத்துத் தோழர் களையும் வரவழைத்து, அவரை ஒரு கை பார்த்திருக்கலாம். ஆனால் நபியவர்கள் அப்படிச் செய்யவில்லை. இஸ்லாத்தை அவர் ஏற்க மறுத்த போதிலும் அவரைத் தண்டிக்கவில்லை. இது போன்ற காரணங்களால் தான் நபியின் காலத்தில் இஸ்லாம் பிறரை ஈர்த்தது.

மாறுவோம்! மாற்றுவோம்!

எனவே, மாற்றுமத மக்களுடன் பழகும் போது, கண்ணியத்தையும், மன்னிப்பையும், இஸ்லாத்தை பற்றிய நல்லெண்ணம் உருவாகும் வகையிலும் நாம் நம்முடைய செயல்பாடுகளை அமைத்துக்கொள்ளவேண்டும். இதன் மூலம் அவர்களின் உள்ளத்தை நாம் வென்றெடுக்க முடியும். இதற்கு அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்புரிவானாக!

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed