இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்
இஸ்லாம் மிகவும் எளிமையான மார்க்கமாகும். அகில உலக அருள் பாலிப்பவன், படைப்பினங்களின் இரட்சகன் அல்லாஹ்வால் அருளப்பட்ட மார்க்கமாகும்
அது அல்குர்ஆனையும் அதன் விளக்கவுரையாக அமைந்த அல்லாஹ்வின் திருத்தூதர் நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவற்றையும் நெறிமுறையாகக் கொண்டு செயல்படுத்தும் மார்க்கமாகும்
“நான் கடவுளை வழிபாடு செய்கிறேன்; ஆராதனை செய்கிறேன்” என்று ஒரு மனிதன் தன் விருப்பப்படி எதையும் செய்திட முடியாது. அதைப் போன்றே மார்க்கம் சொல்லும் காரியத்தையே ஒரு மனிதன் தன்னை வருத்திக் கொண்டோ தனக்கோ அல்லது பிறருக்கோ இடர் தரும் என்பதைத் தெரிந்து கொண்டே செய்தால் அதையும் தீமையான செயலாகவே கருதுகிறது. காரணம் இஸ்லாம் சிரமத்தைப் போதிக்கவில்லை. மாறாகக் கண்டிக்கிறது.
(முஹம்மதே!) நீர் சிரமப்படுவதற்காக உமக்கு இக்குர்ஆனை நாம் அருளவில்லை. (நம்மை) அஞ்சுபவருக்கு அறிவுரையாகவே (அருளினோம்)
(அல்குர்ஆன் 20:1,2)
அல்லாஹ் உங்களுக்கு எளிதானதையே நாடுகிறான். சிரமமானதை உங்களுக்கு நாட மாட்டான்.
(அல்குர்ஆன் 2:185)
உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கமான இம்மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை.
(அல்குர்ஆன் 22:78)
நன்மை தானே! எப்படிச் செய்தாலென்ன? என்று ஒரு காரியத்தைத் தன் இஷ்டத்திற்கு யார் செய்தாலும் அதுவும் தவறேயாகும். காரணம் இப்படித் தான் செய்ய வேண்டும் என்று ஒரு எல்லையை வகுத்திருக்கும் போது அந்த எல்லையை மீறுவதும் தவறு தானே! இதைத் தான் சில முஸ்லிம்கள் புரிந்து கொள்வதில்லை.
இரவுத்தொழுகை 8 ரகஅத்திற்கு பதிலாக 20 ரகஅத்களை தொழுபவர்கள் இது பெரும் பாவம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
இஸ்லாத்தின் விளக்கங்களைப் புரிந்து கொண்டதாகக் காட்டிக் கொள்கின்ற முல்லாக்களும் புரிவதில்லை. முன்னோர்கள் என்ன ஒன்றும் தெரியாதவர்களா? என்று கூறி அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாற்றமான காரியங்களைச் செய்வதற்கு வழி வகுத்து விடுகிறார்கள்.
மேலும் நன்மையில் நடுநிலையைக் கடைப்பிடிக்கச் சொல்கிறது. அவ்வாறு நடுநிலையைப் பேணி நிதானத்தைக் கடைப்பிடிக்கும் போது தான் அல்லாஹ்வுடைய பேரருள் கிட்டி சொர்க்கத்தையும் அடைய முடியும். அதற்கு மாற்றமாகச் செயல்படும் போது துன்பமே வந்து தொல்லை தரும் என்கிறது இஸ்லாம்.
“நிச்சயமாக இந்த மார்க்கம் எளிதானது. இம்மார்க்கத்தை எவரும் (தம் மீது) சிரமமானதாக ஆக்கிக் கொண்டால் அவரை அது மிகைத்து விடும். எனவே நடுநிலைமையையே மேற்கொள்ளுங்கள். இயன்றவற்றைச் செய்யுங்கள். நற்செய்தியையே சொல்லுங்கள். காலையிலும், மாலையிலும், இரவிலும் சிறிது நேரம் (அல்லாஹ்விடத்தில்) உதவி தேடுங்கள்” என நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி 39
“உங்களில் யாரையும் அவரின் அமல்கள் ஈடேற்றம் அடையச் செய்யாது” என நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அப்பொழுது தோழர்கள், “நீங்களுமா?” என்றார்கள். அதற்கு, “நானும் அடைய முடியாது. என்றாலும் அல்லாஹ் என்னைத் தன்னுடைய அருளைக் கொண்டு போர்த்தினாலே தவிர! எனவே நேர்மையாக, நிதானமாக நடந்திடுங்கள்” என்றார்கள். (புகாரி)
நம்முடைய எல்லா நல்ல காரியங்களிலும் நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரத்தின் அடிப்படையில் நாம் செயல்படும் போது நிச்சயமாக அது சிரமமில்லாத வகையில் தான் அமையும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அந்த அடிப்டையில் நம்முடைய வாழ்வை அமைத்துக் கொள்வோமாக!