இஸ்லாமிய வரலாற்று நூல்கள் பற்றிய சிறு தொகுப்பு
\தபகாத்து இப்னு ஸஅத்\
இந்நூலின் ஆசிரியர் பெயர் முஹம்மத் பின் ஸஅத், இவர் பஸராவில் ஹிஜ்ரி 168ல் பிறந்து ஹிஜ்ரி 230ல் இறந்துள்ளார்கள்.
இவர்கள் பல நூல்களைத் தொகுத்துள்ளார்கள். அவற்றில் தபகாத்துல் குப்ரா என்ற நூல் பிரபலியமானதாகும். இந்த நூலே தபகாத்து இப்னு ஸஅத் என்று அழைக்கப்படுகிறது. இது சுமார் எட்டு பாகங்களாக வெளிவந்துள்ளது.
இந்த நூலின் முதல் பகுதி நபிகள் நாயகம் அவர்களுடைய வரலாறு தொடர்புடையது. இரண்டாம் பகுதி நபித்தோழர்கள் வரலாறு தொடர்புடையது. மூன்றாம் பகுதி நபித்தோழர்களுக்குப் பிறகு நூலாசிரியருடைய காலம் வரை வாழ்ந்த முக்கிய நபர்களின் வரலாறு தொடர்புடையது.
இந்நூலில் பல அறிஞர்களின் வரலாறுகள், அவர்களின் இயற்பெயர், பட்டபெயர், புனைப்பெயர், அவருடைய ஆசிரியர்கள், மாணவர்கள், பிறப்பு, இறப்பு, அவர்கள் வாழ்ந்த பகுதிகள், அவர்களின் குணங்கள் போன்ற பல முக்கிய செய்திகளைக் குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்த நூல் அறிவிப்பாளரின் தரத்தை எடைபோடும் நூலாகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த நூலில் நிறைகளும் குறைகளும் உண்டு. நபிகளார் தொடர்பாக வரும் செய்திகளை அறிவிப்பாளர் தரத்தை வைத்தே நாம் முடிவு செய்ய வேண்டும்.
//இப்னு ஹிஷாம்//
இந்நூல் ஆசிரியர் இயற்பெயர், அப்துல் மாலிக் பின் ஹிஷாம். இவர்கள் பஸராவில் பிறந்து ஹிஜ்ரீ 213 எகிப்தில் இறந்தார்கள். இவர்கள் பல நூல்களைத் தொகுத்துள்ளார்கள். இப்னு இஸ்ஹாக் என்ற அறிஞர் நபிகளார் அவர்களின் வரலாறு தொடர்பான ஒரு நூலைத் தொகுத்திருந்தார்கள். அந்த நூலை இவர்கள் ஒழுங்குபடுத்தினார்கள். அந்த நூலே சீரத்து இப்னு ஹிஷாம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த நூலில் ஆதாரப்பூர்வமான செய்திகளும், ஆதாரமற்ற செய்திகளும் இடம்பெற்றுள்ளன. பெரும்பாலான செய்திகளுக்கு அறிவிப்பாளர் வரிசைகள் இருக்காது. பல செய்திகளுக்கு ஆதாரங்களும் கிடையாது.
எனவே இந்த நூலில் இடம்பெற்றிருப்பதை மட்டும் வைத்து ஆதாரமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
\ அல்பிதாயா வந்நிஹாயா\
இந்நூல் ஆசிரியர் பெயர் இஸ்மாயீல் பின் உமர் பின் கஸீர்,. இப்னு கஸீர் என்று இவர் அழைக்கப்படுவார். இவர்கள் சிரியா நாட்டில் ஹிஜ்ரீ 701 பிறந்து ஹிஜ்ரீ 774 திமிஸ்கில் இறந்தார்கள். இவர்கள் மிகச் சிறந்த அறிஞராக அன்றைய காலத்தில் திகழ்ந்தார்கள்..
தப்ஸீர் இப்னு கஸீர் உட்பட பல சிறந்த நூல்களை எழுதியுள்ளார்கள். இவர்கள் எழுதி முக்கிய நூல்களில் அல்பிதாயா வந்நிஹாயா என்ற நூலும் அடக்கம்.
இந்நூல் 14 பாகங்களைக் கொண்டது. இதில் அர்ஷ், வானம், பூமி, முந்தைய நபிமார்கள் வரலாறு, நபி (ஸல்) அவர்கள் வரலாறு. நபி (ஸல்) அவர்களுக்கு பிறகு நடந்த குழப்பங்கள், போர்கள் என்று அவர்கள் காலம் வரை நடந்தவற்றைத் தொகுத்துள்ளார்கள். ஏராளமான பயனுள்ள செய்திகள் இதில் இடம்பெற்றுள்ளது. நபிகளார்கள் தொடர்பான செய்திகளுக்கு அறிவிப்பாளர் வரிசையும் கூறியுள்ளார்கள்.
அந்த அறிவிப்பாளர் தரமானவரா என்பதைக் கண்டறிந்து பின்பற்றுவது சிறந்தது.
\ஹயாத்துஸ் ஸஹாபா\
இந்நூல் ஆசிரியர் பெயர், முஹம்மத் யூசுப், இவர்கள் இந்தியாவில் பிறந்தவர்கள். தப்லீக் ஜமாஅத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக கருதப்படுபவர். இவர்கள் ஹிஜ்ரி 1335 ல் பிறந்தார்கள். ஹிஜ்ரி 1384ல் மரணமடைந்தார்கள்.
இவர்கள் இரண்டு முக்கியமான நூல்களை தொகுத்துள்ளார்கள்.
- அமானில் அப்ஹார்.
- ஹாயாத்துஸ் ஸஹாபா.
ஹாயாத்துஸ் ஸஹாபா என்ற நூலில் நபித்தோழர்கள் வாழ்வில் நடந்த சம்பவங்களை ஆதார நூல்களுடன் பதிவு செய்துள்ளார்கள்.
புகாரி,முஸ்லிம் உட்பட பல நபிமொழித் தொகுப்பு நூல்களிலிருந்தும் ஹதீஸ்களைப் பதிவு செய்துள்ளார்கள்.
பல பலவீனமான செய்திகளையும் பதிவு செய்துள்ளார்கள்.
நபித்தோழர்கள் வாழ்வில் நடந்த சம்பவங்கள் அறிந்து கொள்ள இ ந்த நூல் பேருதவியாக இருக்கும்.
———————
ஏகத்துவம்