தவறுகளுக்காக பாவமன்னிப்பு தேடுவோம்!

ஸலாத்தும், ஸலாமும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மீதும், உத்தம சஹாபாக்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும், குறிப்பாக நம் அனைவர் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக!

ஒவ்வொரு நாளும் பாவத்திலேயே மூழ்கிய இருக்கும் நாம் மறுமையில் இதன் காரணத்தால் நாசமைந்து விடுவோம் என்ற அச்சம் இன்றி வாழ்ந்து வருகிறோம். ஆனால்,  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உள்ளத்தில் கவனக்குறைவு ஏற்பட்டது என்பதற்காக இறைவனிடத்தில் பாவமன்னிப்பு தேடினார்கள். அதற்காக வருத்தப்பட்டார்கள். ஏன்? இவ்வுலகம் தான் மன்னிப்பு கேட்பதற்குரிய இடம். மறுமை கூலி தரப்படுகிற இடம்!

கவனக் குறைவிற்காக நபியவர்கள்…..

“எனது உள்ளத்தில் கவனக்குறைவு ஏற்படுகின்றது. நிச்சயமாக நான் அல்லாஹ்விடம் ஒரு நாளில் நூறு தடவை பாவமன்னிப்பு தேடுகின்றேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்   : அல்அகர் பின் யஸார் (ரலி),

நூல் : முஸ்லிம் 4870

“மக்களே! அல்லஹ்விடம் பாவமன்னிப்பு தேடுங்கள். நான் அவனிடம் ஒரு நாளில் நூறு தடவை பாவமன்னிப்பு தேடுகின்றேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அல்அகர் பின் யஸார் (ரலி),

நூல் : முஸ்லிம் 4871

எப்போதும் இறைச் சிந்தனையில் இருக்கும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உள்ளம் கொஞ்சம் அந்தச் சிந்தனையை விட்டு விலகினால் கூட அதற்காக பாவமன்னிப்பு தேடுகின்றார்கள். ஆனால் நாம் சிறு சிறு பாவங்களால் முற்றுகையிடப்பட்டுள்ளோம். அன்றாடம் ஆயிரக்கணக்கான பாவங்களைச் செய்து விட்டு கல்லாக உட்கார்ந்திருக்கின்றோம். அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுவது கிடையாது. ஒரு மாதிரியான மிதப்பில் இருக்கின்றோம். இது போன்ற பாவங்களை விட்டு விலகுவதுடன் அன்றாடம் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடி அதற்குரிய பலன்களை அடைய வேண்டும்.

ஸஹர் நேரத்தில்…

அவர்கள் இரவின் கடைசி நேரங்களில் பாவமன்னிப்புத் தேடுவார்கள்.

(அல்குர்ஆன் 51:18)

(அவர்கள்) பொறுமையாளர்களாகவும், உண்மை பேசுவோராகவும், (இறைவனுக்கு) கட்டுப்பட்டோராகவும், (நல் வழியில்) செலவிடுவோராகவும், இரவின் கடைசி நேரத்தில் பாவ மன்னிப்புத் தேடுவோராகவும் (இருப்பார்கள்.)

(அல்குர்ஆன் 3:17)

இந்த வசனங்களில் இறை நம்பிக்கையாளர்களின் பண்புகளைப் பற்றி சொல்லும் போது, ஸஹர் நேரத்தில் அவர்கள் பாவமன்னிப்பு தேடுவார்கள் என்று வல்ல அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இந்த வசனங்களுக்கு விளக்கமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இரவின் பிற்பகுதியில் பாவமன்னிப்பு தேடுவதை வலியுறுத்தியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“நமது இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது, “என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கின்றேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கின்றேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்பு கோரினால் அவரை நான் மன்னிக்கின்றேன்” என்று கூறுவான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : புகாரி 1145

சுவனத்தைப் பெற்றுத் தரும் ஸய்யிதுல் இஸ்திஃக்ஃபார்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

“அல்லாஹும்ம அன்த்த ரப்பீ. லா இலாஹ இல்லா அன்த்த. கலக்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க. வ வஃதிக்க மஸ்ததஃத்து. அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஃத்து. அபூஉ லக்க பி நிஃமத்திக்க அலைய்ய வ அபூஉ லக்க பி தன்பீ. ஃபஃக்ஃபிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக்ஃபிருத் துனூப இல்லா அன்த்த.”

(பொருள் : அல்லாஹ்வே! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமையாவேன். நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதிமொழியையும், வாக்குறுதியையும் என்னால் இயன்ற வரை நிறைவேற்றியுள்ளேன். நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்பு கோருகின்றேன். நீ (எனக்கு) அருட்கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக் கொள்கின்றேன். நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் ஒப்புக் கொள்கின்றேன். ஆகவே. என்னை நீ மன்னிப்பாயாக. ஏனெனில் பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை.)

என்று ஒருவர் கூறுவதே தலை சிறந்த பாவமன்னிப்பு கோரல் (ஸய்யிதுல் இஸ்திஃக்ஃபார்) ஆகும். யார் இந்தப் பிரார்த்தனையை நம்பிக்கையோடும், தூய்மையான எண்ணத்தோடும் பகலில் கூறிவிட்டு அதே நாளில் மாலை நேரத்திற்கு முன்பாக இறந்து விடுகின்றாரோ அவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார். யார் இதை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் இரவில் கூறிவிட்டு, காலை நேரத்திற்கு முன்பே இறந்து விடுகின்றாரோ அவரும் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்.

அறிவிப்பவர் : ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி), 

நூல் : புகாரி (6306)

இப்படி ஒவ்வவொரு நேரமும் நாம் செய்த பாவங்களுக்காக இறைவனிடம் மன்னிப்பு கேட்டு, இறைவனின் மன்னிப்பைப் பெற்று, சுவனத்திற்கு செல்லக்கூடிய நன்மக்களாக, அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக!

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed